‘அரசியல் சடுகுடு’ என்ற தலைப்பில் நக்கீரன் நடத்தி வரும் நேர்காணலில் அரசியல் தொடர்பான பல்வேறு கருத்துகளை அரசியல் விமர்சகர்கள் பலர் பேசி வருகின்றனர். அந்த வகையில் திராவிட சிந்தனையாளர், பேச்சாளர் நாஞ்சில் சம்பத், விஜய்யை தாக்கி சீமான் பேசியது குறித்து தனது கருத்துகளை பகிர்ந்துள்ளார்.
சீமானைப் போல் நிறம் மாறும் பச்சோந்தியை தமிழ்நாடு இதுவரை பார்த்திருக்காது. விஜய்யை தம்பி என்று சொல்லிக் கொண்டாடிவிட்டு தற்போது லாரியில் அடிபட்டு செத்துவிடுவாய் என்று சொல்வது வன்மமான பேச்சு. அந்த வன்மத்திற்கு காரணம் விஜய் பல லட்சம் மக்களை ஈர்த்தது தான். சீமானிடம் கும்பல் இருக்கிறது. விஜய்யிடம் கூட்டம் இருக்கிறது. அதனால் கூட்டம் இருக்கிறவர்களைப் பார்த்து கும்பல் வைத்திருக்கும் சீமான் ஆத்திரப்படுவது நியாயமானதுதான். நா.த.க. அங்கீகாரம் பெற்ற கட்சியாக இருந்தாலும் அக்கட்சி நிர்வாகிகள் கட்சியை விட்டு வெளியேறி வருகின்றனர். இதுபோல சீமான் குடித்துவிட்டுப் பேசினால் இனி தொண்டர்களும் கட்சியை விட்டுப் போய்விடுவார்கள். தமிழ்நாடு பிறந்த தினத்தைக் கொண்டாடிய சீமான், தமிழ்நாடு தினம் பற்றி பேசவே இல்லை. மா.பொ.சி, பி. எஸ். மணி, மார்சல் ஏ. நேசமணி, சங்கரலிங்கனார், அறிஞர் அண்ணா உள்ளிட்டவர்களின் தியாகங்களைப் பற்றித்தான் அந்த கூட்டத்தில் பேசியிருக்க வேண்டும். ஆனால் அவர் அதை செய்யவில்லை.
திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றுதான் இதை நிரூபிக்க நான் தயார். ஆரிய மொழி குடும்பத்திற்கு எதிர் திசையில் இருப்பது திராவிட மொழிக் குடும்பம். திராவிட மொழிகளில் உச்சத்தில் இருக்கும் மொழி தமிழ் மொழி. ஜான் மார்ஷல், பரிதிமாற் கலைஞர் ஆகியோர்களைப் பற்றி சீமான் படித்திருந்தால் அவருக்கு திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றுதான் என்று தெரிந்திருக்கும். திராவிடம் பேசி இப்போது கர்நாடகாவிலிருந்து தண்ணீர் கிடைக்கவில்லை என்று சீமான் பேசுகிறாரென்றால் தண்ணீருக்காக ஆயுதம் ஏந்தி அவர் சண்டை போடுவாரா? அதற்கென தனிச் சட்டம் இருக்கிறது அதற்கேற்ப தான் இந்த பிரச்சனைகளை அணுக முடியும். திராவிடத்தை வைத்து விஜய்யை பற்றி சீமான் பேசியிருப்பதை அவர் கண்டுகொள்ளவில்லை.
சீமானுக்கு எதிரியாக இருப்பதற்கு கூட தகுதியில்லை, அவர் காவி கும்பலுக்கு பலியானவர்தான். நடவடிக்கைகளில் வெளிப்படைத் தன்மை இல்லாமலும் அரசியலில் நேர்மை இல்லாமலும் இருப்பவர் சீமான். விஜய் அ.தி.மு.க. கட்சியைப் பற்றி பேசாததற்குக் காரணம் அக்கட்சியே அழிந்து வருவதுதான். அ.தி.மு.க. மற்றும் நா.த.க. ஓட்டுகள் விஜய் பக்கம் கண்டிப்பாக போகும். தி.மு.க.விற்கு எந்தவித பாதிப்பும் வராது. ஏனென்றால் தினம் ஒரு சாதனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார். சோரனூர் ரயில் விபத்தில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 5 துப்புரவுப் பணியாளர்கள் இறந்துவிட்டனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரயில்வே துறையிலிருந்து ரூ. 1 லட்சம் தான் கொடுத்துள்ளனர். ஆனால் முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்த குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் கொடுத்துள்ளார். ஏன் ரூ.1 லட்சம் கொடுத்தீர்கள்? என்று ஒன்றிய அரசை கேள்வி கேட்டாரா சீமான் அல்லது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக வருத்தப்பட்டாரா?
கோவையில் முதல்வர் ஐ.டி. பார்க்கை திறந்து வைக்கவுள்ளார். அதன் பிறகு கரூர், மதுரை என பல்வேறு இடங்களில் திறந்து வைக்கவுள்ளார். இப்படி தினம் ஒரு மக்கள் பணிகளைச் செய்து இந்தியாவிற்கு மாதிரியான அரசை முதல்வர் நடத்திவருகிறார். குறை இருந்தால் விமர்சனம் வரும். அதையும் எதிர்கொள்ள தி.மு.க. தயாராகத்தான் இருக்கிறது. எமர்ஜென்சி காலத்தில் தி.மு.க. ஆட்சியை இழந்துவிட்டது. அன்றைக்கு திராவிட முன்னேற்ற கழகத்தைத் தூக்கி சுமந்தவர்கள் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்கள். ஒருபக்கம் மு.க.ஸ்டாலினை சிறையில் கொலை செய்ய முயற்சி நடைபெற்று வந்தது. அப்போது தி.மு.க.வை இழிவாகப் பலர் பேசினார்கள்.
அதன் பிறகு 1977ல் எம்.ஜி.ஆர். முதலமைச்சரானார். அப்போது 48 இடங்களில் தி.மு.க. வென்றது. அதனால் விஜய்க்காக தி.மு.க. பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. அ.தி.மு.க., நா.த.க., பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் தான் பயப்பட வேண்டும். மதுரையில் நடைபெற்ற ஒரு விவாத நிகழ்ச்சிக்கு நான் சென்றேன். அங்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினைப் பற்றி பேசும்போது நா.த.க. கட்சியைச் சேர்ந்த ஒருவர் மட்டமான வார்த்தைகளைப் பேசினார். அது கலவரத்தைத் தூண்டும் வகையில் இருந்தது. மேடையில் சீமான் தரம் கெட்டு பேசுவதால்தான் அக்கட்சியினரும் இதுபோன்ற தரக்குறைவான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இப்படி பயணிக்கும் நா.த.க. கட்சி 2026வரை இருக்குமா என்பதே கேள்விக் குறிதான்.
பா.ஜ.க. கட்சியிலிருந்து விலகி த.வெ.க.வுடன் பா.ம.க. இணைந்து விடும் அதனால்தான் ராமதாஸ் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். விஜய்யின் மாநாட்டை படப்பிடிப்பு என்று திருமாவளவன் வெளிப்படையாக விமர்சித்துள்ளார். அதனால் அவர் த.வெ.க. பக்கம் திரும்ப வாய்ப்பில்லை. என்னுடைய பார்வையில் 2026 தேர்தல் என்பது உதயநிதி ஸ்டாலினுக்கும் விஜய்க்கும் இடையேயான போட்டிதான்.