
7 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட பெண்ணின் உடலைத் தோண்டி எடுத்து எலும்புக் கூட்டுடன் செல்பி எடுத்துக் கொண்ட இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலம், கிழக்கு மெடினிபூர் மாவட்டத்தின் கோண்டாய் பகுதியில் குடிபோதையில் இருந்து இளைஞர் ஒருவர், கல்லறையில் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட பெண்ணின் எலும்புக்கூட்டை தோண்டி எடுத்துள்ளார். அதன் பின்னர் அவர், அவர் அந்த எலும்புக்கூட்டுடன் செல்பி எடுக்க முயன்றுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உள்ளூர் மக்கள், உடனடியாக அங்கு வந்து அந்த இளைஞரைக் கடுமையாகத் தாக்கினர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். அப்போது அந்த இளைஞரை காவல்துறையிடம் ஒப்படைக்க மறுத்து பொது மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருப்பினும், அந்த இளைஞரை பொது மக்களிடம் இருந்து போலீசார் காப்பாற்ற முயன்றனர். அப்போது நிலைமை மோசமடைந்து, போலீசார் மீது செங்கல்கள் வீசப்பட்டது. இதில் மூன்று காவல்துறை அதிகாரிகள் காயமடைந்தனர்.
இரண்டு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்த போலீசார், அந்த இளைஞரை பாதுகாப்பாக பொது மக்களிடம் இருந்து மீட்டனர். பொதுமக்களிடம் அடி வாங்கி காயமடைந்த இளைஞர், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதில், அந்த இளைஞர் பிரபாகர் சிட் என்பதும், அவர் வேறொரு மாநிலத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் பணிபுரிந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.
சம்பவ இடத்தில் மது பாட்டில் கண்டுபிடிக்கப்பட்டதால், பிரபாகர் குடிபோதையில் இருந்திருக்கலாம் எனப் போலீசார் சந்தேகிக்கின்றனர். இருப்பினும், அந்த இளைஞர் கல்லறையில் இருந்து பெண்ணின் எலும்புக்கூட்டை ஏன் வெளியே எடுத்தார் என்பது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.