
மத்திய அரசு சார்பில், 24 இந்திய மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு சாகித்திய அகாடமி விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை, சால்வை மற்றும் செப்புப் பட்டயம் ஆகியவை வழங்கப்படும். அதே சமயம் ஆண்டுதோறும் சிறந்த படைப்பாளர்கள், இந்திய மொழிகளில் வெளிவரும் சிறந்த படைப்புகளை பிற இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்வோருக்கும் கடந்த 1955ஆம் ஆண்டு முதல் சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்த விருது இந்திய இலக்கியத் துறையில் மிக உயரிய விருதாகக் கருதப்படுகிறது. மேலும் விருது பெறுவோருக்கு ரூ. 1 லட்சம் ரொக்கம் மற்றும் கேடயம் வழங்கப்படுகிறது. அந்த வகையில் 2024ஆம் ஆண்டு சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாடமி விருதுக்கு 21 இந்திய மொழிகளில் இருந்து வெளியான நூல்கள் தேர்வு செய்யப்பட்டன. அதில் ஒன்றாக மலையாள எழுத்தாளர் நளினி ஜமிலா எழுதிய ‘என்ட ஆண்கள்’ என்ற மலையாள நூலை ‘எனது ஆண்கள்’ என்ற தலைப்பில் தமிழில் மொழி பெயர்த்த கல்லூரி பேராசிரியர் விமலா சாகித்திய அகாடமி விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதோடு இந்த நூல் சிறந்த மொழிபெயர்ப்பு நூலாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பேராசிரியர் விமலாவுக்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ 'எனது ஆண்கள்' நூலுக்காக 2024-ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாடமி மொழிபெயர்ப்பு விருதுக்குத் தேர்வாகி இருக்கும் ப. விமலாவுக்கு எனது பாராட்டுகள். கல்விப்புலத்தில் இருந்து இலக்கிய மொழிபெயர்ப்புகளில் ஈடுபடும் தங்களின் பாராட்டத்தக்கப் பணி தொடர வேண்டும் என வாழ்த்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.