Skip to main content

தியேட்டர் ஓனர்கள் கவனத்திற்கு..! - ஜீப்ரா விமர்சனம்

Published on 22/11/2024 | Edited on 22/11/2024
Zebra movie revi

சமீபத்தில் வெளியான பெரிய ஹீரோக்களின் படங்கள் எதிர்பார்த்த அளவு சரியாக வரவேற்பை பெறவில்லை. அதற்கு காரணம் தியேட்டரில் யூடியூபர்கள் சிலர் முதல் நாள் முதல் காட்சியில் போடும் விமர்சன வீடியோக்களே காரணம் என சமீபத்தில் பிரபல டிஸ்ட்ரிபியூட்டர் திருப்பூர் சுப்ரமணியம் குற்றம் சாட்டியிருந்தார். இதைத் தொடர்ந்து வெளிவந்த அறிக்கையில் முதல் ஏழு நாட்களுக்கு விமர்சனம் செய்வது தவிர்க்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர். ஒரு படம் வெற்றி, தோல்வி என இரு வெவ்வேறு கட்டங்களை அடைவது என்பது அதன் கன்டன்ட்களை பொறுத்து அமைகிறது. பெரிய மாஸ் ஹீரோக்கள் நடித்தால் மட்டும் போதாது அதில் கதையும் திரைக்கதையும் சரியாக இருக்கும் பட்சத்தில் அந்த படம் யார் நடித்திருந்தாலும் மிக சிறப்பான வரவேற்பை பெற்று வெற்றி பெறும். ஏதோ முகம் தெரியாத, அங்கீகரிக்கப்படாத செல்போன் விமர்சகர்கள் செய்யும் விமர்சனங்களால் மட்டுமே படங்கள் ஓடுவதில்லை என குற்றம் சாட்டுவது எந்த வகையில் நியாயம்?

இதற்கெல்லாம் தற்பொழுது பதில் சொல்லும் வகையில் ஒரு கன்டென்ட் என்பது படத்திற்கு எந்த அளவு முக்கியம் அது சிறப்பாக அமையும் பட்சத்தில் அந்த படம் எந்த அளவு வரவேற்பை பெறும் என்ற உண்மையை உரக்க சொல்லும் விதத்தில் வெளியாகி இருக்கிறது இந்த பான் இந்தியா ஜீப்ரா திரைப்படம். தெலுங்கில் தயாரிக்கப்பட்டு பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி இருக்கும் இந்த ஜீப்ரா திரைப்படம் பெரிய ஹீரோ வில்லன்கள் நடிகர்களை தாண்டி கன்டன்ட்டை மட்டுமே நம்பி கோதாவில் குதித்து இருக்கிறது. அப்படி குதித்திருக்கும் இத்திரைப்படம் எந்த அளவு வரவேற்பை பெற்றிருக்கிறது என்பதை பார்ப்போம்....!

Zebra movie revi

பிரபல வங்கியில் ரிலேஷன்ஷிப் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார் நாயகன் சத்யதேவ். அவரின் நீண்ட நாள் காதலியான பிரியா பவானி சங்கர் இதே பேங்கிங் பணியை வேறு ஒரு வங்கியில் வேலை செய்து வருகிறார். இவர் ஒரு கஸ்டமருக்கு நான்கு லட்ச ரூபாயை அனுப்புவதற்கு பதில் வேறு ஒருவருக்கு தவறுதலாக நம்பர் மாற்றி செலுத்தியதால் அந்த பணம் அவருக்கு சென்று விடுகிறது. இதனால் பெரிய சிக்கலில் மாட்டிக் கொள்ளும் நாயகியை மற்றொரு வங்கியில் வேலை செய்யும் நாயகன் சத்யதேவ் தனது மூளையை பயன்படுத்தி சில பல தகிடு திட்டங்கள் போட்டு பணத்தை மீட்டு கொடுத்து விடுகிறார். இந்த சிக்கலில் இருந்து தப்பித்த நாயகன் சத்யதேவ், தான் போட்ட தகடு திட்டத்தால் வேறு ஒரு பெரிய பண பிரச்சனை சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். வில்லன் தாலி தனஞ்செயாவின் மிகப்பெரிய கோடிக்கணக்கான பணம் ஒன்று மாறி மாறி வேறு வேறு அக்கவுண்டுகளுக்கு நாயகன் பெயரில் பணப்பரிமாற்றம் நடந்து விடுகிறது. அந்த பணத்தை நான்கு நாட்களில் மீட்டுக் கொடுக்க வேண்டும் என வில்லன் ஹீரோவுக்கு கெடு வைக்கிறார். மாத சம்பளம் வாங்கும் நாயகன் அவ்ளோ பெரிய தொகையை வில்லனுக்கு திருப்பி கொடுத்தாரா? இல்லையா? வில்லனுக்கும் நாயகனுக்குமான இந்த பண ரேஸில் யார் ஜெயித்தார்கள்? இதுவே இப்படத்தின் மீதி கதை. 

