
நிர்மலா சீதாராமன் முதல் அமித் ஷா வரை இவரது விவாதங்கள் அனல் பறக்கும், நேரு முதல் வஃப் வாரியம் வரை இவரது வாதங்கள் அசரடிக்கும். ஆழமான பார்வை, அட்டகாசமான நகைச்சுவை நிறைந்த தீர்க்கமான பேச்சால் நாடாளுமன்றத்தின் உள்ளும் வெளியிலும் ரசிகர்களை கொண்ட, கேரளாவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸுடன் உரையாடினோம்.
தமிழக மக்கள் உங்களைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள். உங்கள் பின்னணி பற்றி கூறுங்கள்...
ஹா... ஹா... நான் சக்தி வாய்ந்த பின்னணியில் இருந்து வந்தவனல்ல. கேரளாவின் ஒரு சாதாரண கிராமத்தில் பிறந்து வளர்ந்து ஒரு சாதாரண கல்லூரியில் படித்தேன். அதன்பிறகு டெல்லிக்கு வந்து ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்.பில், பி.எச்.டி படித்தேன். பிறகு, ஒரு பத்திரிகையாளராக என் பணியை டெல்லியில் துவங்கினேன். அப்போதுதான் இந்திய அரசியல் உலகத்துக்குள் நுழைந்தேன். ஒரு ராஜ்யசபா உறுப்பினராக நான் மக்களின் இதயங்களைப் பேச முயற்சிக்கிறேன். கூட்டாட்சி, ஜனநாயகம், மதச்சார்பின்மை ஆகியவற்றுடன் தொடர்புடைய முக்கிய அம்சங்களையும் நாடாளுமன்ற விவாதங்களில் கொண்டு வர முயற்சிக்கிறேன்.
இந்திய நாடாளுமன்றத்துக்கும் உங்களுக்குமான உறவு தொடங்கியது எப்போது?
என்னுடைய 22 வயதில் ஒரு ரிப்போர்ட்டராக நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தேன். அப்போது பத்திரிகையாளர் மாடத்தில் அமர்ந்து பார்த்தவை இன்னும் நினைவில் உள்ளன. மது தண்டவதே, ஜார்ஜ் பெர்னாண்டஸ், அத்வானி, இந்திரஜித் குப்தா போன்ற உறுப்பினர்களும் சந்திரசேகர், VP சிங், ராஜீவ் காந்தி போன்ற பிரதமர்களும் என ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடந்த காலம் அது. புதிய உறுப்பினரின் கேள்விக்குக்கூட பிரதமர் பதிலளித்த காலம் அது. பத்திரிகைகள் சுதந்திரமாக இயங்கின. பத்திரிகை செய்திகள் நாடாளுமன்றத்தில் விவாதப் பொருளாகும். இப்போதெல்லாம் அப்படியல்ல. நான் இந்திய நாடாளுமன்றத்தை மூன்று கோணங்களில் பார்த்தவன். பத்திரிகையாளர் மாடத்திலிருந்தும், வெளியிலிருந்தும், பிறகு உள்ளிருந்தும் பார்த்திருக்கிறேன். இது இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் துரதிர்ஷ்டவசமான காலகட்டம்.
நாடாளுமன்றத்தில் நகைச்சுவை கலந்து ஆணித்தரமாக பேசும்போது கண்டிப்பாக அமைச்சர்களும் அரசும் அதை சீரியசாக எடுத்துக்கொள்வர். நீங்கள் பேசி முடித்த பிறகு வேறு எதிர்வினைகள், விளைவுகள் இருந்தது உண்டா?
நீங்கள் கேட்பது புரிகிறது. நான் யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது இல்லை. ஆனாலும் பலர் என் பேச்சை மனதில் வைத்துக்கொள்வது உண்டு. ஒரு முறை எதிர்க்கட்சியை சேர்ந்த முக்கியமான மூத்த தலைவர் ஒருவர் என்னிடம் "நீ பேசுவதெல்லாம் சரிதான், உண்மைதான். ஆனால் இவர்கள் ஆபத்தானவர்கள். கொஞ்சம் கவனமாகப் பேசு. உன் நன்மைக்குதான் சொல்கிறேன்" என்றார். நான் கம்யூனிஸ்ட்டாக வளர்ந்தவன், வாழ்பவன். எனக்கு அந்த பயமில்லை.
நீங்கள் உங்கள் மேற்படிப்புகளை டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டீர்கள். JNU எப்போதுமே ஆளும் கட்சிக்கு எப்போதும் கசப்பான இடமாக இருக்கிறதே?
