வட மாநிலங்களில் அண்மைக் காலமாக வாரத்திற்கு இரண்டு முறையாவது ரயில் விபத்து சம்பவங்கள் நடப்பது வாடிக்கையாகவே மாறிப் போனது. மத்திய ரயில்வே நிர்வாகத்தின் அலட்சியப் போக்கே இது போன்ற ரயில் விபத்திற்கு காரணம் என்ற கண்டனங்களும் எழுந்து வருகின்றன.
ஆனால் அதைவிட அதிர்ச்சியானது தேசத்தின் தென்கோடி மாநிலமான தமிழ்நாட்டின் அருவிகளின் மாவட்டமான தென்காசியின் முன்னணி ரயிலான ஸ்பீட் ஃபாஸ்ட் பெதிகை எக்ஸ் பிரஸ் ரயிலைக் கவிழ்ப்பதற்காக இரண்டு தடவை நடத்தப்பட்ட நாசவேலையிலிருந்து அது அதிர்ஷ்டவசமாக டிரைவர்களின் சாமர்த்தியத்தால் தப்பியிருப்பது தான், மாவட்டத்தில் பரபரப்பையும், ரயில்வே பயணிகளின் அச்சத்தையும் பீதியையும் கிளப்பியிருக்கிறது.
பொதிகையைக் கவிழ்க்க நடந்த இரண்டு சதித்திட்டங்களுக்குமிடையே கால தூரம் அதிகமில்லை. ஒரு மாத இடைவெளிக்குள்ளேயே அடுத்தடுத்து நடத்தப்பட்டு அதிர்ஷ்ட வசமாகத் தப்பியது தான் பிரம்மாச்சர்யம் என்கிறார்கள் பரவலாக. சென்னை – தென்காசியின் செங்கோட்டை ஸ்பீட் ஃபாஸ்ட் அதிவிரைவு ரயிலான பொதிகை எக்ஸ்பிரஸ், இந்த ரயில்வே வழித்தடத்தின் ஒரே சிங்கிள் ஃபாஸ்ட் சர்வீஸ் என்பதால் சென்னை, மற்றும் செங்கோட்டை மார்க்கங்களில் பயணிகள் கூட்டம் எப்போதுமே நிறைந்து வழிகிற தன்மையுடையது. அதே சமயம் இந்த வழித்தடத்தில் அடுத்தடுத்து ரயில்களின் சர்வீஸ் அவ்வளவாகக் கிடையாது என்பதால் குறிப்பான இந்த லைன் மட்டும் அத்தனை கவனிப்புகள், முன்னெச்சரிக்கைகளுமிருக்காது என்பது கவனிக்கப்பட்ட வேண்டிய விஷயம்.
அக் 31 தீபாவளி அன்று தென்காசி மாவட்டத்தின் செங்கோட்டை நகரிலிருந்து மாலை 6.25 மணியளவில் நெரிசலோடு ஸ்பீட் ஃபாஸ்ட் பொதிகை எக்ஸ் பிரஸ் ரயில் சென்னைக்குக் கிளம்பியிருக்கிறது. இரவு 7.00 மணி தாண்டியபோது இந்த ரயில் மாவட்டத்தின் கடையநல்லூர் ரயில் நிலையத்தையடுத்த போகநல்லூர் ரிமோட் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, தண்டவாளத்தின் நடுவே பெரிய பாறாங்கல் வைக்கப்பட்டிருப்பதைப் கவனித்து விட்ட ரயின் இன்ஜின் டிரைவரான மாடசாமி பதற்றத்திலும் நிதானமாகவும், சாமாத்தியமாகவும் செயல்பட்டு ரயிலை நிறுத்தியிருக்கிறார். இரவு நேரம் காட்டுப்பகுதியில் காரணமில்லாமல் ரயில் நிறுத்தப்பட்டது கண்டு பயணிகள் அதிர்ந்திருக்கிறார்கள். தொடர்ந்து வேகமாகச் செயல்பட்ட இன்ஜின் லோகோ பைலட்டான மாடசாமியும் பணியாளர்களும் அந்தப் பளுவான பாறாங்கல்லைப் புரட்டி அப்புறப்படுத்தி விட்டு வரவிருந்த மிகப்பெரிய ஆபத்திலிருந்து தப்பியது, தவிர்க்கப்பட்ட நிம்மதியில் சில நிமிடங்களுக்குப் பின்பு ரயிலை தொடர்ந்து இயக்கியிருக்கிறார்.
