
புதிய கட்சி தொடங்கியுள்ள கமலுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் வாழ்த்து தெரிவித்தார்.
ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை இன்று கமல்ஹாசன் தொடங்கியுள்ளார். இதைதொடர்ந்து, மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கட்சிக் கொடியை ஏற்றிவைத்த நடிகர் கமல், ரசிகர் மத்தியில் தனது கட்சியின் பெயரையும் அறிவித்தார்.
அரசியல் கட்சியின் பெயர் ’மக்கள் நீதி மய்யம்’ என ரசிகர்கள் மத்தியில் அவர் அறிவித்தார். இந்த பொதுக்கூட்டத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் சட்ட அமைச்சருமான சோம்நாத் பாரதி மற்றும் விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர்.

இதைதொடர்ந்து, மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்டவாரியான நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர், அகில இந்திய பொறுப்பாளராக தங்கவேலு நியமனம் செய்யப்பட்டார். தொடர்ந்து, உயர்மட்டக் குழு அறிவிக்கப்பட்டது. இதில், கு.ஞானசம்பந்தன், சுகா, தங்கவேலு, பாரதி கிருஷ்ணகுமார், ஸ்ரீப்ரியா ராஜ்குமார், கமீலா நாசர், சவரிராஜன், ராஜசேகர், மூர்த்தி, மௌரியா, ராஜநாராயணன், ஆர்.ஆர்.சிவராம் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டனர்.
தொடர்ந்து கேரள முதல்வர் பினராயி விஜயன் வீடியோ மூலம் கமலுக்கு வாழ்த்து தெரிவித்தார். வணக்கம் என்று தமிழில் கூறிய அவர், கமல்ஹாசனுக்கு வாழ்த்துகளை தெரிவிப்பதை கவுரமாக கருதுகிறேன். ஜனநாயகத்தை கமல் காப்பார். சமூக, பொருளாதார கொள்கைகளில் உறுதி கொண்டவர் கமல்ஹாசன் என அவர் வாழ்த்தினார்.