
தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் வெப்பச்சலனம் காரணமாகக் கனமழை பொழிந்து வருகிறது. அந்த வகையில், சென்னை உள்படத் தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் கனமழை பொழிந்தது. இத்தகைய சூழலில் தான் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு இன்றும் (25.05.2025), நாளையும் (26.05.2025) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டடிருந்தது. கனமழை எச்சரிக்கை காரணமாக நீலகிரியில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தொட்டபெட்டா, பைன் பாரஸ்ட், படகு இல்லம் உள்ளிட்ட 7 சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் இன்று இரவு 7 மணி வரை 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வெளியான அறிவிப்பின்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல், மதுரை, திருப்பூர், விருதுநகர், புதுக்கோட்டை, வேலூர், தஞ்சை, உள்ளிட்ட 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை, தென்காசி, திண்டுக்கல், நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.