திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு டாக்டர் மற்றும் நர்ஸ்கள் ஆயுதப்படை காவலர் என ஒரே நாளில் 39 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட பிறகு கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தினந்தோறும் ஒற்றை இலக்குடன் பாதிப்பு இருந்த நிலையில் கடந்த 10 நாட்களாக இரட்டை இலக்கத்தில் தொற்று பதிவாகி வருகிறது.
திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரிந்து வந்த மதுரையைச் சேர்ந்த 36 வயது டாக்டர் மற்றும் திண்டுக்கல் ஆயுதப்படை பிரிவில் காவலராகப் பணி புரியும் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த 30 வயது வாலிபர், திண்டுக்கல்லைச் சேர்ந்த 35 வயது வாலிபர், பேகம்பூரைச் சேர்ந்த 25 வயது வாலிபர், புதூரைச் சேர்ந்த 42 வயது ஆண், என்.எஸ். நகரைச் சேர்ந்த 35 வயதான ஆண், ஒய்.எம்.ஆர்.பட்டியைச் சேர்ந்த 29 வயது வாலிபர், நாகல் புதூர் ஒன்னாவது தெருவைச் சேர்ந்த 56 ஆண், ரயில்வே காலனியைச் சேர்ந்த 55 வயது பெண், 99 வயது முதியவர் ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
அதுபோல் ஒட்டன்சத்திரம் வ.உ.சி. நகரைச் சேர்ந்த 25 வயது கர்ப்பிணி சென்னையில் இருந்து ஒருவர் வந்துள்ளார். அவருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று உறுதியானது. மேலும் சங்க பிள்ளை புதூரைச் சேர்ந்த 32 வயது வாலிபர் மதுரையில் இருந்து திரும்பினார். அவருக்கும் தொற்று உறுதியானது. தற்போது அவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதுதவிர நத்தம் வாடிப்பட்டி சின்னாளபட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நர்சுகள், குழந்தைகள் உள்பட 39 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மதுரை, சென்னை, திண்டுக்கல், கோவை ஆகிய அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர் உள்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். அதே வேளையில் பெண்கள், முதியவர்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 27ஆம் தேதி ஒரே நாளில் 32 பேர் பாதிப்பில் இருந்து வீடு திரும்பியும் உள்ளனர். இருந்தாலும் ஒரே நாளில் அரசு டாக்டர், போலீசார் மற்றும் நர்சுகள் உட்பட 39 பேருக்கு ஒரே நாளில் கரோனா தொற்று பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது.