Skip to main content

“உங்கள் அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி தானே?” - எடப்பாடி பழனிசாமி காட்டம்

Published on 19/05/2025 | Edited on 19/05/2025

 

Edappadi Palaniswami condemns Mk stalin for arakkonam case

அரக்கோணத்தில் திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் தெய்வச்செயல் மீது பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு வைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தெய்வச்செயல், பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டி வருவதாக அப்பெண் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

இந்த நிலையில், இந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் திமுக இளைஞரணி நிர்வாகி தெய்வச்செயல் என்பவர், கல்லூரி மாணவியை ஏமாற்றி பிற திமுக  ‘சார்’களுக்கு இரையாக்க முயற்சித்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இந்த வழக்கில் எஃப்.ஐ.ஆர் (FIR) பதிய அலைக்கழித்த ஸ்டாலின் மாடல் அரசின் காவல்துறை, அரக்கோணம் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் சு. இரவியிடம் மாணவி முறையிட்ட பிறகே எஃப்.ஐ.ஆர் பதிந்துள்ளது. மேலும், தன்னைப் போன்றே 20 வயதுள்ள 20 பெண்கள் தெய்வச்செயலின் கொடூரப் பிடியில் சிக்கியுள்ளதாக அந்த மாணவி தெரிவித்துள்ளார்.

‘பொள்ளாச்சி பொள்ளாச்சி’ என்று மேடைதோறும் கூவிய மு.க.ஸ்டாலின் அவர்களே, உங்கள் அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி தானே? பொள்ளாச்சி வழக்கிற்கும் இந்த வழக்கிற்கும் என்ன வித்தியாசம் தெரியுமா? பொள்ளாச்சி வழக்கை நான் நேர்மையாக சிபிஐக்கு மாற்றினேன். நீங்களோ, அரக்கோணம் வழக்கை நீர்த்துப் போக எல்லா வேலைகளையும் செய்துகொண்டு இருக்கிறீர்கள். பாதிக்கப்பட்ட பெண், தெளிவாக உங்கள் நண்பர் பெற்றெடுத்த பிள்ளை அமைச்சர் அன்பில் மகேஸ் உள்ளிட்ட திமுகவினர் பெயரைச் சொல்லி, தான் மிரட்டப்படுவதாக சொல்கிறார். 

குறிப்பாக, அமைச்சர் அன்பில் மகேஸின் தனிப்பட்ட உதவியாளர் உமா மகேஸ்வரன் என்பவருக்கு தன்னை இரையாக்க முயற்சித்ததாக அந்த மாணவி கூறுகிறார். பாதிக்கப்பட்ட மாணவி சொல்வதை வைத்தே கேட்கிறேன். தி.மு.க. குற்றவாளிகள் அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சிக்கும் ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும். 20 வயது பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தத் துடிக்கும் திமுக நிர்வாகி(கள்) மீது இந்த டம்மி அப்பா அரசு நடவடிக்கை எடுக்குமா? எடுக்காவிடில், மக்கள் துணையோடு நிச்சயம் அதிமுக மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுக்கும். யார் அந்த தம்பி?” எனப் பதிவிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்