இதுவரை மக்களுக்கு பரிச்சயம் இல்லாத ஒரு கதை. குறிப்பாக வங்கிகளில் பண பரிமாற்றம் குறித்த செயல்பாடுகள் எப்படி இருக்கும், அதை செய்யும் கணக்கர்களின் வேலை என்ன, மேலாளர்கள் நினைத்தால் என்னவெல்லாம் செய்ய முடியும், வங்கிகளின் அட்மினிஸ்ட்ரேஷன் விஷயங்கள் என்ன, அது எப்படி இயங்குகிறது போன்ற விஷயங்களை மிகத் துல்லியமாக ஆராய்ந்து அதை சரியான முறையில் பயன்படுத்தி அதற்கு ஏற்றார் போல் கதையும் திரைகதையும் ஆழமாக அமைத்து மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றி படமாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக். சினிமாவுக்கு வருவதற்கு முன் வங்கியில் பணி புரிந்திருக்கும் இவர் வங்கி எப்படி இயங்கும் என்று நன்றாக அறிந்து வைத்திருப்பதால் அந்த அனுபவத்தை வைத்துக் கொண்டு மிக மிகப் பிரமாதமாக அதை திரைக்கதைக்குள் உட்பகுத்தி சிறப்பான ஒரு மாஸ் ஹிட் படத்தை கொடுத்திருக்கிறார். மகளிர் மட்டும், வி ஒன் மர்டர் கேஸ் ஆகிய படங்களில் நாயகனாக நடித்து பின் குயின் படம் மூலம் இயக்குநராக அடியெடுத்து வைத்த ஈஸ்வர் கார்த்திக் போதுமான அளவு தனக்கு வரவேற்பு கிடைக்காததை அடுத்து அதை எப்படியாவது பெற்று விட வேண்டும் என்ற முனைப்போடு இப்படத்தை கொடுத்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறார்.

Zebra movie review

படம் ஆரம்பித்து ஒரு வங்கி எப்படி இயங்குகிறது அதில் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பது போல் தொடங்கி போகப் போக வித்தியாசமாகவும் ஜெட் வேகத்திலும் திரைக்கதை பயணித்து எந்த ஒரு இடத்திலும் தொய்வில்லாமல் இறுதியில் நிறைவாக படம் முடிகிறது. அதேசமயம் எந்தெந்த இடங்களில் மாஸ் எலிமெண்ட்ஸ் தேவையோ, எந்தெந்த இடங்களில் கமர்சியல் எலிமெண்ட்ஸ் தேவையோ அதையெல்லாம் சரியான இடத்தில் கணக்கச்சிதமாக அமைத்து ஒரு மிகப்பெரிய மாஸ் நடிகர்கள் நடித்தால் அந்த படம் எந்த அளவு வரவேற்பை பெறுமோ அதே அளவு வரவேற்பை இந்த வளர்ந்து வரும் தெலுங்கு மற்றும் கன்னட நடிகர்களை வைத்துக்கொண்டு மிகப்பிரமாண்டமாகவும், நேர்த்தியாகவும் ரசிக்கும்படி படத்தைக் கொடுத்து இந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் பட வரிசையில் இவரும் ஒரு சிறப்பான பான் இந்தியா படம் கொடுத்து இணைந்திருக்கிறார். படத்தில் ஆங்காங்கே சின்ன சின்ன லாஜிக் மிஸ்டேக்குகள் இருந்தாலும் அவை படம் நிகழ்த்தும் மேஜிக் ஆல் மறக்கடிக்கப்பட்டு ரசிகர்களை படத்தோடு ஒன்ற வைத்து படத்தையும் சிறப்பாக கரை சேர்த்திருக்கிறது. 

