டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் இருந்தார். இதனைத் தொடர்ந்து, ஜூன் 26ஆம் தேதி இந்த முறைகேடு தொடர்பாக விசாரிப்பதற்காக அரவிந்த் கெஜ்ரிவாலை சி.பி.ஐ கைது செய்தது. இதனிடையே, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அமலாக்கத்துறை தன்னை கைது செய்தது தவறு எனக் குறிப்பிட்டு டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த வழக்கில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இருப்பினும். சி.பி.ஐ கைது செய்ததன் காரணமாக அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையிலேயே இருந்து வந்தார்.
அதனைத் தொடர்ந்து, சி.பி.ஐ கைது செய்த வழக்கில் கெஜ்ரிவால் ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருந்தது. பல்வேறு நிபந்தனைகள் விதித்து உச்சநீதிமன்றம், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியதன் பேரில், கடந்த 13ஆம் தேதி திகார் சிறையில் இருந்து கெஜ்ரிவால் வெளியே வந்தார். இதையடுத்து ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பேசிய கெஜ்ரிவால் இரண்டு நாட்களில் தன்னுடைய முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாகவும், நவம்பர் மாதம் நடைபெறும் மஹாராஷ்டிரா தேர்தலுடன் டெல்லி தேர்தலும் நடக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த திடீர் அறிவிப்பு, ஆம் ஆத்மி கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதே சமயம், அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்யப்படவுள்ளதாகக் கூறப்படும் நிலையில், டெல்லியின் அடுத்த முதல்வர் யார்? என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும் ஏற்பட்டது.
இந்த நிலையில், டெல்லியின் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டில் இன்று (17-09-24) ஆம் ஆத்மி கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் கலந்துகொண்ட இந்த ஆலோசனைக் கூட்டத்தில், டெல்லியில் நீர்வளத்துறை உள்பட 14 துறைகளை கவனித்து வரும் அதிஷியை டெல்லியின் புதிய முதல்வராக்க அரவிந்த் கெஜ்ரிவால் முன்மொழிந்திருக்கிறார். அதன் பேரில், ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் அதிஷி டெல்லி புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும், ஆம் ஆத்மி சட்டமன்றக் குழுத் தலைவராகவும் அதிஷி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். டெல்லி சட்டப்பேரவை கூட்டத்தொடர் செப்டம்பர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்குப்பின் மாநில அரசை வழிநடத்தியதில் அமைச்சர் அதிஷி முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.