
ரவி மோகன் கடந்த 2009ஆம் ஆண்டு தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகளான ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறது. இந்த சூழலில் ரவி மோகன் ஆர்த்தியை பிரிவதாக கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிவித்தார். ஆனால் ஆர்த்தி இது அவர் தன்னிச்சையாக எடுத்த முடிவென்றும் என்னுடைய ஒப்புதல் இல்லாமல் எடுத்த முடிவென்றும் கூறியிருந்தார். பின்னர் ரவி மோகன், ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் 2009ஆம் ஆண்டு தங்களுக்கு நடந்த திருமணத்தை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவின்படி ரவி மோகன் மற்றும் ஆர்த்தி இருவரும் சமரச தீர்வு மையத்தில் பலமுறை ஆஜராகி பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமரச தீர்வு எட்டப்படாததால் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் சமீபத்திய திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டார். இந்த பாடகிதான் ரவி மோகன் ஆர்த்தியை பிரிவதற்கு காரணம் என ஆர்த்தியின் தாயார் சுஜாதா விஜயகுமார் நக்கீரனுக்கு பிரத்யேகமாக பேட்டி கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இருவரும் அத்தகவலை மறுத்திருந்தனர். ஆனால் மீண்டும் ஒன்றாக திருமண நிகழ்வில் கலந்து கொண்டது பேசு பொருளாக மாறியது. பின்பு ரவி மோகனும் ஆர்த்தியும் தங்களது தரப்பு நியாயங்களை அறிக்கையாக வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.
இதனைத் தொடர்ந்து ரவி மோகன் தொடர்ந்த விவகாரத்து வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது ரவி மோகன் மற்றும் ஆர்த்தி இருவரும் ஆஜராகினர். அப்போது ரவி மோகன் தரப்பில் ஆர்த்தி தன்னுடன் வாழ வேண்டும் என்று வைத்த கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் எதற்காக விவாகரத்து கோருகிறேன் என்று விளக்கமளித்து ஒரு புதிய மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதே சமயம் ஆர்த்தி தரப்பில் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் தர உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இருவரும் மனுத் தாக்கல் செய்துள்ள நிலையில் ரவி மோகன் மனுவிற்கு ஆர்த்தியும் ஆர்த்தி மனுவிற்கு ரவி மோகனும் பதில் மனுத் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டு ஜூன் 12ஆம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.