தமிழகத்தில் ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று நினைத்தால் திமுகவுக்கு ஒரு நிமிடம் போதும் என்றும், கொள்ளைப்புறமாக ஆட்சியை பிடிக்கக்கூடாது என்பதாலேயே ஆட்சியை விட்டு வைத்துள்ளதாகவும் அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பேருந்துக்கட்டண உயர்வைக் கண்டித்து திருவள்ளூரில் நடைபெற்ற கண்டனப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர்,
எம்.எல்.ஏக்களுக்கு மாதந்தோறும் படியளந்து ஆட்சியை முதல்வர் தக்கவைத்துவருகிறார், ஒரு வாரத்தில் தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் வழக்கில் தீர்ப்பு வெளியாகும்.
திமுக ஆட்சியின் போது அப்போதைய போக்குவரத்துத்துறை அமைச்சர் பேருந்துக் கட்டணத்தை உயர்த்தலாம் என கருத்து தெரிவித்ததார், ஆனால் அதனை முதலமைச்சராக இருந்த கலைஞர் ஏற்க மறுத்து ஏழை எளியோரின் நலனில் அக்கறை செலுத்தினார்.
நிர்வாகத் திறமையில்லாத காரணத்தினால்தான், எடப்பாடி அரசு மக்கள் நலனில் அக்கரை இல்லாமல் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. கொள்ளை அடிப்பதிலேயே குறியாக உள்ள எடப்பாடி அரசு, இரண்டாயிரம் பேருந்துகள் வாங்கத் திட்டமிட்டுள்ளது. அதில் பல கோடி ஊழல் செய்யத் திட்டமிட்டுள்ளனர். அப்படி நடந்தால், நீதிமன்றம் சென்று வழக்குத் தொடர்வோம்.
குறுக்குவழியில் சென்று கொள்ளைப்புறமாக ஆட்சியைப் பிடிக்க தி.மு.க என்றும் நினைத்ததில்லை. அப்படி நினைத்திருந்தால், ஒரு நிமிடத்தில் ஆட்சியைப் பிடித்திருப்போம். கட்டண உயர்வை அதிகப்படுத்தாமல் நிர்வாகத்தை நடத்துவது என்பது குறித்த ஆய்வறிக்கையை நேற்று எடப்பாடி பழனிசாமியிடம் கொடுத்துவிட்டு வந்திருக்கிறேன். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.