
அதிமுக-பாஜக கூட்டணி அதிகாரப்பூர்வமாக அமைந்திருந்தாலும் கூட்டணி நிலைக்குமா? உடைந்து விடுமா? என்கிற சந்தேகம் இன்னமும் அதிமுகவினரிடம் இருந்து கொண்டுதான் இருக்கிறது.
இது குறித்து இரு கட்சிகளின் தலைவர்களும் சந்தித்துப் பேசியபோது, "பொது நிகழ்வுகளிலும் பொது மேடைகளிலும் இரு கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொள்வது நம் கட்சி தொண்டர்களிடம் ஒரு பிணைப்பை ஏற்படுத்தும். அந்தப்பிணைப்புத்தான் தேர்தல் களத்தில் இயல்பாக ஒன்றிணைந்து செயலாற்ற வைக்கும் " என்று ஆலோசிக்கப்பட்டது. அதனை இரு கட்சிகளின் நிர்வாகிகளும் ஒப்புக்கொண்டனர்.
அதற்கு முன்னோட்டமாக இன்று நடந்த ஒரு நிகழ்வு இதை நிரூபிக்கிறது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் முன்னாள் அமைச்சரும், உடுமலை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான உடுமலை ராதாகிருஷ்ணனின் இல்ல காதணி விழா விமர்சியாக கொண்டாடப்பட்டது. இதில் அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு வாழ்த்தினார். அதே சமயம் இந்த விழாவில் கலந்துகொள்ள பாஜக தலைவர்கள் பலரும் அழைக்கப்பட்டிருந்தனர். இதனையடுத்து, இந்த விழாவில், தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஒரே மேடையில் எடப்பாடி பழனிசாமியும் நயினார் நாகேந்திரனும் அருகருகே நின்று குழந்தைக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். மேலும் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இரண்டு கட்சிகளின் தலைவர்களும் முன்னணி நிர்வாகிகளும் இந்த விழாவில் கலந்துகொண்டும் தேர்தல் அரசியல் குறித்து விவாதத்ததும் விழாவின் முக்கிய நிகழ்வாக கவனிக்கப்பட்டிருக்கிறது.