ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்திற்கான மாதிரி ரேஷன் அட்டை வடிவமைப்பை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.
ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த முயற்சித்து வருகிறது. தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வேலை நிமித்தமாக வெளியூரில் தங்கும் சூழல் உள்ளவர்கள் தங்களுக்கு தேவையான ரேஷன் பொருட்களை எந்த மாநிலமாக இருந்தாலும் அந்த பகுதி ரேஷன் கடைகளில் பெறலாம்.
இந்த திட்டத்தை அமல்படுத்த முயற்சித்து வரும் தற்போதைய பாஜக அரசு சோதனை முயற்சியாக ஏற்கனவே 6 மாநிலங்களில் ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.
வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் இந்த திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வழங்கப்படும் ரேஷன் அட்டைகள் ஒரே மாதிரியாக இருக்க வேண்டியது அவசியம் என்பதால் புதிய மாதிரி ரேஷன் அட்டை உருவாக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் மாநில அரசுகள் இந்த புதிய ரேஷன் அட்டை மாதிரியை பின்பற்ற வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளது.