தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தைக் கண்டித்து இலங்கை வாழ் தமிழர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரிய போராட்டத்தின் நூறாவது நாளான மே 22 அன்று, பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணியாக சென்றனர். அப்போது பொதுமக்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதில் போராட்டம் கலவரமாக மாறியது. இதையடுத்து காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் படுகொலை செய்யப்பட்டனர். காவல்துறையினர் அத்துமீறல், தமிழக அரசின் பொறுப்பற்ற தன்மையை நாடு முழுவதும் பலரும் கடுமையாக விமர்சித்தனர்.
இந்நிலையில், இலங்கை யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் என அழைக்கப்படும் தமிழர்கள், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தூய்மையான காற்று, நிலம், நீர் ஆகியவற்றைக் கேட்டு அறவழியில் போராடிய மக்களை காக்கைக் குருவி போல சுட்டுக்கொன்றது கடும் கண்டனத்திற்குரியது. ஒரே நாளில் 12 பேர் கொல்ல்ப்பட்டது உலகெங்கிலும் வாழும் தொப்புள் கொடி சொந்தங்களின் மத்தியில் கோபத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவத்திற்குக் காரணமான தமிழக அரசு பதவிவிலக வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். குறிப்பாக ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.