
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் சர்வதேச கிரிக்கெட் போட்டியின் சாம்பியன்ஸ் டிராபி தொடர் கடந்த 1998ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இறுதியாக இந்த தொடர் 2017ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இத்தகைய சூழலில் தான் இந்த ஆண்டுக்கான போட்டி பாகிஸ்தானில் நடைபெற்றது. அதே சமயம் இந்திய அணி விளையாடும் அனைத்துப் போட்டிகளும் துபாயில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த தொடரின் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து ஆகிய 4 அணிகளும், பி பிரிவில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய 4 அணிகளும் என மொத்தமாக 8 அணிகள் விளையாடின. கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி (19.02.2025) தொடங்கிய சாம்பியன்ஸ் டிராபி தொடர் இன்று (09.03.2025) நிறைவடைய உள்ளது. அதன் ஒரு பகுதியாக இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் இடையேயான முதல் அரையிறுதி போட்டியில் கடந்த 4ஆம் தேதி (04.03.2025) மோதியது. இதில் இந்திய அணி வெற்றி பெற்றது.
அதனைத் தொடர்ந்து கடந்த 5ஆம் தேதி (05.03.2025) லாகூரில் நடைபெற்ற 2வது அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் நியூசிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டி துபாயில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 251 ரன்களை குவித்தது.
நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக டேரில் மிட்செல் 101 பந்துகளில் 63 ரன்களும், மைக்கேல் பிரேஸ்வெல் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 40 பந்துகளில் 53 ரன்களும், ரச்சின் ரவிந்தரா 29 பந்துகளில் 37 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியில் குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். முகமது சமி, ரவிந்தர ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்களை எடுத்தனர். அந்த வகையில் இந்திய அணிக்கு 252 ரன்களை நீயூசிலாந்து அணி இலக்காக நிர்ணயித்துள்ளது. இதன் மூலம் சாம்பியன்ஸ் டிராபியை வெல்ல இந்திய அணி 252 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்க உள்ளது.

இந்திய அணியில் ரோஹித் ஷர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா,முமமது ஷமி, குல்தீப் யாதவ் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.