ஒன்பது மாவட்டங்களை தவிர்த்து மீதமுள்ள மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்; அதற்கேற்ப புதிய தேர்தல் தேதி அறிவிப்பாணையை வெளியிட வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த உள்ளாட்சி தேர்தல் தொடர்பான குளறுபடிகளுக்கு எதிராக திமுக தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் கடந்த 5-ந்தேதி உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.
இதனை அடுத்து எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசும் மாநில தேர்தல் ஆணையமும் அவசர ஆலோசனையை நடத்தினர். இதனை தொடர்ந்து, தேர்தலை உடனடியாக நடத்துவார்களா ? அல்லது மீண்டும் தள்ளி வைப்பார்களா? என்கிற சந்தேகங்கள் அரசியல் கட்சிகளிடையே பரபரப்பாக எதிரொலித்துக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், தேர்தலை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம் என்பதற்காக அதிமுக கூட்டணி கட்சிகளின் மூத்த தலைவர்களுடனும், அதிமுக மா.செ.க்கள் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளுடனும் தனித்தனியாக அவசர ஆலோசனையை நடத்தியது அதிமுக தலைமை. எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த அந்த கூட்டத்தில் பாஜக, பாமக, தேமுதிக, த.மா.கா. கட்சிகளின் முக்கிய தலைவர்கள் தனித்தனியாக ஆலோசனை நடத்தினர்.
ஆலோசனை குறித்து அதிமுக வட்டாரங்களில் விசாரித்தபோது, ‘’பாஜக 30 சதவீதம், பாமக 25 சதவீதம், தேமுதிக 25 சதவீதம், தமாகா 20 சதவீதம் இடங்களை பகிர்ந்தளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததுடன் தங்களுக்கு செல்வாக்கு மிக்க மாவட்டங்களில்தான் இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். கட்சியின் கட்டமைப்பு இல்லாத மாவட்டங்களில் வார்டுகள் ஒதுக்கப்பட கூடாது எனவும் வலியுறுத்தினார்கள்.
இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் மூத்த அமைச்சர்கள் அவ்வப்போது குறுக்கிட்டு, சதவீத கணக்குகள் எல்லாம் சரிபட்டு வராது. செல்வாக்குள்ள மாவட்டங்கள், இல்லாத மாவட்டங்கள் என பிரித்து இடங்களை ஒதுக்குவதும் கூட்டணி ஃபார்முலாவுக்கு ஏற்புடையது கிடையாது. அதனால் பரவலாக எல்லா மாவட்டங்களிலும் கலந்துதான் வார்டுகள் ஒதுக்கப்படும். பொதுவாக, தேர்தல் நடக்கும் அனைத்து அமைப்புகளிலும் 80 சதவீத இடங்களில் அதிமுக போட்டிப்போட வேண்டும் என அதிமுக நிர்வாகிகள் வலியுறுத்தி வருகிறார்கள்
அதற்கேற்ப இடங்களை பகிர்ந்துகொள்ளலாம். அதனால் ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிமுக ஒரு குழு அமைக்கும். அதே போல உங்கள் கட்சியிலும் அமையுங்கள். இரு குழுவினரும் கலந்துப்பேசி இடங்களை பகிர்ந்துகொள்ளுங்கள். இப்படி நடந்தால் மட்டுமே கூட்டணி பேச்சுவார்த்தை சரியாக நடக்கும். இல்லைன்னா குழப்பம்தான்.
திமுகவை வீழ்த்துவதுதான் உங்களுடைய நோக்கம் எனில் எங்களுடைய யோசனைக்கு ஒத்துழையுங்கள். அப்போதுதான் நம்முடைய கூட்டணிக்கு 100 சதவீத வெற்றி கிடைக்கும்.
திமுகவும் தங்களுடைய கூட்டணி கட்சிகளை இப்படித்தான் அணுகவுள்ளது என அதிமுக தலைவர்கள் பேசினர்.
இதனை ஏற்காத கூட்டணி கட்சிகள், சதவீத அடிப்படையில் அணுகினால் மட்டும் தான் வார்டுகளை ஆரோக்கியமாக பிரிக்க முடியும். அதை தவிர்த்து மாற்று வழியை யோசித்தால் ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரச்சனைதான் வரும். அது, கூட்டணி உறவுக்கு நல்லதல்ல என தோழமை கட்சிகள் சொல்லியிருக்கிறார்கள். இதே ரீதியில் இரு தரப்பும் யோனைகளை முன் வைத்த நிலையில், மாவட்ட குழுவுக்கு சில ஆலோசனைகளை சொல்லுகிறோம். அவர்களோடு பேசுங்கள். எல்லாம் சரியாகும் என சொல்லி ஆலோசனையை முடித்துக்கொண்டார்கள் அதிமுக தலைவர்கள்.