படத்தில் நாயகன் சத்யதேவ் ஒரு மிகப்பெரிய புத்திசாலியான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். எந்தெந்த காட்சிகளுக்கு எவ்வளவு நடிப்பு தேவையோ அதை சிறப்பாக கொடுத்து சட்டுல் ஆன நடிப்பை அழகாக வெளிப்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார். படத்திற்கு வில்லன் என்று சொல்வதை விட இன்னொரு நாயகன் என்று சொல்லலாம் அந்த அளவு நாயகனுக்கு மிக ஈகுவல் என்பதை தாண்டி கிட்டத்தட்ட நாயகனாகவே இந்த படத்திற்கு மாறி இருக்கிறார் கன்னட நடிகர் தாலி தனஞ்செயா. இவரின் வெறித்தனமான தெறிக்கவிடும் ஸ்கிரீன் பிரசன்ஸ் படத்தை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்று இருக்கிறது. இவருக்கும் சத்தியதேவுக்கும் ஆன  கேட் அன் மவுஸ் கேம் மிகச் சிறப்பாக அமைந்து படத்தையும் வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறது. வழக்கமான நாயகியாக அறிமுகமாகி போக போக கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் மிக முக்கியமான திருப்புமுனையாகவும் மாறி இருக்கிறார் நடிகை பிரியா பவானி சங்கர். இந்த கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் என்ன தேவையோ அதை சிறப்பாக செய்து முக்கியமான கதாநாயகியாக திகழ்ந்திருக்கிறார்.

Zebra movie review

காமெடிக்கு மிகச் சிறப்பாக கை கொடுத்திருக்கிறார் நடிகர் சத்யா அக்காலா. இவர் வரும் காட்சிகள் எல்லாம் தியேட்டரில் கைதட்டல்களாலும் விசில்களாலும் அதிர்கிறது. சின்ன சின்ன விஷயத்தை கூட மிக சிறப்பாக செய்து காமெடிக்கு நான் தான் கேரண்டி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார். சின்ன கதாபாத்திரம் மாதிரி வந்தாலும் கடைசியில் வந்து பட்டையை கிளப்புகிறார் நடிகர் சத்யராஜ். வழக்கம் போல் இவரது எதார்த்தமான நடிப்பு மிக கனகச்சிதமாக அமைந்து படத்தையும் தூக்கி நிறுத்த உதவி இருக்கிறது. மற்றொரு வில்லனாக நடித்திருக்கும் சுனில் தனக்கு என்ன வருமோ அதையே இந்த படத்திலும் மிகச் சிறப்பாக கொடுத்து படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறார். இவரது காமெடி கலந்த எரிச்சல் ஊட்டும் வில்லன் கதாபாத்திரம் மிகச் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு முத்தாய்ப்பாக இவரின் நடிப்பும் சிறப்பாக அமைந்திருக்கிறது. மற்றபடி உடனடித்து அனைத்து நடிகர்களும் அவரவர் வேலையை மிக சிறப்பாக செய்து படத்தையும் தாங்கி பிடித்து இருக்கின்றனர். 

இசையமைப்பாளர் ரவி பஸ்ருர் இசையில் பாடல்களை காட்டிலும் பின்னணி இசை மிக பிரம்மாண்டமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக கேஜிஎப் படத்தில் நாம் எந்த அளவு ஒரு இசை கோர்வையை உணர்ந்தோமோ அதே அளவான ஒரு இசை கோர்வையை இந்த படத்திலும் கொடுத்து பார்ப்பவர்களுக்கு கூஸ் பம்ப்ஸ் மொமென்ட்களை அள்ளித் தெளித்து இருக்கிறார். படத்திற்கு மிகப்பெரிய பக்கபலமாக அமைந்திருக்கிறது இவரின் பின்னணி இசை. சத்யா பொன்மார் ஒளிப்பதிவில் காட்சிகள் மிக மிக நேர்த்தியாகவும் அதே சமயம் மிக மிக பிரம்மாண்டமாகவும் அமைந்து படத்தை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்று இருக்கிறது. கிட்டத்தட்ட இவரே படத்திற்கு இன்னொரு நாயகனாகவும் அமைந்திருக்கிறார். 

