இந்தியாவில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டை விட கரோனா பரவும் வேகம் அதிகமாக உள்ளது. கரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில் மத்திய பிரதேச மாநிலம், அகர் மால்வா மாவட்டம் கணேஷ்புரா கிராம மக்கள், கரோனாவை விரட்ட வித்தியாசமான முறையைக் கையாண்டுள்ளனர். கரோனாவை விரட்ட கையில் தீப்பந்தம் ஏந்தியவாரே இரவு நேரத்தில் ஓடிய மக்கள், 'ஓடு கரோனா ஓடு' எனக் கோஷங்களை எழுப்பியுள்ளனர். பின்னர், அந்த தீப்பந்தங்களை ஊருக்கு வெளியே வீசியுள்ளனர். இதுதொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இதுகுறித்துப் பேசியுள்ள அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், பெருந்தொற்று ஏற்படும்போது ஞாயிறு அல்லது புதன்கிழமைகளில் வீட்டிற்கு ஒருவர், கையில் தீப்பந்தத்தை ஏந்தி வீட்டிலிருந்து கிராம எல்லை வரை ஓடவேண்டும். பின்னர் அந்த தீப்பந்தங்களை ஊருக்கு வெளியே வீசவேண்டும். இது ஊரை காக்கும் என மூத்தவர்கள் சொன்னதாகத் தெரிவித்துள்ளார். கரோனவை விரட்ட "GO CORONA GO" எனக் கோஷம் எழுப்ப மத்திய அமைச்சரே கூறுகையில், மக்களின் நம்பிக்கையை என்ன சொல்லமுடியும்.