இன்றைய அரசு பல்கலைக்கழகங்களை ஒழுங்குபடுத்துகிறோம் என்ற பெயரில் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியிருப்பது ஏன் என்பதை நாம் கவனிக்க வேண்டும். அங்குதான் எதிர்காலத்துக்கான அரசியல் விவாதங்கள், புரட்சிகர தத்துவங்கள் உருவாகின்றன, பரவுகின்றன. 90களின் தொடக்கத்தில் நாங்கள் அங்கு மாணவர்களாக இருந்தபோது உகாண்டா, லிபியா முதல் ஜம்மு காஷ்மீர் வரை உலகின் அத்தனை பிரச்சனைகளையும் விவாதிப்போம். வெளிநாடுகளில் இருந்து மிக முக்கியமான பேராசிரியர்கள் வந்து உரையாற்றுவார்கள். இன்றோ JNU-வில் ஓணம் கொண்டாடக்கூட அனுமதியில்லை, விடுதி உணவுப்பட்டியலில் பல மாற்றங்கள்... நியமிக்கப்படும் பேராசிரியர்கள் எல்லாம் குறிப்பிட்ட அரசியல் சார்புடையவர்களாக இருக்கிறார்கள். இதன் மூலம் மாணவர்கள் மனதில் தங்கள் அரசியலை விதைக்கலாம் என்று நினைக்கிறார்கள். நாடாளுமன்றத்தில் ஒரு அமைச்சர் என்னை 'ஜான் பிரிட்டாஸ் JNU-வை சேர்ந்தவர்' என ஏதோ குற்றம் சாட்டுவது போல கூறினார். இதுதான் இந்த அரசின் பார்வை. கல்வி நிலையங்களின் சுதந்திரம் இத்தகைய நிலையில் இருப்பது மிகுந்த ஆபத்தானது.
நீங்களும் சரி, தமிழகத்தில் திராவிட கட்சிகளும் சரி, பாஜக வந்தால் ஆபத்து என்று கூறிக்கொண்டே இருக்கிறீர்கள். பாஜக வந்தால் என்ன நடக்கும்?
முன்பெல்லாம் கேரள தேர்தல்களில் பணப்புழக்கம் மிகக்குறைவு. ஆனால் பாஜக கவனம் செலுத்த ஆரம்பித்தவுடன் கோடிக்கணக்கில் பணம் செலவிடப்படுகிறது. சமூக ஊடகங்கள் முழுக்க முழுக்க செயற்கையாக கருத்துகளை உருவாக்கப் பயன்படுத்தப்படுகின்றன. பாகல்காம் தாக்குதல் உள்பட பல விசயங்களும் வெறுப்பை பரப்பப் பயன்படுத்தப்படுகின்றன. ஊடகங்கள் முழுமையாக ஊடுறுவப்பட்டு இருக்கின்றன. 'மீடியா' என்பது 'மோடியா'வாகிவிட்டது. நக்கீரன் போன்ற வெகுசில பத்திரிகைகள், ஊடகங்கள்தான் உறுதியாக, தைரியமாக இருக்கிறீர்கள். தென்னிந்தியாவுக்கு தனி பண்பாடு, மொழி, வாழ்க்கை முறை இருக்கிறது. அவர்கள் வந்தால் அந்தத் தனித்தன்மைகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிடும்.
சமீபத்தில் விழிஞ்ஞம் துறைமுக விழாவில் ஒரே மேடையில் பிரதமர், கேரள முதல்வர், அதானி என அனைவரும் ஒன்றாகப் பங்கேற்றீர்கள். நீங்களும் அந்த மேடையில் இருந்தீர்கள்...
விழிஞ்ஞம் துறைமுக திட்டம் என்பது பல ஆண்டுகளாக இருந்தது. எங்களுக்கு முன் ஆட்சி செய்தவர்கள் கொண்டுவந்தது. அதில் பெரும்பாலான செலவு கேரள அரசு செய்தது. குறைந்த பங்கே அதானிக்கு உள்ளது. ஆனாலும் ஒப்பந்தப்படி அத்திட்டத்தை கைவிட்டால் பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும். ஒன்றிய அரசின் பங்கு ஒன்றுமில்லை. ஆனாலும் இந்த விழாவுக்கு பிரதமர் வந்து, அதை பயன்படுத்தி கேரளாவில் பாஜகவுக்கு ஒரு பிம்பத்தை உருவாக்க நினைத்தார்கள். கேரள மக்கள் அதையெல்லாம் நம்புபவர்கள் அல்ல.
