திருச்சி அரசு மருத்துமனையில், ரோட்டரி கிளப் சார்பாக ரூபாய் 1.2 கோடி மதிப்பிலான 100 ஆக்சிஜன் செறிவூட்டிகளை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு இன்று (29.05.2021) வழங்கினார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், “அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் சிகிச்சை முறை குறித்து மருத்துவமனை மருத்துவர்களிடம் அரசியல்வாதிகள் சிலர் மிரட்டும் வகையில் பேசிவருகின்றனர்.
இது ஏற்புடையதல்ல. எனவே, தகவல் என்றாலும் மாவட்ட நிர்வாகத்திடம் மட்டுமே கேட்டறிய வேண்டும். இதை மீறும் அரசியல்வாதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்தார். “அதிமுகவினர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனரா?” என்று செய்தியாளர்களின் கேள்விக்கு கே.என். நேரு பதிலளிக்க மறுத்துவிட்டார். திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் 673 உள்ளன. மீதமுள்ள சாதாரண படுக்கைகள் 366இல் 88 சாதாரண படுக்கைகள் காலியாக உள்ளதாக கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு, டீன் வனிதா, மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகரச் செயலாளர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஸ்டாலின் குமார், இனிகோ இருதயராஜ், பழனியாண்டி, அப்துல் சமத், ரோட்டரி இன்டர்நேஷனல் கிளப் மண்டல ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன், ரோட்டரி மாவட்டக் கவர்னர் சொக்கலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.