புதிய நாடாளுமன்றத்தில் முதல் மசோதாவாக, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, நேற்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவின்படி இட ஒதுக்கீடு வழங்க அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பிறகே இந்த இட ஒதுக்கீட்டுச் சட்டம் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, “மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தில் ஓபிசிக்கு உள் இட ஒதுக்கீடு வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்பும், தொகுதி மறுவரையறை முடிந்த பின்னரே மகளிர் இட ஒதுக்கீடு அமலுக்கு வரும் எனச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. அதனால் மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் 10 ஆண்டுகளுக்கு பிறகே நடைமுறைப்படுத்தப்படும். இதற்குப் பின்னால் பெரிய திட்டம் உள்ளது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க பாஜக தலைமையிலான மத்திய அரசு மறுக்கிறது. மத்திய அரசின் 90 செயலாளர்களில் 3 பேர் மட்டுமே ஓ.பி.சி பிரிவை சேர்ந்தவர்கள். நாட்டின் ஒட்டுமொத்த பட்ஜெட் மதிப்பில் 5 சதவீதம் நிதியை மட்டுமே கட்டுப்படுத்த கூடிய அதிகாரம் பெற்றுள்ளனர் ஒபிசி அதிகாரிகள். நாட்டின் நிதியை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்ற அதிகாரமே ஆதிக்கச் சாதிகளிடம் தான் உள்ளது.
மக்களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்றால் சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும். ஏற்கனவே நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும். மத்திய அரசுத் துறைகளில் ஒபிசி பிரிவினர் எத்தனை பேர் பணியாற்றுகின்றனர் என்ற விவரங்கள் இல்லை. நாட்டின் பெரும்பான்மையான பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எந்த விதமான அதிகாரமும் இல்லை. மத்திய அரசுத் துறைகளில் 3 பேர் மட்டுமே ஓபிசி பிரிவினர் பணியாற்றுவது குறித்து பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும். ஓபிசி பிரிவினர் அதிகாரத்தில் புறக்கணிக்கப்படுகின்றனர். ஒவ்வோர் பிரிவிலும் எத்தனை கோடி பேர் உள்ளனர் என்பதை ஜாதிவாரி கணக்கெடுப்பு மூலமே உறுதி செய்ய முடியும். அதனால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்” என்றார்.