Skip to main content

பாதிரியார் வேடத்தில் கொலையாளி; நாவரசு வழக்கில் திருப்பம் - விவரிக்கும் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ராஜாராம்

Published on 04/11/2024 | Edited on 04/11/2024
ex scp Rajaran interview

28 ஆண்டுகளாக நடைபெற்று வரும் மருத்துவ மாணவர் கொலை வழக்கைப் பற்றிய விவரங்களை ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ராஜாராம் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

1996ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத் துணை வேந்தராக இருந்தவர் பொன்னுச் சாமி அவருக்கு நாவரசு என்ற பையன் இருந்தார். பொன்னுச் சாமி தன் மகனை டாக்டர் படிக்க வைப்பதற்காகச் சிதம்பரத்திலுள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சேர்ந்து விடுகிறார். அந்த கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்குத் தனி விடுதி இருப்பதைப்போல் அடுத்தடுத்தாண்டு மாணவர்களுக்கான விடுதி தனித்தனியாக இருந்துள்ளது. அந்த வருடம் நவம்பர் 10ஆம் தேதி தீபாவளி வரவிருப்பதால் நவம்பர் 6ஆம் தேதியே கல்லூரியிலிருந்து வீட்டிற்கு வர உள்ளதாக நாவரசு தன் அப்பாவிடம் தொலைப்பேசியில் கூறியிருக்கிறான். ஆனால் 6ஆம் தேதி நாவரசு வீட்டிற்கு வரவில்லை. உடனே நாவரசு அப்பா, கல்லூரிக்கு கால் செய்து விசாரித்தபோது அங்கு சரியான விதத்தில் பதில் வராமல் இருந்திருக்கிறது. அதனால் கல்லூரிக்கே சென்று விசாரிக்கத் தொடங்கியிருக்கிறார். அங்குள்ள நாவரசுவின் சக மாணவர்கள் இரண்டு நாட்களாக நாவரசு விடுதியில் இல்லை என்று கூறியிருக்கின்றனர். இதையடுத்து கல்லூரி நிர்வாகத்திடம் நாவரசு வீடு திரும்பாததை பொன்னுச் சாமி தெரிவித்திருக்கிறார். அப்படியிருந்தும் நாவரசு எங்கு இருக்கிறான் என்பது தெரியாமலே இருந்திருக்கிறது. இதனால் அருகிலுள்ள காவல்நிலையத்தில் தன் பையன் காணவில்லை என்று பொன்னுச் சாமி புகார் கொடுத்திருக்கிறார்.

அதன் பிறகு காவல்துறையினர் கல்லூரிக்கு சென்று தங்களது விசாரணையைத் தொடங்கினர். அப்போது நாவரசுவுடன் பயின்ற சக மாணவர்கள், ஜான் டேவிட் என்ற சீனியரிடம் நாவரசு பேசிக்கொண்டிருந்ததையும் ஜான் டேவிட் ஜூனியர்களை கடுமையாக ராகிங் செய்து வந்ததையும் காவல் அதிகாரிகளிடம் கூறியிருக்கின்றனர். பின்பு ஜான் டேவிட் அறைக்கு  காவல் அதிகாரிகள் விசாரிக்க போனபோது ஜான் டேவிட் அறை பூட்டியிருந்திருக்கிறது. காரணம் என்னவென்று ஜான் டேவிட் நண்பர்களிடம் காவல் அதிகாரிகள் கேட்க, அருகிலுள்ள லாட்ஜில் தங்கியிருக்கும் பெற்றோரை ஜான் டேவிட் பார்க்க சென்றதாகவும் மீண்டும் வந்து அறையில் தங்கிவிட்டு ஊருக்குச் சென்றதாகவும் சொல்லியிருக்கின்றனர். இதையடுத்து காவல் அதிகாரிகள் ஜான் டேவிட்டை தேடி அவனின் சொந்த ஊரான கரூருக்குச் சென்று விசாரணை செய்ததில் ஜான் டேவிட் அங்கு இல்லை என்பது தெரிய வந்திருக்கிறது. இதனிடையே தாம்பரத்திலிருந்து சென்னை சிட்டிக்குள் வந்த 21ஜி பேருந்தில் கேட்பாரற்றுக் கிடக்கும் ஒரு சூட் கேஸில் இரத்தம் வடிந்து வருவதை ஒரு நபர் பார்த்திருக்கிறார். அதை அவர் திறந்து பார்த்ததும் ஒரு ஆணின் கை மற்றும் கால் பாகங்கள் இருந்திருக்கிறது. பின்பு காவல்துறை அதிகாரிகளிடம் தெரியப்படுத்தி பிறகு, அவர்கள் அந்த சூட் கேஸில் இருக்கும் உடல் பாகங்கள் யாருடையது என்று விசாரித்து வந்தனர்.

