Skip to main content

விருதுநகர் சேர்மனும் கவுன்சிலரும் சேர்ந்து செய்த தவறு; ஆதாரபூர்வமான குற்றச்சாட்டு! 

Published on 21/05/2025 | Edited on 21/05/2025

 

 mistake made by the Virudhunagar chairman and councilor together

“விருதுநகர் நகராட்சி திமுக சேர்மன் மாதவனும் 5-வது வார்டு கவுன்சிலர்  ஆஷாவும் தெரிந்தே தவறு செய்திருக்கிறார்கள்.விருதுநகர் நகராட்சி நகர்மன்ற அவசரக் கூட்டம் – வருகை புரிந்தோர் பதிவேட்டிலேயே, அவ்விருவரும் செய்த தவறு பளிச்சென்று பதிவாகியிருக்கிறது. நகர்மன்ற  உறுப்பினர்கள் அத்தனைபேருக்கும் தெரியும்விதமாகவே, இந்தத் தவறு  நடந்திருக்கிறது என்றால், கண்ணுக்குத் தெரியாமல் இந்த நகராட்சியில்  என்னென்ன தவறுகள் நடந்திருக்கும்?” என்று கேள்வி எழுப்பிய அந்நகராட்சியின் கவுன்சிலர் ஒருவர், அதற்கான ஆதாரத்தை நம்மிடம்  காட்டினார்.

 mistake made by the Virudhunagar chairman and councilor together

நகர்மன்ற உறுப்பினர்களின் வருகைப் பதிவேட்டில்,  5-வது வார்டு  கவுன்சிலர் ஆஷா,  அந்த அவசரக் கூட்டத்துக்கு ‘வருகை புரியவில்லை’  என்று முதலில் சிகப்பு மையால் எழுதப்பட்டுள்ளது. பிறகு, வருகை புரியவில்லை என்ற எழுத்துகளைக் கோடிட்டு அழித்துவிட்டு, அதற்குமேல்  எம்.ஆஷா என்று கையெழுத்திடப்பட்டுள்ளது. அதனை ஏற்பதுபோல்  பக்கத்திலேயே சேர்மன் மாதவனும் கையெழுத்திட்டிருக்கிறார். நகர்மன்றக்  கூட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டு,  இந்த விவகாரம் அப்படியே அமுங்கிப்போனது.

‘ஒரு நகர்மன்ற உறுப்பினர் தொடர்ச்சியாக மூன்று கூட்டங்களுக்கு  வராதபோது, அவர் கவுன்சில் உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட  வேண்டியவர் ஆகிறார்.  மூன்றுக்கும் மேற்பட்ட தொடர்ச்சியான  கூட்டங்களுக்கு நியாயமான காரணமின்றி வராத உறுப்பினரை  பதவியிலிருந்து நீக்கலாம்.’ என நகர்மன்ற கவுன்சிலர்களுக்கான நடத்தை  விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2023 மார்ச் 15 நக்கீரன் இதழில்  ‘திவாலான விருதுநகர் நகராட்சி! –  சேர்மன் மீது ஊழல் குற்றச்சாட்டு!’ என்னும் தலைப்பில் வெளியான செய்திக்  கட்டுரையிலேயே  ‘5-வது வார்டு கவுன்சிலருக்கு சேர்மனின் சப்போர்ட்  எப்போதும் உண்டு.’ எனக் குறிப்பிட்டிருந்தோம். மீண்டும் அதே கவுன்சிலர்  ஆஷாவுக்கு சேர்மன் மாதவன் வருகைப் பதிவேட்டில் திருத்தம் செய்து  கரிசனம் காட்டிய நிலையில், அவரைத் தொடர்புகொண்டோம்.

 mistake made by the Virudhunagar chairman and councilor together

“கவுன்சிலர் ஆஷாவுக்கு ஆபரேஷன் பண்ணிருக்கு. ரெண்டு மாசமாச்சு.  கனத்த உடம்புக்காரங்க. படியேறக்கூடாதுன்னு டாக்டர் சொல்லிருக்காரு.  மேல மாடிக்கு வரமுடியாதுன்னு என் சேம்பர்ல வச்சு கையெழுத்து  போட்டாங்க.” என்றவரிடம்  ‘நியாயமான மருத்துவ காரணம் இருக்கும்போது    எதற்காக வருகைப் பதிவேட்டில் அடித்தல் திருத்தல்?’ என்ற கேள்விக்கு  பதிலில்லை. ஆனாலும், தொடர்ந்து பேசிய அவர் “இதெல்லாம் ஒரு  மேட்டரே இல்ல. விருதுநகர் வளராததுக்கு காரணமே, யாரையும் எதையும் செய்யவிடமாட்டாங்க. நல்லதை தடுக்கிறதுக்கு ஒரு பெரிய கூட்டமே  இருக்கு. வளர்ச்சிக்கு யாரும் பாடுபடமாட்டாங்க.  பெட்டிஷன் போடுறது,  இந்தமாதிரி அவதூறு பரப்புறது எல்லாம் நடக்குது.  இந்த மூளையை  நகரோட வளர்ச்சிக்கு யாரும் பயன்படுத்த மாட்டேங்கிறாங்க. அதுமட்டும்  நடந்துட்டா, விருதுநகரே சொர்க்கபூமி ஆயிரும்.” என்று சலித்துக்கொண்டார். 

சார்ந்த செய்திகள்