Skip to main content

அப்பவே அப்படி! முதல் நேர்காணலிலேயே முதிர்ச்சி - ஏ.ஆர்.ரஹ்மானின் வெற்றி ரகசியம்

Published on 10/08/2020 | Edited on 10/08/2020
a.r.rahman

 

இன்று நம்முன் இருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இரண்டு ஆஸ்கர், மற்றும் பல விருதுகள், மற்றும் புகழுக்கு சொந்தக்காரர். வெளிநாட்டவரையும் தனது இசையின் மூலம் கட்டிப்போட்டவர். புகழின் உச்சிக்கு சென்றாலும் எந்த மமதையும் இல்லாமல், மேலும், மேலும் வளர்ந்துகொண்டிருப்பவர். அவ்வாறாகதான் நமக்கு அவரை தெரியும். ஆனால் இத்தனை பாராட்டுகள் அன்று இல்லை. ஆனால் அவரிடம் அதற்கான தெளிவும், நம்பிக்கையும் இருந்தது. ஏ.ஆர்.ரஹ்மான் வளர்ந்து வந்த காலகட்டம் அது. அந்த காலகட்டத்தில் இலங்கை வானொலியை சேர்ந்த அப்துல் ஹமீது அவர்கள் ஏ.ஆர்.ரஹ்மானை ஒரு நேர்காணல் செய்தார். அனேகமாக இதுதான் ரஹ்மானின் முதல் வீடியோ நேர்கானலாக இருக்கும். அதை பற்றிய ஒரு சிறு தொகுப்பு.

 

பள்ளிப்படிப்பை பாதியிலேயே விட்ட ஏ.ஆர்.ரஹ்மான் இன்றைய நவீன தொழில்நுட்பங்கள் வரை அனைத்தையும் கற்றுக்கொண்டு இன்னும் நவீனங்கள் வந்தாலும் கற்றுக்கொள்ள தயாராக இருப்பவர். இன்றும் எந்த புதிய தொழில்நுட்பங்கள் வந்தாலும் அதை உடனே கற்றுக்கொள்பவரும் அவரே. அப்படிப்பட்டவரிடம் இதுகுறித்து அன்றே அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்... "நான் ஸ்கூல்ல படிக்குறப்பவே எனக்கு கம்ப்யூட்டர், ஆம்பிளிஃபையர், அது சார்ந்த விஷயங்களுக்குதான் போகணும்னு ஆசைப்பட்டேன். ஆனா குடும்ப சூழ்நிலை காரணமா என்னால தொடர்ந்து படிக்க முடியல. அம்மா சொன்னாங்க உனக்குதான் மியூசிக் தெரியுமே அதுலயே சம்பாதிக்கலாம் அப்படினு. அப்போதான் கம்ப்யூட்டர்ஸ் வர ஆரம்பிச்சது. முன்னாடியே அதை பற்றிய தொடக்கம் இருந்ததால மேனுவல்ஸ் படிச்சு கொஞ்ச, கொஞ்சமா அறிவை வளத்துக்கிட்டேன்.”

 

a.r.rahman young

 

கிராமி விருதுகளில் தமிழ் பாடல்கள் விருது வெல்லும் காலம் எப்போது வரும் என கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் தமிழின் பெருமைகளை உலகறிய செய்யவேண்டும். என்ற ஆர்வம் அவருக்கு அன்றிலிருந்தே இருந்திருக்கிறது என்பதற்கு சான்றாக விளங்குகிறது. ”நம்ம தமிழ் பாடல்கள் வரணும். அது பத்தோட பதினொன்னா இருக்கக்கூடாது. அதான் முதல் இடத்துக்கு வரணும். அதுக்கு நான் இன்னைக்கு இருந்தே ஒர்க் பண்றேன்.”

 

அர்த்தமுள்ள பாடல்களைவிட அர்த்தமில்லாத பாடல்கள் அதிகளவு மக்களிடம் பிரபலமாவதற்கு என்ன காரணம் என்பதை அவர் அன்றே கூறியுள்ளார். ”நாம தினமும் ஒரே மாதிரி சாப்பிடும்போது, ஒரு நாள் மாத்தி சாப்பிட்டா அது நல்லா இருக்கும், புதுசா இருக்கும். ஆனா அதையே தொடர்ந்து சாப்பிட்டா அதுவும் அலுத்து போயிரும். அது மாதிரிதான் இதுவும். நான் மூன்று படங்களுக்கு ஒரு தடவைதான் இதுமாதிரி போடுறது, அது வித்தியாசமா, நல்லா இருக்கும். ஆனா இந்த மாதிரி பாடல்கள் ஆரோக்கியமானது இல்ல. சின்ன பசங்களாம் அதை புடுச்சுட்டே போயிறாங்க அதை நினைத்தால் கஷ்டமா இருக்கு.” சிறுவயதிலேயே அவருக்கிருந்த தெளிவு, முதிர்ச்சி, உழைப்புதான் அவரை இவ்வளவு உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது என்பதில் எவ்வித ஐயமுமில்லை. 