தமிழகத்தில் திராவிட அரசியல் வலுவாக இருக்கிறது. கேரளத்தில் திராவிடத்தை ஏற்றுக்கொள்கிறீர்களா?
'திராவிடம்' என்ற வார்த்தையை நாங்கள் பெருமளவில் பயன்படுத்தவில்லை. ஆனால் தென்னிந்தியாவுக்கு தனித்தன்மைகளை உணர்ந்திருக்கிறோம். அந்த அடையாளத்தை பேண வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கிறோம். தமிழ்நாடும் கேரளாவும் சிந்திப்பதில் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. நாங்கள் சகோதரத்துவத்தை உணர்கிறோம். அரசியலில் பல முன்னுதாரணங்களை தமிழ்நாட்டிலிருந்து நாங்கள் பெறுகிறோம்.
மேற்கு வங்கம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் ஆட்சியை இழந்துவிட்டது. இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலை, நம்பிக்கை தற்போது என்னவாக இருக்கிறது?
ஒத்துக்கொள்கிறேன்... மாநிலங்களில் ஆட்சிப் பொறுப்பை இழந்துவிட்டோம். நாடாளுமன்றத்தில் உறுப்பினர் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. ஆனால் இடது சாரி அரசியலுக்கான தேவையும் சமூகத்தில் எங்கள் செயல்பாடும் எப்போதும் தொடரும். பதவியில் இருக்கிறோமோ இல்லையோ... விவசாயிகள் போராட்டம், தொழிற்சங்கம், பழங்குடியினர் நலன் என நாங்கள் தொடர்ந்து உறுதியாக, உற்சாகமாக இயங்கி வருகிறோம். இன்றைய இந்தியாவின் ஆபத்தான வலது சாரி அரசியலை எதிர்க்கக் கூடிய சித்தாந்தப் பின்புலம் இடது சாரிகளிடம்தான் இருக்கிறது. காங்கிரஸ் கட்சி கூட அதை எங்களிடம்தான் பெற வேண்டும். இன்று ஆட்சியில் இருக்கும் பாஜக வெறும் இரண்டு உறுப்பினர்களுடன் நாடாளுமன்றத்தில் இருந்ததை நான் பார்த்திருக்கிறேன். அதுபோல் காலம் மாறும்.
தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நட்பு இருக்கிறதா?
என்ன, அப்படி கேட்டுவிட்டீர்கள்? நாங்கள் எல்லாம் ஒரு கட்சி போலத்தான் அங்கு இயங்குவோம். வைகோ பக்கத்தில்தான் என் இடம். இருவரும் நிறைய விவாதிப்போம். அவர் நெருப்பு போல செயல்படுபவர், பேசுபவர். எத்தனை வயதானாலும் அவர் நெருப்புதான். துரை வைகோவிடம் விளையாட்டாக சொல்வேன் 'உங்க அப்பாதான் இன்னும் இளமை'னு. என்னை அவர் வீட்டுக்கு அழைத்து அவர் மனைவி சமைக்கும் திண்டுக்கல் பிரியாணி விருந்து வைப்பதாகக் கூறியிருக்கிறார். திருச்சி சிவா நல்ல நண்பர். கனிமொழி NVN சோமுவின் இடமும் எனக்கு அருகில்தான். அனைவருமே நல்ல நண்பர்கள்.
நகைச்சுவை கலந்த உங்கள் வரிகள் பிரபலம். சில தலைவர்கள் குறித்த உங்கள் பார்வையை ஒரு வரியில் சொல்லுங்கள்...
வசந்த்... என்னை மாட்டிவிட பார்க்கிறீர்கள். சரி, சொல்லுங்க.
மோடி - மிகச் சிறந்த நடிகராக வர வேண்டியவர்
நிர்மலா சீதாராமன் - ஆக்ரோஷமானவர்... கோபக்காரர்
ராகுல் காந்தி - தலைமைத்துவத்தை அடைய கடுமையாக முயற்சி செய்கிறார்!
பினராயி விஜயன் - குறைவாக சொல்வார்.. சொன்னதை நிறைவாகச் செய்வார்! மிகச் சிறந்த தலைவர்.
ஸ்டாலின் - தெற்கின் தலைவர்... தென்னிந்தியாவின் கமாண்டர்-இன்-சீஃப்!
- வசந்த் பாலகிருஷ்ணன்