ரயில் இன்ஜின் ஒட்டுனர் மாடசாமி நடந்தவைகளைப் பற்றி ரயில்வே உயர் அதிகாரிகள், மற்றும் திருச்சி டிவிசன் அதிகாரிகளுக்கும் விரிவான தகவல் கொடுத்திருக்கிறார். இதையடுத்து திருச்சி டிவிசன் ரயில்வே எஸ்.பி.ராஜன், தலைமையில் நெல்லை டிவிசன் ரயில்வே டி.எஸ்.பி.இளங்கோவன் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே இன்ஸ்பெக்டர், ரயில்வே போலீசார் அடங்கிய டீம், சம்பவ ஏரியாவைப் பார்வையிட்டு பலகோணங்களில் விசாரணையை மேற்கொண்டிருக்கின்றனர்.
இந்த ரயில் கவிழ்ப்பு சதி வேலை சம்பவம், கடையநல்லூர் ஏரியாவை மட்டுமல்ல தென்மாவட்டத்தையே உலுக்கியிருப்பதற்கு காரணம், நடந்த சதிச் சம்பவம் முதல் முறையல்ல. இதே போன்று மிகச் சரியாக 35 நாட்களுக்கு முன்பு பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலைக் குறிவைத்துக் கவிழ்ப்பதற்கு இதேபோன்ற நாசவேலை நடந்திருக்கிறது. தற்போது இது இரண்டாவது தடவையாக பொதிகையைக் குறிவைத்து நடத்தப்பட்ட சதி வேலை என்பது தான் பதறவைக்கிற விஷயம்.
கடந்த செப்-26 அன்று பொதிகை எக்ஸ்பிரஸ் இதே நேரத்தில் செங்கோட்டையிலிருந்து நிரம்பிய பயணிகளுடன் புறப்பட்டது. (தற்போதைய சம்பவ இடத்தையும் சற்று தாண்டி வடபகுதியில்) 7.20 மணிக்கு பொதிகை கடையநல்லூர்-பாம்புக்கோவில் சந்தை-சங்கரன்கோவில் ரயில்வே லைனில் சங்கனாப்பேரி அருகில் வந்து கொண்டிருந்த போது தண்டவாளத்தில் பெரிய பாறாங்கல் வைக்கப்பட்டிருந்ததைக் கவனித்துவிட்ட ரயில் இன்ஜின் டிரைவர் பாலசங்கரன் மிகவும் சாதுர்யமாக செயல்பட்டு ரயிலை நிறுத்தியவர் சிலர் உதவியுடன் பாறாங்கல்லை அப்புறப்படுத்தி விட்டு அரைமணி தாமதத்திற்குப் பின் மீண்டும் ரயிலை இயக்கியிருக்கிறார். நடந்தவைகளை முறையாக தன் உயர் அதிகாரிகளுக்குத் தெரிவித்திருக்கிறார்.