 

 

Next Story

காவலாளி டூ கரீபியன் ஹீரோ; உத்வேகம் அளிக்கும் சமர் ஜோஸப் கிரிக்கெட் பயணம்!

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
shamar joseph cricket journey

காபாவில் ஆஸ்திரேலிய அணியைக் காலி செய்த சமர் ஜோஸப், முதல் பந்திலேயே ஸ்மித் விக்கெட் எடுத்து சாதித்த ஜோஸப், மேற்கு இந்திய தீவுகளின் அடுத்த வால்ஸா இந்த ஜோஸப் என கடந்த இரண்டு வாரமாக கிரிக்கெட் உலகம், சமூக வலைத்தளங்கள்  முழுவதும் என  சமர் ஜோஸப் பேச்சு தான். யார் இந்த சமர் ஜோஸப் ?

மேற்கு இந்திய தீவுகளில் ஒரு சிறிய கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். கிரிக்கெட் மீது அளவு கடந்த ஆர்வம் இருந்தாலும் தன்னுடைய பொருளாதார சூழ்நிலையால் தொழில் முறை கிரிக்கெட்டில் விளையாட முடியாத நிலை. படிக்கவும் முடியாத சமர் ஜோஸப் ஒரு தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டி ஆகப் பணிபுரிந்து கொண்டே கிரிக்கெட் மீது கொண்ட தீராப் பற்றால் விடாமுயற்சியால் கயானா அணிக்கு நெட் பவுலராக தேர்வாகிறார். செக்யூரிட்டி வேலை பார்த்துக் கொண்டே நெட் பவுலராகச் சேர்ந்து அதில் கிடைக்கும் வருமானத்தை குடும்ப தேவைக்காக பயன்படுத்துகிறார்.

இந்நிலையில், மேற்கு இந்திய தீவுகளில் கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகளில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணி என்னும் ஒரு அணி உள்ளது. அதன் கேப்டனாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் இம்ரான் தாஹிர் உள்ளார். அந்த அணிக்கு அனலிஸ்ட் ஆக, கிரிக்கெட் வீரர் அஸ்வின் நண்பரான பிரசன்னா உள்ளார். கடந்த ஆண்டு கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகளின் பயிற்சிக்காக நெட் பவுலிங் செய்த சமர் ஜோஸப் திறமையை பார்த்த பிரசன்னா, ஜோஸப்பை கூடுதல் வேகமாக பந்து வீச சொன்னபோது, அப்படியே செய்து அசத்த, கேப்டன் இம்ரானிடம், இவரை அணியில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று பரிந்துரைக்கிறார். அன்று தான் தொழில் முறை கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்தார். அடுத்த போட்டியிலேயே கயானா அமேசான் வாரியர்ஸ் அணிக்காக களமிறங்கினார். கடந்த வருடம் கயானா அணியும் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

பின்னர் மேற்கு இந்திய தீவுகள் அணியின் முதல் தர போட்டிகளில் பங்குபெற்று சிறப்பாக ஆடி, தேசிய அணியில் இடம் பிடித்தார். தன் அறிமுக டெஸ்ட் ஆட்டத்திலேயே உலகின் மிக்சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவராகக் கருதப்படும் ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித்தின் விக்கெட்டை தனது கிரிக்கெட் கேரியரின் முதல் பந்திலேயே வீழ்த்தி அசத்தினார். அந்த முதல் டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி முத்திரை பதித்தார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்தாலும் பரபரப்பான இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணிக்கு 217 ரன்கள் என்ற  இலக்கு. எளிதாக வென்று விடுவார்கள் என்று நினைத்த போது, சமர் ஜோஸப்பின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். சிறப்பாக பந்து வீசிய சமர் ஜோஸப் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி மேற்கு இந்திய தீவுகள் அணியை வெற்றிக்கு முக்கிய காரண்மாக அமைந்தார். ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை வென்று அசத்தியுள்ளார். இரண்டாவது இன்னிங்சில் பேட் செய்த போது ஸ்டார்க் வீசிய பந்து சமர் ஜோஸப் பாதத்தை பதம் பார்த்து வெளியேறிய போதும், பதறாமல் பந்து வீசி ஆஸ்திரேலிய அணியை காபா மைதானத்தில் வீழ்த்த உறுதுணையாக இருந்தார். காபாவில் ஆஸியை வீழ்த்த முடியாது என்ற மாயையை இந்திய அணி முதலில் தகர்த்தது. மேற்கு இந்திய தீவுகள் அணி இனி டி 20 அணி மட்டுமே என்று விமர்சித்தவர்களே வியக்கும் வண்ணம் 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் மேற்கு இந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றுள்ளது.

வால்ஸ், மார்ஷல், ஆம்ப்ரோஸ், மைக்கேல் ஹோல்டிங் என வேகப்பந்து வீச்சுக்கு புகழ் பெற்ற மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு அப்படி பெயர் சொல்ல ஒரு வீரர் இல்லையே என்ற ஏக்கத்தைத் தீர்க்க இந்த சமர் ஜோஸப் இருக்கிறார் என்று மேற்கு இந்திய தீவுகள் அணியின் ரசிகர்களும், உலக கிரிக்கெட் ரசிகர்களும் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர்.

