நடிகர் கமல்ஹாசன் வருகிற 21-ந் தேதி தனது புதிய கட்சியை அதிகாரப்பூர்வமாக தொடங்கி, அன்றைய தினமே அவர் தனது கட்சியின் கொடியையும் அறிமுகம் செய்யவிருக்கிறார். இதை முன்னிட்டு முக்கிய தலைவர்களை கமல்ஹாசன் சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார். நேற்று கம்யூனிஸ்ட் கட்சி்யின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவை சந்தித்து வாழ்த்து பெற்றார். இன்று சினிமாவிலும் அரசியலிலும் போட்டியாளராக வந்திருக்கும் ரஜினிகாந்தை சந்தித்தார். ரஜினிகாந்த் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று இரவு 8.30 மணிக்கு மேல் சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கலைஞரை நடிகர் கமல்ஹாசன் சந்தித்தார். இச்சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், ’’அரசியலில் எல்லோருக்கும் ஒரு கனவு உள்ளது. எனக்கு ஒரு கனவு உள்ளது. நான் வருவது யாரையும் அசைக்கவோ, கலைக்கவோ அல்ல. மக்கள் சேவைக்காகவே வருகிறேன். எனது அரசியல் பயணம் குறித்து கலைஞரிடம் தெரிவித்தேன். அரசியல் பயணத்திற்காக கலைஞரிடம் வாழ்த்து பெறவே வந்தேன்.
கலைஞரின் அறிவுக்கூர்மை, தமிழ், மக்கள் மீது கொண்ட அக்கறையை அவரிடம் இருந்து கற்க எனக்கு விருப்பம்’’என்று தெரிவித்தார்.
திமுகவுடன் கூட்டணி அமைப்பீர்களா என்ற கேள்விக்கு, ‘’என்னுடைய கொள்கையை திமுக புரிந்து கொண்ட பின்னர் கூட்டணி குறித்து யோசிக்கலாம். திமுகவின் கொள்கை எல்லோருக்கும் தெரியும். என்னுடையை கொள்கை தெரிந்த பின்னர் அது திமுகவுக்கு ஒத்து வரும் என்று அவர்கள் புரிந்துகொண்டால் கூட்டணியை குறித்து யோசிக்கலாம்’’என்று தெரிவித்தார்.