இந்த சம்பவத்திற்குக்கிடையில் ஜான் டேவிட் மன்னார்குடி நீதிமன்றத்தில் தான் ஒரு கொலை செய்ததாக சரணடைந்தார். அதன் பிறகு காவல் அதிகாரிகள், ஜான் டேவிட்டை உடல் ரீதியாக துன்புறுத்தாமல் மன ரீதியாக நம்பிக்கை தந்து நடந்தவற்றை விசாரிக்கத் தொடங்கினர். விசாரணையில் ஜான் டேவிட், ஜீனியர் மாணவர்களை ராகிங் செய்து வந்ததாகவும் நாவரசு பணக்கார வீட்டு பையனாக இருப்பதால் ராகிங் செய்வதற்கு ஒத்துழைப்பு தரவில்லையென்றும் கூறினார். இந்த காரணங்களால் நாவரசை தனியாகத் தனது அறைக்கு அழைத்துச் சென்று சூ லேஸை வாயால் கழற்றவும் சூவை நாவால் நக்கச் சொன்னதாகவும் அதற்கு நாவரசு மறுப்பு தெரிவித்ததால் மிதித்ததாகவும் கூறியிருக்கிறார். மேலும் மிதித்த பிறகு நாவரசு மயக்கும் போட்டு உயிரிழந்த நிலையில், மருத்துவ படிப்புக்காகத் தான் வைத்திருந்த அறுவை சிகிச்சை உபகரணங்களை வைத்து நாவரசின் உடல்களைத் தனித் தனித் பாகங்களாக வெட்டியதாகவும் சொன்னார். அதோடு நாவரசு உடைமைகள் மற்றும் தலையை ஒரு கவரிலும் உடல் பாகத்தை ஒரு சூட் கேஸிலும் கை மற்றும் கால்களை மற்றொரு சூட் கேஸிலும் வைத்து அப்புறப்படுத்தியதாகக் கூறினார்.

இதையடுத்து காவல் அதிகாரிகள், நாவரசு உடல் பாகங்கள் எங்கிருக்கிறது என்று ஜான் டேவிட்டிடம் கேட்டபோது, தலை பாகத்தையும் நாவரசின் உடைமைகளையும் ஆட்டோவில் சென்று அருகிலுள்ள குளத்தில் போட்ட பிறகு சிதம்பரத்திற்குச் சென்றதாகவும் அங்கிருந்து இரயில் ஏறிப் போகும்போது ஒரு ஆற்றுப் பாலத்தில் உடல் பாகம் இருந்த சூர் கேஸை போட்டதாகவும் கூறினார். மேலும் கை, கால் பாகத்தை சென்னையில் ஒரு பேருந்தில் வைத்துவிட்டதாகவும் கூறினான். அதன் பிறகு ஜான் டேவிட் சொன்ன இடங்களுக்குச் சென்று காவல் அதிகாரிகள் தேடிப் பார்த்ததில் சென்னையில் மீட்கப்பட்ட உடல் பாகங்களோடு சேர்த்து மற்ற பாகங்கங்களும் மீட்டுள்ளனர். இதையடுத்து அந்த உடல் பாகங்கள் நாவரசின் உடல்களா? என்பதைக் கண்டறிய ஹைதராபாத்தில் டி.என்.ஏ. சோதனை செய்யப்பட்டிருக்கிறது. அதில் நாவரசு உடல் தான் என்று உறுதியான பிறகு, குற்றப்பத்திரிக்கையைத் தயார் செய்து கடலூர் நீதிமன்றத்தில் காவல் துறையினர் தாக்கல் செய்துள்ளனர். அந்த வழக்கில் ஜான் டேவிட்டுக்கு இரண்டை ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக 2001ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜான் டேவிட் மேல்முறையீடு செய்தார். அந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம், நேரடி சாட்சிகள் போதுமான அளவிற்கு இல்லையென்று ஜான் டேவிட்டை விடுதலை செய்யக்கோரி உத்தரவிட்டது.

விடுதலைக்குப் பிறகு ஜான் டேவிட் வெளியே வந்து கிறிஸ்தவ பாதிரியாராக மாறினார். அதோடு மட்டுமில்லாமல் மேற்படிப்புகளையும் படிக்கத் தொடங்கினார். இதற்கிடையில் ஜான் டேவிட்க்கு கிடைத்த விடுதலையை காவல்துறையினர் ஜீரணிக்க முடியாமல் உச்சநீதிமன்றத்தில் நாவரசு வழக்கை விசாரிக்க மனு அளித்தனர். இந்த வழக்கு 2011ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகையில் சந்தர்ப்ப சாட்சிகள் ஜான் டேவிட்க்கு எதிராக இருந்ததால் ஒரு வருட ஆயுள் தண்டையாக மாற்றி தீர்ப்பளிக்கப்பட்டது. இதையடுத்து 2018ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். நூற்றாண்டு வருகையின்போது நல்ல நடத்தையுடன் இருக்கும் ஆயுள் தண்டனை கைதிகளை அரசு விடுவிக்கும் பட்டியலில் ஜான் டேவிட் பெயர் இல்லாததால் அவரின் அம்மா எஸ்தர், தன் மகன் நல்ல நடத்தையுடன் தான் இருக்கிறார் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜான் டேவிட்டை விடுதலை செய்யக்கோரி மனு அளிக்கிறார். அந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மீண்டும் ஜான் டேவிட் அம்மா, 2022ஆம் ஆண்டு கலைஞர் நூற்றாண்டு விழா வருவதால் ஜான் டேவிட்டை விடுதலை செய்யக்கோரி மனு அளித்தார். அந்த சமயத்திலும் ஜான் டேவிட்டுக்கு விடுதலை கிடைக்கவில்லை. பிறகு மீண்டும் ஜான் டேவிட் அம்மா, உச்சநீதிமன்றம் சென்று மகனை விடுதலை செய்யக்கோரி மனு கொடுத்துள்ளார். அந்த மனு சமீபத்தில் விசாரணைக்கு வருகையில் தற்காலிகமாக ஜான் டேவிட்க்கு ஜாமீன் வழங்கி அவரை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து மீண்டும் பரிசீலிக்கும்படி அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர் என்றார்.