நாம் தமிழர் கட்சி கடந்த தேர்தலில் போட்டியிட்டு 8 சதவீத வாக்குகளை பெற்ற நிலையில் மாநிலக் கட்சியாக அங்கீகாரத்தையும் பெற்றது. இந்த நிலையில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது உள்ள அதிருப்தி காரணமாகப் பலரும் கட்சியிலிருந்து விலகி வருகின்றனர். அதிலும் குறிப்பாக விஜய்யின் வருகைக்குப் பிறகு நாதகவில் இருந்து அதிகப்படியான நபர்கள் வெளியே வந்துகொண்டு இருக்கின்றனர். இதனிடையே கட்சியினர் பேசும் ஆடியோக்களும் அடிக்கடி வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகியவர்கள் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு என்று ஒரு இயக்கத்தை உருவாக்கியுள்ளனர். மேலும், இந்த குழு நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் ஒருங்கிணைந்து திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் நாளை(27.11.2024) தனியாக மாவீரர் நாள் பொதுக்கூட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், தமிழ்நாடு முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொள்வார்கள். சீமானிடம் துளியும் ஜனநாயகமே கிடையாது. திரள் நிதி வசூலுக்கு எந்தவித கணக்கையும் நிர்வாகிகளிடம் காட்டுவதே இல்லை. சீமானை நம்பி இளைஞர்கள் ஏமாற வேண்டாம். சீமானின் பேச்சை நம்பி 13 ஆண்டுகள் எங்கள் இளமையை, பொருளாதாரத்தைத் தொலைத்து விட்டோம்” எனத் தெரிவித்துள்ளார்.