Published on 14/06/2018 | Edited on 14/06/2018
ஊட்டியில் 50 அடி பள்ளத்தில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் தண்ணீர் அதிகரித்து செல்கிறது. தொடர் மழையால் மண் சரிவு சம்பவங்களும் நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை 11 மணி அளவில் ஊட்டியில் இருந்து குன்னூர் நோக்கி அரசுப்பேருந்து ஒன்று சென்றது. பேருந்தை ராஜ்குமார் என்பவர் ஓட்டி சென்றார்.
அப்போது, மந்தாட பேரின்பவிலாஸ் பகுதியில் பேருந்து செல்லும் போது சாலையில் இருந்த பள்ளத்தை தவிர்க்க வண்டியை திருப்பிய போது எதிர்பாராவிதமாக நிலை தடுமாறி பேருந்து சுமார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால் பேருந்து பல முறை உருண்டு மிக பெரிய விபத்தில் சிக்கியது.
விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் தருமன் (64), தினேஷ் குன்னூர் (28), நந்தகுமார், பிரபாகரன் (50) சாந்தகுமாரி (50) உள்ளிட்ட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 25 பேர் படுகாயங்களுடன் உதகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
தகவல் அறிந்ததும் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மற்றும் ராஜ்ய சபா உறுப்பினர் கே.ஆர்.அர்ஜூணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகள் குறித்து பார்வை மேற்கொண்டு வருகின்றனர்.