


புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி வட்டத்தில் செங்கமேடு என்ற ஊருக்கு அருகில் உள்ள திருப்பக்கோயில் என்ற இடத்தில் திருமேனிநாதர் ஆலயம் என்ற பழமையான சிவன் கோயில் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. பல வருடங்களாக மராமத்து இல்லாமல் இருந்து தற்போது உளவாரப்பணிகள் நடந்து பொதுமக்கள் சென்றுவர ஏதுவாக உள்ளது
இக்கோயில் குறித்து தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பேராசிரியர் இ.இனியன் கூறும் போது, 'இக்கோயில் கருவறை முதல் அர்த்தமண்டபம் வரை கருங்கற்களால் பிற்காலச் சோழர் காலத்து கலை பாணியில் அமைக்கப்பட்டுள்ளதை காண முடிகிறது. முக மண்டபம் செம்பரான் கற்களால் கட்டப்பட்டுள்ளது. மேலும் கருவறையின் விமான பகுதி செங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. கருங்கல் கோயிலானது பாத வர்க்கத்தோடு காணப்படுகின்றது. பாத வர்க்கத்தின் மேலே முதல் இரண்டு நிலை விமானமாக செங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. மேலும் செங்கலானது பொதுவான அளவாக இல்லாமல், வர்க்க வேலைக்கு ஏற்ப கலைநயமாக வடிவமைக்கப்பட்டுள்ளது சிறப்பு அம்சமாகும்.
மேலும், கோயிலானது கருவறை, அர்த்தமண்டபம், முகமண்டபம், மகாமண்டபம் கொண்டு அமைந்துள்ளது. இவற்றில் கருவறையும், அர்த்தமண்டபமும் சமகாலத்தவையாகவும், முகமண்டபம் பிற்காலத்தில் செம்புரான் கற்களை கொண்டு கட்டப்பட்டுள்ளதை காண முடிகிறது. முக மண்டபத்தில் உள்ள தூண்களில் கலைநயம் மிக்க புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. கோவிலின் தெற்கு பகுதியில் கோஷ்டத்தில் கலைநயமிக்க தக்ஷிணாமூர்த்தி சிலையும், வடக்கு பக்கம் கோஷ்டத்தில் காலபைரவர் சிலையும் காணப்படுகின்றது. கோயிலின் வடக்கு பகுதியில் செம்புரான் கற்களால் கட்டப்பட்ட கட்டுமானமும், அதன் மேல் பகுதி சுண்ணாம்பு கற்களால் உருவான கட்டமைப்பாகவும் உள்ளது.
கோயிலின் முக மண்டபத்தில் உள்ள தூண்களில் அன்னப்பறவை, லிங்கம், மலர்கள், மீன், மயில், மரத்துடன் கூடிய லிங்கம் உள்ளிட்ட பல்வேறு புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. முகமண்டபத்தின் நுழைவாயிலில் உள்ள நிலைகளில் நந்தியின் மேல் சிவன் அமர்ந்துள்ளது போல் உள்ள புடைப்புச் சிற்பம் காணப்படுகிறது. கோயிலின் வடக்கு பகுதியில் செங்கல் சுவர் கட்டுமானம் சிதைந்த நிலையில் காணப்படுகிறது. ஆனால் கல்வெட்டுகள் ஏதும் காணப்படவில்லை. இக்கோயில் அமைந்துள்ள ஊருக்கு மிக அருகாமையில் திருவோணம் என்ற ஊரில் முதலாம் பராந்தகச் சோழன் காலத்து கல்வெட்டுடன் கூடிய திருமேனிநாதர் ஆலயம் என்ற சிவன் கோயில் ஒன்றும் அமைந்துள்ளது' என்றார்.