கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மே மாதம் 3- ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். அதேபோல் நாடு முழுவதும் மக்கள் வெளியே சென்றால் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னையில் மாஸ்க் அணியாமல் வெளியே நடந்தால் ரூபாய் 100 அபராதமும், மாஸ்க் அணியாமல் வாகனம் ஓட்டினால், வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். மேலும் மாஸ்க் அணியாத வாகன ஓட்டியின் லைசென்ஸ் ஆறு மாதத்துக்கு சஸ்பெண்ட் செய்யப்படும் என்று கூறியுள்ளார். கரோனா தடுப்பு நடவடிக்கைக்கான புதிய கட்டுப்பாடுகள் உடனே அமலுக்கு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ஊரடங்கின் போது அனுமதிச் சீட்டு பெற்றுச் செல்வோருக்கு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு. அதன் படி, தனி நபர் சாலையில் செல்ல விரும்பினால் பைக்கில் ஒருவர் மட்டுமே செல்லலாம். பைக்கில் பின்னால் யாரும் உட்கார அனுமதியில்லை; காரில் ஓட்டுநருடன் சேர்த்து இரண்டு பேர் மட்டுமே செல்ல அனுமதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.