அது சமயம் இதே திருச்சி டிவிசன் ரயில்வே எஸ்.பி.ராஜன் மற்றும் நெல்லை டி.எஸ்.பி.இளங்கோவன் தலைமையிலான தனிப்படையினர் சம்பவ இடத்தை ஆய்வு செய்து அக்கம்பக்க கிராமங்களில் விசாரணையை மேற் கொண்ட போது, சங்கனாப்பேரி போகநல்லூர் பகுதிகளின் கல்குவாரிகளில் வேலை பார்க்கிற வடநாட்டுத் தொழிலாளர்கள் பற்றிய தகவல் கிடைத்திருக்கிறது. அவர்கள் அத்தனை பேர்களையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்த போது, அங்கு வேலை பார்த்த சட்டீஸ்கர் மாநிலத்தின் ஜகல்பூர் பாஸ்டர் பனராபாரா நகரின் புல்சிங்பாகல் மற்றும் ஜகல்பூர் பாஸ்டர் மத்னா நகரைச் சேர்ந்த ஈஸ்வர், மேடியா என்கிற இரண்டு தொழிலாளர்கள் என்பது விசாரணையில் தெரியவர எஸ்.பி.யின் தனிப்படையினர் அவர்களை கைது செய்திருக்கிறார்கள்.
பிடிபட்ட வடநாட்டுத் தொழிலாளர்கள் இருவரும் ரீல்ஸ் மோகத்தால் மாலை வேளையில் தண்டவாளத்தில் பெரிய பாறாங்கல்லை வைத்து அதில் நின்றபடி செல்ஃயி, வீடியோ எடுத்தவர்கள், அந்தப் பாறாங்கல்லை அப்புறப்படுத்தாமல் சென்று விட்டனர். தாங்கள் எடுத்த ரீல்ஸ் வீடியோவை தங்களின் மாகாணத்தின் சமூக வலை தளங்களில் வைரலாக்கியவர்கள் தங்கள் செல்போனில் பதிவு செய்த அந்த வீடியோவை அழித்து விட்டார்கள் என்பன போன்றவைகள் எங்களின் விசாரணையில் தெரியவந்தது. அந்த வட நாட்டுத் தொழிலாளர்கள் இருவரும் ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தது ரயில்வே எஸ்.பி. தலைமையிலான தனிப்படை.
இதையடுத்து தான், தற்போது அதே போன்றதொரு தண்டவாளத்தில் பாறாங்கல் வைப்பு சதி சம்பவம் நடந்தது தெரியவர அதிர்ச்சியான அதே எஸ்.பி.ராஜனின் தலைமையில் அந்த விசாரணை டீமே, குற்றவாளிகளைத் தேடி விசாரணையில் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்த நிலையில் தான் ஏரியாவின் லா அண்ட் ஆர்ட்ர் போலீசார் மத்தியில் இந்த சம்பவம் விவாதங்களை கிளப்பி பரபரப்பாக்கியிருக்கிறது. கவனிக்கப்பட வேண்டிய அந்த விவாதங்களைப் பற்றி காவல்துறையின் ஒரு சீனியர் குற்றவியல் அதிகாரி ஒரு வரிடம் பேசிய போது அவர் அதில் மறுக்க முடியாத லாஜிக்கான நுணுக்கமான விஷயங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
ரயிலைக் கவிழ்க்க தண்டவாளத்தில் பாறாங்கல் வைக்கப்பட்ட சதியின் முதல் சம்பவத்திலேயே புலன் விசாரணையில் அனுபவமில்லாத ரயில்வே போலீசார் விசாரணையைச் சரியான திசையில் கொண்டு செல்லவில்லை. தலைவலியான இந்தக் கேஸை சரியாக விசாரிக்காமல் ஃபைலை விரைவில் மூடிக் க்ளோஸ் செய்ய வேண்டும் என்ற மூடிலேயே செயல்பட்டவர்கள் சம்பவ இடம் அருகே வேலை செய்த குவாரியின் வடநாட்டுத் தொழிலாளர்கள் தான் குற்றவாளிகள் என்று தீர்மானித்து மூடி விட்டார்கள் போலத் தெரிகிறது. அதற்கு அவர்கள் ஆதாரமாக வலுவானதைக் காட்டவில்லை. அந்த ஆதாரம் அழிக்கப்பட்டது என்பது அவர்களின் விசாரணை. அந்த தொழிலாளர்கள் தமிழ் தெரியாத இந்தி மட்டுமே தெரிந்தவர்கள் என்பது அவர்களின் அரைகுறை விசாரணைக்குத் தோதாகி விட்டது.
