Skip to main content

தி.மு.க.வினர் - த.வெ.க.வினர் இடையே மோதல்!

Published on 24/11/2024 | Edited on 24/11/2024
incident between DMK and Tvk

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி வாக்காளர் பட்டியல் சிறப்புச் சுருக்க முறை திருத்தம் தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக வார இறுதி நாட்களில் நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு சுருக்க முறைத் திருத்தத்தின் போது, வாக்காளர்கள் தங்கள் பெயரைச் சேர்ப்பதற்கும், வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கும் வசதியாக இந்தியத் தேர்தல் ஆணையத்தால் வாக்குச்சாவடி அமைவிடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என 2 நாட்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், இடமாற்றம், ஆதார் எண் இணைப்பதற்காக நடைபெற்ற சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. அதன் தொடர்ச்சியாக இன்றும் (24.11.2024)  வாக்காளர் பட்டியல் சிறப்புச் சுருக்க முறை திருத்த முகாம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சென்னை அயோத்தி குப்பம் லேடி வெலிங்டன் பள்ளி பள்ளி எதிர்புறம் உள்ள இடத்தில் வாக்காளர் முகாம் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் அப்பகுதியைச் சேர்ந்த வாக்காளர்கள் பலரும் வாக்காளர் பட்டியலில் பெயர்களைத் திருத்தம் செய்தல், சேர்த்தல், மற்றும் நீக்கல் போன்றவற்றை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தினருக்கும், திமுகவினருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் இந்த வாக்குவாதம் முற்றிக் கைகலப்பாக மாறி மோதலில் முடிந்தது. இது குறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 50க்கும் மேற்பட்ட போலீசார் இரு தரப்பினரிடமும் சமாதானப்படுத்தினர். மேலும் இரு தரப்பினரையும் அங்கிருந்து கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். வாக்காளர் திருத்த முகாம் நடைபெற்ற இடத்தில் தி.மு.க.வினருக்கும் த.வெ.க.வினருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து மெரினா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்