
தூத்துக்குடியில் தன் வீட்டு வாழை மரத்தில் இலையை வெட்டியதற்காக பக்கத்து வீட்டு முதியவர் ஒருவர் இளம்பெண்ணை அரிவாளால் வெட்ட முயன்ற காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தூத்துக்குடியில் குடியிருப்பு பகுதி ஒன்றில் காலை நேரத்தில் வாசலில் கோலமிட்டுக் கொண்டிருந்த பெண்ணே நோக்கி வந்த 91 வயது முதியவர் ஒருவர் திடிரென கையில் இருந்த அரிவாளால் அப்பெண்ணை பின்புறத்தில் வெட்ட முயன்றார். உடனடியாக சுதாரித்துக்கொண்ட அப்பெண் அலறி அடித்துக் கொண்டு ஓடினார். கூச்சலிட்டபடி ஓடியும் விடாமல் அந்த முதியவர் அப்பெண்ணை துரத்தி சென்றுள்ளார்.
இந்த சம்பவத்தில் அப்பெண்ணின் வீட்டிற்கு அருகிலேயே அந்த முதியவர் வீடு உள்ள நிலையில், தன் வீட்டின் வாழை மரத்தில் இலையை வெட்டியதால் ஆத்திரப்பட்டு முதியவர் அப்பெண்ணை கொலை வெறியில் தாக்க முயன்றது தெரிந்தது. அக்கமபக்கத்தினரால் மீட்கப்பட்ட அப்பெண் காரில் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இந்த மொத்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதேபோல் நேற்று கன்னியாகுமரியில் ஆல்டர் செய்து கொடுத்த பேண்ட் சரியாக இல்லை என டெய்லரை நபர் ஒருவர் துணி வெட்டும் கத்தியால் தாக்கி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. நாகர்கோவில் அடுத்துள்ள திட்டுவிளை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (65) இவர் பெண்களுக்கான பிரத்யேக தையல் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை தூத்துக்குடியைச் சேர்ந்த சந்திரமணி என்பவர் அக்கடையில் பேண்ட்டை ஆல்டர் செய்து தைப்பதற்காக துணியை கொடுத்துள்ளார். சந்திரமணி அதே பகுதியில் உள்ள ஹோட்டல் கடை ஒன்றில் சமையலராக வேலை பார்த்து வந்துள்ளார்.

டெய்லர் செல்வம் அரை மணி நேரத்திலேயே பேண்டை ஆல்டர் செய்து தைத்து சந்திரமணியிடம் கொடுத்துள்ளார். அப்போது தைத்தது சரியாக இல்லை என அதிருப்தி தெரிவித்த சந்திரமணி டெய்லர் செல்வத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு கடையிலிருந்து கத்திரிக்கோலை வைத்து டெய்லர் செல்வத்தை சந்திரமணி சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் டெய்லர் செல்வத்தின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.