மேலும் ரசிகர்கள், அவர் வாழும் பராகரா என்ற கிராமத்தில் 2018 வரை இண்டர்நெட் இல்லை, ஆனால் தற்போது இண்டர்நெட் முழுவதும் அவர் பேச்சு தான் எனவும், காவலாளி டூ கரீபியன் ஹீரோ எனவும் சமர் ஜோஸப் பற்றி சமூக வலைத்தளங்களில் புகழ்ந்து பதிவிட்டு வருகின்றனர். 

- வெ.அருண்குமார்

Next Story

ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி குளறுபடி; டிக்கெட் தொகை திருப்பி செலுத்த தொடக்கம்

Published on 22/09/2023 | Edited on 22/09/2023

 

 A.R. Rahman's concert; refund of ticket amount 

 

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், படங்களைத் தாண்டி பல நாடுகளில் இசைக் கச்சேரி நடத்தி வருகிறார். இவரது நிகழ்ச்சிக்கு சில நிமிடங்களிலேயே டிக்கெட் விற்பனையாகி சாதனை படைத்திருக்கிறது. இந்நிலையில் 'மறக்குமா நெஞ்சம்' என்ற தலைப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி சென்னையில் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் தொடர்ந்து வெளிநாடுகளிலும் இசை நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அன்று அரங்கில் மழை காரணமாக நீர் தேங்கியதால் ஒத்தி வைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்காக பல்வேறு ஊர்களிலிருந்து வந்த ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர். பின்பு ஏ.ஆர். ரஹ்மான் ரசிகர்களின் பதிவுகளுக்கு பதிலளித்து சமாதானப்படுத்தினார்.

 

இதையடுத்து பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் (10.09.2023) அன்று  'மறக்குமா நெஞ்சம்' நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஏசிடிசி என்ற நிறுவனம் செய்திருந்தது. நிகழ்ச்சியைக் காண பல்வேறு நாடுகளிலிருந்து ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தனர். இதில் மணிரத்னம், அஜித்தின் மனைவி ஷாலினி, அவரது மகள் உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதனால் ஓ.எம்.ஆர் சாலையில் ரசிகர்கள் பெரும் திரளாகக் கூட கடும் போக்குவரத்து பாதிப்பு அப்பகுதியில் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கில் டிக்கெட்டுகளை வாங்கிய பல ரசிகர்கள் உரிய இருக்கை கிடைக்காமல் நின்று கொண்டே பார்த்ததாகவும், சிலர் இடம் கிடைக்காமல் பார்க்காமலேயே வீடு திரும்பியதாகவும் கூறியிருந்தனர். மேலும் பார்க்கிங் வசதி சரியாக இல்லாமல் சாலையிலேயே பலர் வாகனங்களை நிறுத்தி வைத்துவிட்டு சென்றதாகக் கூறப்படுகிறது. அதோடு கூட்ட நெரிசலில் பலருக்கும் மூச்சுத் திணறல், மயக்கம் ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

 

இந்த நிகழ்ச்சி குறித்து பலரும் மோசமான நிகழ்ச்சி ஏற்பாடு எனக் குற்றம் சாட்டினர். இதையடுத்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிறுவனம், "கூட்ட நெரிசலால் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாதவர்கள் எங்களை மன்னிக்கவும். அதற்கான பொறுப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்" என எக்ஸ் (ட்விட்டர்) தள பக்கத்தில் மன்னிப்பு கேட்டிருந்தது. இதையடுத்து ஏ.ஆர். ரஹ்மான் இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த எக்ஸ் (ட்விட்டர்) தள பதிவில், "அன்புள்ள சென்னை மக்களே, டிக்கெட் வாங்கிவிட்டு துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைகளால் மைதானத்திற்குள் நுழைய முடியாமல் போனவர்கள், தயவு செய்து உங்கள் டிக்கெட்  நகலை பகிரவும்" எனக் குறிப்பிட்டு ஒரு மின்னஞ்சலைப் பகிர்ந்து வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் அந்த மின்னஞ்சலில் ரசிகர்களின் குறைகளை குறிப்பிடுமாறும், அது குறித்து அவர்கள் குழு விரைவில் பதிலளிக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

 

இந்நிலையில் ஏசிடிசி நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் டிக்கெட்டிற்கான தொகையை திருப்பி செலுத்த தொடங்கி விட்டோம் என்று தெரிவித்துள்ளனர். அதில் "முன்பதிவு செய்த 3 வலைதளங்கள் வழியாக பணத்தை திருப்பி செலுத்தும் பணியை தொடங்கிவிட்டோம்; உங்களுக்கு ஏற்பட்ட அனைத்து சிரமங்களுக்கும் மன்னிப்பு தெரிவித்துக்கொள்கிறோம்" என்றிருக்கிறார்கள்.