Skip to main content

அரசியலமைப்பு சட்டத்தின் 75வது ஆண்டு; முதல்வர் முக்கிய உத்தரவு!

Published on 24/11/2024 | Edited on 24/11/2024
CM important order 75th anniversary of the Constitution 

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75ஆம் ஆண்டுக்கான நிகழ்ச்சிகள் அரசு அலுவலகங்கள், அரசு சார்ந்த மற்றும் தன்னாட்சி நிறுவனங்கள் நடத்தப்பட வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரிகளில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும், பல்வேறு போட்டிகளை நடத்திடவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “மக்களாட்சித் தத்துவத்தின் மாண்பினை உள்ளடக்கி இந்தியத் திருநாட்டினை வளமான பாதையில் முன்னெடுத்துச் செல்லும் ஓர் உன்னத உருவாக்கம், அண்ணல் அம்பேத்கர் வடிவமைத்துத் தந்த நமது அரசியலமைப்புச் சட்டமாகும். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 75வது ஆண்டினை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் நாளை மறுநாள் (26.11.2024) காலை 11 மணிக்குத் தலைமைச் செயலகத்திலுள்ள அனைத்துத் துறைகளிலும், உயர்நீதிமன்றம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்துத் துறை தலைமை அலுவலகங்களிலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்க வேண்டும்.

அதே போன்று அனைத்து சார் நிலை அரசு அலுவலகங்கள், மாநில அரசின் அனைத்து அலுவலகங்கள், தன்னாட்சி அதிகார அமைப்புகள், நிறுவனங்கள், தன்னாட்சி அரசு நிறுவனங்கள், அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். எனவே அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் மற்றும் அரசியலமைப்பு நெறிமுறைகள் பற்றிய பேச்சுப் போட்டிகள், கருத்தரங்குகள், வினாடி வினா நிகழ்ச்சிகளை நடத்தவும் அரசு ஏற்பாடு செய்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்