மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கடந்த 20ஆம் தேதி (20.11.2024) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில், ஆளும் மகா யுதி கூட்டணி அரசான பா.ஜ.க - சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே பிரிவு), அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி மீண்டும் கூட்டணியோடு இந்த தேர்தலை சந்தித்தது. அதே போல், இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி, உத்தவ் தாக்கரேவின் சிவசேனா ஆகிய மகா விகாஸ் அகாடி கூட்டணி கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டது.
மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க 145 இடங்கள் தேவை என்ற பட்சத்தில், நேற்று (23-11-24) வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், பா.ஜ.க தலைமையிலான மகாயுதி கூட்டணி கட்சிகள் 231 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி 46 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக, பா.ஜ.க 132 இடங்களிலும், ஏக்நாத் ஷிண்டேவின் சிவ சேனா 57 இடங்களிலும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. அதே போல், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா 20 இடங்களிலும், காங்கிரஸ் 16 இடங்களிலும், சரத் பவாரின் சரத்சந்திர பவார் தேசியவாத காங்கிரஸ் 10 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான அதிக இடங்களை கைப்பற்றியுள்ள பா.ஜ.க தலைமையிலான மகா யுதி கூட்டணி மகாராஷ்டிராவில் ஆட்சியைத் தக்க வைத்துள்ளது.
இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநில 60 ஆண்டுகள் வரலாற்றில் முதல் முறையாக எதிர்க்கட்சி தலைவர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மொத்த இடங்களில் 10 சதவீத இடங்களில் வெற்றி பெறும் கட்சிக்கு எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பு கிடைக்கும். ஆனால், தற்போது வெளியான தேர்தல் முடிவில் எதிர்க்கட்சி வரிசையில் உள்ள எந்த கட்சியும் 10 சதவீத இடங்கள் அதாவது 28 தொகுதிகளில் வெல்லவில்லை. இதனால், அங்கு எதிர்க்கட்சி தலைவர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.