Zebra movie review

தெலுங்கு தவிர்த்து மற்ற மொழிகளில் பெரிதாக புரமோஷன் இல்லை, பெரிய பில்டப் பேட்டிகள் இல்லை, தேவையில்லாத பப்ளிக் ஸ்டண்டுகள் எதுவுமே இல்லையென்றாலும் கதையையும் கன்டன்ட்டையும் மட்டுமே நம்பி பன்மொழிகளில் வெளியாகி இருக்கும் இந்த திரைப்படம் பெரிய நடிகர்கள் பெரிய செட்டப்புகள் இருந்தால் மட்டும் போதாது கதையும் திரைக்கதையும் தான் முக்கியம் என்பதை மற்றொரு முறை நிரூபித்து மிகப்பெரிய பிளாக் பஸ்டர் வெற்றியை கொடுத்திருக்கிறது. ஒரு படம் எந்த பில்டப்புகளும் இன்றி கதையும் கண்டெண்டும் மிகவும் ஸ்ட்ராங்காக அமைந்து சிறப்பாக அமையும் பட்சத்தில் எந்தவித அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாத விமர்சகர்களாலும் ஒன்றும் செய்ய முடியாது என்பதை இந்த திரைப்படம் மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது.

அதே சமயம் திட்டமிட்டு பரப்பப்படும் போலி விமர்சனங்களை ஒருபுறம் கண்டிப்பது முக்கியம் என்றாலும் கதையும் கண்டன்டும் மிக மிக சிறப்பாக அமையும் பட்சத்தில் அவையெல்லாம் அந்த திரைப்படத்தை ஒன்றுமே செய்ய முடியாது என்பதை இத்திரைப்படம் நிரூபித்து இருக்கிறது. முதல் ஏழு நாட்கள் விமர்சனம் செய்யக்கூடாது என்ற தேவையில்லாத விஷயங்களை எல்லாம் விட்டுவிட்டு கதைக்கும், கதாபாத்திரத்திற்கும், திரைக்கதைக்கும் முக்கியத்துவம் கொடுத்து படத்தை எடுத்தாலே தேவை இல்லாத மற்ற விஷயங்கள் எதுவும் அந்தப் படத்தை தொந்தரவு செய்யாது என்பதை தியேட்டர் ஓனர்கள் இத்திரைப்படம் மூலம் புரிந்து கொள்ள வேண்டும். அதே போல் விமர்சகர்கள் மட்டுமா படம் சரியில்லை என்று சொல்கிறார்கள்? மக்களும் தானே! 

இதே போல் இந்த மாதிரியான தரமான கன்டென்ட் இருக்கும் படங்களை போதுமான திரையரங்குகளிலும் ரிலீஸ் செய்து அவர்கள் லாபம் பார்த்துக் கொள்ளலாம். (இத்திரைப்படம் போதுமான திரையரங்குகளில் வெளியாகவில்லை) மாறாக பெரிய ஹீரோ படங்கள் பெரிய கம்பெனி படங்கள் என்ற மிகப் பெரிய மாஃபியாக்களின் வலையில் சிக்கிக் கொண்டு இந்த மாதிரியான படங்களை விட்டு விடுவது என்பது அவர்களுக்கு அவர்களே வைத்துக் கொள்ளும் சூனியம் போல் அமைந்துவிடுகிறது. பெரிய படங்களை தேவைப்படும் நேரத்தில் மட்டும் வைத்துக்கொண்டு மற்ற நேரத்தில் இந்த மாதிரியான கன்டன்ட் நிறைந்த திரைப்படங்களை கையில் எடுக்கும் பட்சத்தில் தியேட்டர் ஓனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் நல்ல லாபகரமான விஷயங்கள் கையில் வந்து சேரும். 


ஜீப்ரா - தெறிக்கவிட்டுள்ளது!

சார்ந்த செய்திகள்