கரோனா நோயாளிகள் சிகிச்சையில் ஈடுபட்டு இருக்கின்ற மருத்துவர்களும், செவிலியர்களும், பாதுகாப்பை கொடுத்து கொண்டிருக்கின்ற காவல்துறை அதிகாரிகளும் நோய் தொற்று பாதித்து உயிரிழந்தால் நாட்டை காப்பாற்றுகின்ற இராணுவ வீரருக்கு இணையாக அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று கொங்கு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில், சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த ஒரு மருத்துவர் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த போது அவரது உடலை அடக்கம் செய்ய மயானங்களின் முன்பு மக்கள் கூடி எதிர்த்த சம்பவம் அம்பத்தூரில் பத்து நாட்களுக்கு முன்பு நடந்தது. அதேபோல இரண்டாவது ஒரு மருத்துவர் கொரோனா எதிர்ப்பு வேள்வியில் உயிர் தியாகம் செய்து அடக்கம் செய்வதற்காக முயற்சித்த போது எதிர்ப்பு தெரிவித்து உடல் கொண்டுவரப்பட்ட அவசர ஊர்தியையும் கீழ்ப்பாக்கத்தில் தாக்கிய நிகழ்வு நடந்திருக்கிறது. உடன் வந்த இரு மருத்துவர்களும் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த இரண்டு நிகழ்வுகளும் இந்தியா முழுவதும் மருத்துவமனைகளில் இந்த அவசர காலத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கின்ற மருத்துவர்கள் இடையேயும், அவர்களது குடும்பத்தினரிடமும் அவநம்பிக்கையை விதைத்திருக்கிறது. இந்த நிலைமை தொடர்ந்தால் பணியில் இருக்கின்ற மருத்துவர்கள் பணியை தொடர வேண்டுமா என்று யோசித்து தவிர்ப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது.
ஒருவருக்கு ஏற்பட்டால் அவர்களது இரத்த உறவுகளே அவரோடு பேசுவதற்கும், தொடுவதற்கும் அஞ்சுகின்ற சூழலில் அவர்களை தங்களது நோயாளிகளாக ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு ஆறுதல் வார்த்தைகளை சொல்லி தங்களுக்கு நோய் தொற்றலாம் என்ற வாய்ப்பு இருந்தும் அவர்களை தொட்டு சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நூற்றுக்கணக்கானவர்களை குணமடைய செய்து வீட்டிற்கு திருப்பி அனுப்பி இருக்கிறார்கள். அப்படிப்பட்ட மருத்துவர்களுக்கு நடக்கக் கூடாதது நடக்கும் போது அவர்களை அடக்கம் செய்வதற்கு கூட மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்ற கோரமான நிகழ்வுகள் வேதனையானது. மனிதாபிமானத்துக்கும், தியாகத்துக்கும் முன் உதாரணமாக திகழ்கின்ற தமிழகத்தில் இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடப்பதை நம்பவே முடியவில்லை. ஆனால் ஏதோ நடந்துவிட்டது என்று இதை கடந்து போகவும் முடியாது. இன்னும் ஒரு நிகழ்வு இதைபோல நடந்துவிடக்கூடாது.
மாநில அரசு சம்பளத்தை கூட்டி வழங்குகிறது. மத்திய அரசு 50 லட்சம் ரூபாய் காப்பீட்டு வழங்கியிருக்கிறது. ஆனால் அவையெல்லாம் இருந்தும் அடக்கம் செய்ய அனுமதிக்காத மனிதாபிமானமற்ற செயல் மருத்துவர்களையும், மருத்துவ குடும்பங்களையும் அதிர்ச்சி அடைய செய்து இருக்கிறது. நடந்து முடிந்த இரண்டு நிகழ்வுகளில் நடந்தது போல இனி மருத்துவர்கள் பாதித்து உயிரிழந்தால் நடக்க கூடாத சம்பவங்கள் நடக்காமல் இருக்க முழுமையான காவல்துறை பாதுகாப்பு வேண்டும்.
நாட்டின் எல்லையில் நின்று போர்க்களத்தில் நாட்டை காப்பாற்றுகின்ற இராணுவ வீரர்களுக்கு எந்த விதத்திலும் கரோனா போரில் ஈடுபட்டிருக்கின்ற மருத்துவர்கள் குறைந்தவர்கள் அல்ல. கரோனா நோயாளிகள் சிகிச்சையில் ஈடுபட்டு இருக்கின்ற மருத்துவர்களும், செவிலியர்களும், பாதுகாப்பை கொடுத்து கொண்டிருக்கின்ற காவல்துறை அதிகாரிகளும் நோய் தொற்று பாதித்து உயிரிழந்தால் நாட்டை காப்பாற்றுகின்ற இராணுவ வீரருக்கு இணையாக அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட வேண்டும். கண்டுகொள்ளாமல் விட்டுவிடக்கூடாது. அதே சமயத்தில் விழிப்புணர்வுக்காக அரசு தரப்பில் அதிகமாக பயமுறுத்திய காரணத்தால் தான் மக்கள் இந்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை. இவ்வாறு கூறியுள்ளார்.