Skip to main content

“அதிமுகவின் எஜமானர்களான பாஜகவையும் விரட்டியடிப்போம்” - அமைச்சர் உதயநிதி

Published on 19/06/2023 | Edited on 19/06/2023

 

We will drive out BJP, the masters of AIADMK says Minister Udhayanidhi

 

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளார். அதேசமயம் அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாக அவர் முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிறகு நீதிமன்றத்தின் அனுமதியோடு காவிரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் வழக்கில் வெற்றி பெற்று தந்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஜல்லிக்கட்டு அமைப்புகளின் சார்பில் நேற்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் பாஸிஸ்ட்கள் ஆளத் துடிக்கின்றனர். ஆனால் அதற்காக நேரடியாக எதையும் செய்யாமல் புறவாசல் வழியாக நுழையப் பார்க்கிறார்கள். தமிழர்கள் நாம் எப்போதும் பாரம்பரிய முறைப்படி வாடிவாசல் வழியாக நேரடியாகத்தான் எதையும் சந்திப்போம். ஆனால், பாஸிஸ்ட் கட்சியான பாஜகவினர் புறவாசல் வழியாக உள்ளே வர முயற்சி செய்கின்றனர். 

 

பாஜக, அதிமுகவை தனது கிளைக் கழகமாக நடத்தி வருகிறது. மேலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொடுக்கும் கோப்புகளில் கையெழுத்து போட வேண்டிய ஒருவர் தனது வேலையை தவிர எல்லாவற்றையும் செய்கிறார். ரப்பர் ஸ்டாம்பாக செயல்பட வேண்டிய அவரை யார் என்று உங்களுக்கு நன்றாகத் தெரியும். திமுக இருக்கும் வரை தமிழ்நாட்டை யாரும் அபகரிக்கும் முயற்சி நடக்காது.

 

எத்தனை மோடிக்கள், அமித்ஷாக்கள், நட்டாக்கள் வந்தாலும் தமிழ்நாட்டை ஒன்றும் செய்ய முடியாது. பாஜகவின் தொண்டர் படையாக அமலாக்கத் துறை, சிபிஐ, வருமான வரித் துறை போன்ற துறைகள் செயல்பட்டு வருகிறது. அதிலும் இவர்கள் தேர்தல் நேரத்தில் வேகமாக செயல்பட்டு வருகின்றனர். நாங்கள் பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் வந்தவர்கள். அதனால் மோடிக்கும் பயப்பட மாட்டோம், அமலாக்கத் துறைக்கும் பயப்பட மாட்டோம். ரெய்டு எங்களுக்குப் புதிதல்ல. ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானிக்கு எதிராக ஒரு அறிக்கை ஒன்று வெளியிட்டது. ஆனால், அதானி மீது எந்த விசாரணையும் எடுக்கவில்லை. 

 

இது குறித்து ராகுல் காந்தி கேள்வி எழுப்பிய போது அந்த கேள்விக்கு பதில் கூறாமல் அவரது பதவியைப் பறித்தது தான் மோடி அரசு. தமிழக அரசு சார்பில் கொடுக்கப்பட்ட 21 கோப்புக்களில் கையெழுத்து போடாமல் வைத்திருக்கிறார் ஆளுநர். அந்த கோப்புகளில் பெரும்பாலானவை கடந்த ஆட்சியில் முன்னாள் அமைச்சர்கள் மீதான வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்குகள் தான். முன்னாள் அமைச்சர்களான வேலுமணி, விஜயபாஸ்கர் ஆகியோர் மீது வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினார்கள். ஆனால் என்ன நடந்தது? கடந்த சட்டமன்றத் தேர்தலில் அடிமைகளான அதிமுகவை விரட்டியடித்தோம். அது போல நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அந்த அடிமைகளின் எஜமானர்களான பாஜகவையும் விரட்டியடிப்போம்” என்று பேசினார்.

 

 

சார்ந்த செய்திகள்