கோவையில் பீளமேடு போலீசார், சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில் நேற்று (16.06.2021) ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது நேரு நகரை அடுத்த வீரியம்பாளையம் சாலையில் உள்ள காலி மைதானத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் வாலிபர் ஒருவர் இளம்பெண்ணுடன் நின்று பேசிக்கொண்டிருந்தார்.
அவர்களை அழைத்து விசாரித்த போலீசாரிடம் முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளனர். இதையடுத்து அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. அவர்கள் இருவரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பிடிபட்ட இளம்பெண் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வனிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) (21) என்பதும் அவருடைய காதலன், மல்லேஷ் என்பவரின் மகன் சூர்யா என்கிற சூரியபிரசாத் (21) என்பதும் தெரியவந்தது.
மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில், சூர்யா என்கிற சூரியபிரசாத் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டே பகுதி நேரமாக கஞ்சா விற்றுவருவது தெரியவந்தது. மேலும், அவரது காதலி வனிதா கோவையில் உள்ள பிரபல மருத்துவமனையில் நர்ஸாக பணிபுரிந்துகொண்டு காதலன் கஞ்சா விற்பதற்கு உதவிசெய்துவந்துள்ளார்.
இருவரும் ஜோடியாக சென்றால் போலீசாருக்கு சந்தேகம் வராது என்பதாலும் தற்போது ஊரடங்கு இருப்பதால் நர்ஸ் எனக்கூறி எங்கு வேண்டுமானாலும் சென்று வரலாம் என திட்டமிட்டு இவர்கள் கஞ்சாவைக் கடத்திவந்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதற்காக இருவரும் கோவை பீளமேட்டை அடுத்த நேரு நகர் பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கியிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 2 கிலோ 250 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.