Skip to main content

“சீமானைப் பார்க்க மறுத்து, விசிகவுக்கு வலை விரித்த விஜய்” - வல்லம் பஷீர்!

Published on 04/11/2024 | Edited on 04/11/2024
Vallam Bashir  interview

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், அக்கட்சியின் முதல் மாநாட்டில் பேசியது அரசியலில் பேசுபொருளாக மாறியிருக்கும் நிலையில், இது தொடர்பாக திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீரை நக்கீரன் வாயிலாக பேட்டி கண்டோம். அப்போது அவர் தன்னுடைய்ட கருத்துகளை நம்மோடு  பகிர்ந்துகொண்டார்.   

தி.மு.க. எதிர்ப்பை முன்னிலையாக வைத்து விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார். இது பா.ஜ.கவின் அஜெண்டாக்களில் ஒன்றுதான். பா.ஜ.க.வின் சாயலாக தமிழ்நாட்டுக்கு வந்தால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது விஜய்க்கு அரசியல் கற்றுத் தருபவர்கள் சொல்லியிருக்கக்கூடிய செய்தி. அதுதான் யதார்த்தமான உண்மை. தமிழ் தேசிய குரலில் விஜய் வந்தால் சீமானின் நிலைமையைப் பார்த்து ஓரளவிற்கு யூகித்திருப்பார். சீமான் பலமுறை விஜய்யைப் பார்க்க அவகாசம் கேட்டபோது, அவரைப் பார்க்க விஜய் மறுத்திருக்கிறார். எனவே தமிழ் தேசியமும் பா.ஜ.க. முன்வைக்கும் அரசியலும் எடுபடாது என்பதை உணர்ந்த விஜய், தி.மு.க. எந்த கருத்தியலைப் பேசுகிறதோ அதைத் தானும் பேசி தி.மு.க.வுக்கு எதிராக இயங்கி மூன்றாவது கட்டமைப்பை உருவாக்கிவிடலாம் என்று விஜய் நினைத்துள்ளார்.

பெரியார், அம்பேத்கரைப் பற்றி விஜய் பேசுவது விந்தையாகத்தான் இருக்கிறது. பெரியாரின் கடவுள் மறுப்பு கொளையை விஜய் ஏற்கவில்லை என்கிறார்.  ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று அண்ணா பேசியிருந்தாலும் கடவுள் நம்பிக்கையை நிச்சயமாக அவர் ஏற்கவில்லை. பெரியார் நியூமரிக் அடிப்படையில் மாநாடு நடத்தினாரா? ஆனால் விஜய், வி.சாலை, விவேக சாலை, வியூக சாலை என்று யாரோ ஒரு ஜோசியக்காரர் சொன்னதை வைத்து மாநாட்டை நடத்தியிருக்கிறார். இப்படி செய்ய பெரியார் கற்றுக்கொடுத்தாரா?  பகுத்தறிவைப் பற்றி விஜய் பேசத் தயாராக இருக்கிறாரா? பாசிசம் என்றால் என்னவென்று விஜய்க்குத் தெரியுமா? கெளரி லங்கேஷ், முகமது அக்லாக் ஆகியோரை படுகொலை செய்தது பாசிசம். மாற்றுக் கருத்து பேசுபவர்களை அமலாக்கத்துறை வைத்து சிறையில் அடைப்பது பாசிசம். இதுபோல தமிழ்நாட்டில் எங்கேயாவது நடந்திருக்கிறதா? எதை விஜய் பாசிசம் என்று சொல்கிறார். 

ஊழலுக்கு எதிராகப் பேசுகிறோம் என்று விஜய் பேசியிருக்கிறார். தமிழ்நாட்டில் எல்லோருக்கும் தெரியும் ஊழல் செய்து யார் சிறை சென்றார்களென்று தி.மு.க. தலைவர்கள் ஊழல் செய்து சிறை சென்றார்களா? 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு சுக்குநூறாக கிழித்துத் தொங்கவிடப்பட்டது. பொருளாதாரத்தில் மிகப்பெரிய தவறு நடந்திருக்கிறது என்று ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிட்டது. இது சம்பந்தமாக மாதவி புரிபுச் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை இதெல்லாம் ஊழல் பட்டியலில் வராதா?. சாலை அமைப்பதற்கு ஒரு தொகையை ஒன்றிய அரசு நிதி ஒதுக்கியதற்குப் பிறகு அதைவிட அதிக ஒரு பெரும் தொகையைச் செலவு செய்துவிட்டு ஒரு நிறுவனம் கணக்குக் காட்டியது. இது தொடர்பாக சி.ஐ.ஜி தனது அறிக்கையில் மிகப்பெரிய ஊழல் நடந்திருக்கிறது என்று சொன்ன பிறகும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, அந்த நிறுவனத்தை மிகச்சிறந்த நிறுவனம் என்று பாராட்டு பத்திரம் வாசித்தார்.

