கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த மாதம் 31ஆம் தேதி வெளியான படம் அமரன். தமிழ்நாட்டைச் சேர்ந்த மறைந்த முன்னாள் இராணுவ வீரர், மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்கையில் நடந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்கியிருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்று வருகிறது. முதல் நாளில் மட்டும் ரூ.42.3 கோடி வசூலித்ததாக படக்குழு அறிவித்திருந்தது. இதையடுத்து படம் உலகம் முழுவதும் மூன்று நாட்களில் ரூ.100 கோடியை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இப்படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய சிவகார்த்திகேயன் படம் குறித்து நிறைய விஷயங்களை பகிர்ந்திருந்தார். அப்போது அவருடைய தந்தை குறித்து பேசுகையில், “இந்த படத்தில் நிறைய பேர் என்னிடம் சிவகார்த்திகேயனாகவே தெரியவில்லை, படம் முழுக்க முகுந்த் வரதராஜனாத்தான் தெரிகிறாய் என சொன்னார்கள். முகுந்த் வரதராஜன் பற்றி எல்லாருக்கும் தெரியும். ஆனால் நான் என் வீட்டில் பார்த்த ஒரு நபர் இருக்கிறார். என்னுடைய அப்பா. அவர் பெயர் ஜி.தாஸ். சிறை கண்காணிப்பாளராக இருந்தார். எப்போதுமே ஸ்ரிக்டா நேர்மையா இருக்க வேண்டும் என நினைப்பவர். அவரைப் பற்றி சிறை துறையில் இருப்பவர்களிடம் கேட்டால் சொல்வார்கள். கைதிகளிடம் கூட அவர் அன்பாக இருப்பார் என இப்போதும் கூட சொல்கிறார்கள்.
அவருக்கு வேலைதான் ரொம்ப பிடிக்கும். அவர் லீவ் எடுத்து நான் பார்த்ததே கிடையாது. இந்தப் படத்தை எப்படியாவது பண்ணிவிட வேண்டும் என்பதற்கு அவர்தான் முக முக்கியமான காரணம். கடந்த 21 வருடங்களா அவருடைய நினைவுகளோடு மட்டுமே நான் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். அவரை திரும்ப பார்க்கவும், அவராக நான் இருக்கவும் இந்தப் படத்தில் எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதற்காக மொத்த படக்குழுவுக்கும் எனது நன்றிகள். என் அப்பாதான் என்னுடைய முதல் ஹீரோ. அவருக்கும் முகுந்த் வரதராஜனுக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. படத்தின் கிளைமாக்ஸில் வருவது போல, போனில் என்னிடம் லீவ் எடுத்துருக்கேண்டா, வந்துடுவேன்... நீ காலேஜ் முடிச்சிட்டு வா என்றார். ஆனால் நான் போன பிறகு வீட்டில் கூட்டம். அம்மா தரையில் உட்கார்ந்திருந்தார். அந்த தருணத்தில் இருந்து என்னுடைய வாழ்க்கை மாறியது. நிறைய பேர் இந்த வலியை அனுபவித்திருப்பார்கள் என நினைக்கிறேன்.
இந்த படத்தில் வருவது போலவே முதலில் ஃபோன் வந்தது. பின்பு அவரை கொண்டு வந்தார்கள். அவரை பார்த்து பயங்கரமா அழுதேன். அதுமட்டுமில்லை அதற்கு அடுத்த நாள் சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்து அப்பாவுடைய எலும்புகள் நொறுங்கி கிடந்ததை பார்த்தேன். அன்றைக்கு நொறுங்கி போனது அப்பாவுடைய எலும்புகள் மட்டும் இல்லை, 17 வயதுடைய ஒரு பையனின் வாழ்க்கையும்தான். அதுற்கு பிறகு நான் என்ன ஆவேன், என்ன பண்ண போகிறேன் என எதுவும் தெரியாது. ஆனால் நொறுங்கிப் போன அந்த எலும்புகளை ஒட்டிவைத்து அம்மாவையும், அக்காவையும் பார்க்க வேண்டும் என நினைத்தேன். ஆனால் இந்த படம் பண்ணிய பிறகு முதல்வர் பாராட்டுகிறார். துணை முதல்வர் பாராட்டுகிறார். எல்லாரும் பாராட்டிறாங்க. நீங்க எல்லாரும் சேர்ந்து நொறுங்கிப் போன என்னை ஒட்ட வைத்து முழுசா என்னை இங்க நிப்பாட்டிருக்கீங்க. இங்க நான் அமரன் ஹூரோவாகவோ, சிவகார்த்திகேயனாகவோ நிற்கவில்லை. ஜி.தாஸ் என்கிற ஒரு நேர்மையான காவல் அதிகாரியுடைய பையனாக நிற்கிறேன். நிறைய பேர் அப்பா என்றால் ஏன் அழுதுவிடுகிற என்று கேட்பார்கள். அந்த வலி இன்னும் என்னை விட்டு போக மறுக்கிறது.
இந்து ரெபக்கா மாதிரியே என்னுடைய அம்மாவும் அப்பாவுக்கு கொடுத்த விருதை வாங்கினார். இந்தப் பட கிளைமாக்ஸும் என்னுடைய வாழ்க்கையும் ஒன்றுதான். என்னுடைய அப்பாவை பற்றி பயோ பிக்-லாம் என்னால் எடுக்க முடியாது. அது தேவையும் இல்லை. அவரைப் பற்றி சொல்வதற்கு நான் இருக்கிறேன். அந்த இடத்தை கொடுத்த எல்லாருக்கும் பெரிய பெரிய நன்றி” என கண்கலங்கிய படியே பேசி முடித்தார்.