பாலிவுட்டின் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருப்பவர் கங்கனா ரணாவத். தொடர்ந்து சர்ச்சையான கருத்துகளைத் தெரிவித்துவரும் இவர், தற்போது இந்திய சுதந்திரம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்தினை தெரிவித்துள்ளார்.
ஆங்கில ஊடகம் ஒன்றின் ஆண்டு கூட்டத்தில் பேசிய கங்கனா ரணாவத், காங்கிரஸை பிரிட்டிஷாரின் நீட்சி என தெரிவித்தார். தொடர்ந்து இந்திய சுதந்திரத்தைப் பற்றி பேசிய அவர், "அப்போது பெற்றது பிச்சை. உண்மையான சுதந்திரம் 2014ஆம் ஆண்டு கிடைத்தது" என கூறினார்.
கங்கனாவின் இந்தக் கருத்துக்கு கண்டங்கள் குவிந்துவருகின்றன. அதேபோல் பாஜக எம்.பி. வருண் காந்தியும் கங்கனா ரணாவத்தின் கருத்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மகாத்மா காந்தியின் தியாகத்தை சில சமயம் அவமதிக்கிறார். சில சமயம் அவரைக் கொன்றவரைப் புகழ்கிறார். இப்போது மங்கள் பாண்டே, ராணி லக்ஷ்மிபாய், பகத்சிங், சந்திரசேகர் ஆசாத், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் லட்சக்கணக்கான சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தின் மீது வெறுப்பை உமிழ்கிறார். இதைப் பைத்தியக்காரத்தனம் என சொல்வதா அல்லது தேசத்துரோகம் என சொல்வதா?" என கேள்வியெழுப்பியுள்ளார்.