இந்த ஊழல் எல்லாம் ஊழல் கணக்கில் வராதா? ஊழலுக்கு எதிராகப் பேசுகிறேன் என்று சொல்லிவிட்டு தி.மு.க. மீது விஜய் கல்லெறிவது அயோக்கியத்தனம். இதையா பெரியார் சொல்லித் தந்தார். ஆளுநர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது ஏற்பட்ட சர்ச்சைக்குக் கண்டன அறிக்கை விடாமல் எந்த படப்பிடிப்பில் விஜய் ஒளிந்து கொண்டிருந்தார். அனிதா மரணத்திற்குப் பிறகு இத்தனை ஆண்டுகளாக விஜய் என்ன செய்துகொண்டிருந்தார். அனிதாவின் மரணத்திற்கு காரணமாக இருந்த நீட் தேர்வை எதிர்த்து முழுமையான எதிர்ப்பை காட்டி மக்கள் புரட்சியாக மாற்றியது திராவிட முன்னேற்ற கழகம். ஆனால், தி.மு.க. எதிர்ப்பை காட்டிவிட்டு பா.ஜ.க. பற்றி ஒரு வார்த்தையும் பேசாமல் விஜய் கண்ணீர் விட்டது முதலைக் கண்ணீர் என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள். எனவே பெரியாரின் லட்சியத்தை உள்வாங்கிக் கொண்டு விஜய் அரசியலில் பயணிக்கத் தகுதியற்றவர் அவருக்கான இடத்தை 2026 தேர்தலில் மக்கள் தேர்வு செய்வார்கள்.  

அம்பேத்கரை கட் அவுட்டில் வைத்தது ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று விஜய் சொன்னது வி.சி.க. கட்சிக்கு விரித்த வலை தான். ஆனால் திருமாவளவன் இடது கையால் விஜய்யைத் தள்ளியிருக்கிறார். விஜய் ஒரு கத்துக்குட்டி தனக்கு இதைப்பற்றிச் சொல்லித்தர வேண்டிய அவசியம் இல்லையென்பதை நயமாக அறிக்கை மூலம் திருமாவளவன் சொல்லிவிட்டார். விஜய் ஒரு தேர்தலைக்கூடச் சந்திக்கவில்லை. தேர்தல் நடைமுறைகளைப் பற்றி மாநாட்டில் விசிலடித்த தம்பிமார்களுக்குத் தெரியுமா? அதற்குள் ஆட்சி அதிகார பங்கைப் பற்றி விஜய் பேசுகிறார். எம்.ஜி.ஆர். விஜய்யைப்போல திரைப்படத்தில் நடித்துவிட்டு நேரடியாக அரசியலுக்கு வரவில்லை. முதலில் அவர் தி.மு.க.வின் பொருளாளர், தி.மு.க.வுடன் போராட்ட களத்தில் இருந்தார், சிறை சென்றார், அமைச்சர்களைத் தேர்வு செய்யக்கூடிய முக்கியமான பொறுப்பில் எம்.ஜி.ஆர். இருந்தார். இப்படி பல்வேறு படிநிலைகளைக் கடந்து தி.மு.க.வின் கலைஞராக திரைத்துறையில் வெளிப்பட்டார். உதயசூரியன் சின்னத்தையும், கருப்பு, சிகப்பு கொடியையும் தன் படங்களில் காட்சிப்படுத்தியிருந்தார். விஜய் தன்னை எம்.ஜி.ஆரோடு  ஒப்பிட்டுக்கொள்ளக்கூடாது. அதே போல் ஜெயலலிதாவையும் ஒப்பிடக்கூடாது. அந்த அம்மா முதலில் கொள்கை பரப்புச் செயலாளராகவும் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். அதன் பின்பு பொதுச்செயலாளர் ஆகி முதல்வர் பதவிக்கு வந்தார். கமல்ஹாசன் கூட பெரியார் சிந்தனைகளை தன் படங்களில் பேசியிருக்கிறார். ஆனால் அவரே இப்போது எடுபடாமல் போய்விட்டார். பெரியாரைக் கொள்கை தலைவராக ஏற்றுக்கொண்ட விஜய், அவரது படங்களில் பெரியாரின் கருத்துகளைப் பேசியிருக்கிறாரா? விஜய் உண்மையிலேயே கூத்தாடி தான். கூத்தாடியாக இருப்பது தவறில்லை. ஆனால் கூத்தாடியாக இருந்துவிட்டு நேரடியாகத் தலைவர் ஆகி முதலமைச்சர் ஆவேன் என்று சொல்வதுதான் தவறு என்றார்.