
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் சில இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக கனமழை பொழிந்து வருகிறது. அந்த வகையில், இன்று காலை முதல் சென்னை உள்பட தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது. கடந்த 2 மணி நேரத்தில் மட்டும் சேலம் மாவட்டம் மேட்டூரில் அதிகபட்சமாக 11.45 செ.மீ மழை பதிவாகியிருந்தது. அதே போல், திருச்சியில் 10 செ.மீ, தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் 9 செ.மீ, கோவையில் 8 செ.மீ மழை பதிவாகியிருந்தது.
தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (19-05-25) ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வருவாய் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இதில், பருவமழை வருவதற்குள் எடுக்க வேண்டிய முன்னச்சரிக்கை பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் நீர் திறப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, “இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பாகவே இருக்கும். தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார் நிலையில் உள்ளது. பேரிடர் முகாம்கள் தயார் நிலையில் இருப்பதுடன், உணவு உள்ளிட்டவையும் போதுமான அளவு உள்ளதை உறுதி செய்ய வேண்டும். மாநில கட்டுபாட்டு மையம் 24 மணி நேரம் பயன்பாட்டில் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நிலச்சரிவை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.