ஏன் இதனைக் குறிப்பிடவேண்டிய கட்டாயம் என்றால், ரயில்வே போலீசாரின் விசாரணைப்படி அவர்களின் விசாரணையில் சம்பவமும், குற்றவாளிகளிகளும் உண்மைக் குற்றவாளிகள் என்றால் அந்தச் சம்பவம் அத்தோடு முடிந்திருக்கவேண்டும், அது தொடரக் கூடாது. ஆனால் அந்த சம்பவம் போன்றே தற்போது பாறாங்கல் வைப்பு சம்பவம் மீண்டும் நடந்திருக்கிறதே. எனவே அவர்களிடம் சிக்கியவர்களும், சம்பவத்தின் நோக்கமும் உண்மையானதல்ல. நிஜமில்லை. என்ற சந்தேகம் கிளம்புகிறது. தவிர பாறாங்கல் வைப்பு சதி சம்பவம் வெறும் ரீல்ஸ்மோகமில்லை. ரயிலைக் கவிழ்க்கிற சதி அல்லது வேறு பெரிய குற்றச் சம்பவத்திற்கான காரணமும் இருக்கலாம் என்று நிச்சயம் கருதவேண்டியதுள்ளது. சம்பவத்தின் உள்நோக்கம் பயங்கரமான நாச வேலையாகக் கூட இருக்கலாம். அந்த எண்ணத்தில் புலன் விசாரணையைக் கொண்டு செல்ல வேண்டும்.
உதாரணமாக ஒரு குற்றச் சம்பவம் ஒரு இடத்தில் நிகழ்ந்து விட்டால், புலன் விசாரணை அதிகாரியின் விசாரணை எப்படிப் போகிறது. நம்மை நெருங்குகிறார்களா?. என்று உண்மைக் குற்றவாளிகள் நிச்சயம் நோட்டமிடுவார்கள், பதுங்கியிருப்பார்கள், சில நாட்கள் காத்திருப்பார்கள், போலீஸ் சரியான குற்றவாளிகளைக் கைவைத்து விட்டால் விவகாரமில்லை. மாறாக தொடர்பில்லாத குற்றவாளிகளைக் கணக்கில் காட்டி விட்டால், காத்திருந்த உண்மைக்குற்றவாளிகள், போலீஸ் நம்மீது சந்தேகப்படல... என்கிற கணக்கில் சில நாட்கள் போக்குக் காட்டிவிட்டு முதலில் நடத்திய சம்பவத்தைப் போன்றே திரும்பவும் நடத்திவிடுவார்கள். இது தான் குற்றத் தன்மையின் அடிப்படை. அப்படி நடக்கும் பட்சத்தில் முதலில் பிடிபட்டவர்கள் உரிய குற்றவாளிகள் அல்ல என்பது கணக்காகி விடும். அப்படித்தான் வெளிப்படுத்துகின்றன நடந்த சதிச் சம்பவங்கள்.
ஆக நடந்த சம்பவங்களை ஆராயும் போது, குற்றவாளிகளுக்கு மிகப் பெரிய குற்ற நோக்கம் இருக்கிறது. அது பயங்கரமாகவும் இருக்கக் கூடும். எனவே சம்பவத்தின் உள்நோக்கங்களை ஆழமாகக் கவனிக்கவேண்டும். ஆயிரக்கணக்கான மக்களின் பயணப் பாதுகாப்பில் எந்தவித சமரசமும், கூடவே கூடாது. அது பெரிய ஆபத்தில் முடிந்துவிடும். நடக்க விருக்கும் பயங்கரங்களைத் தடுப்பதில் தான் இருக்கிறது போலீசாரின் புலன் விசாரணை என்றார் அந்த அதிகாரி.