/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/preist-nagamuthu-art.jpg)
தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் அருகே இருக்கும் டி.கள்ளிப்பட்டியை சேர்ந்த சுப்புராஜ் மகன் நாகமுத்து இவர், கைலாசபட்டியில் உள்ள கைலாச நாதர் கோயிலில் பூசாரியாக இருந்து வந்தார். இந்த நிலையில் தான் கோயிலில் கடை ஒதுக்குவது தொடர்பாக தலித் சமூகத்தைச் சேர்ந்த நாகமுத்துவுக்கும் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் தம்பியும் பெரியகுளம் நகர்மன்றத் முன்னாள் தலைவரான ஓ. ராஜாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதில் பூசாரி நாகமுத்து தாக்கப்பட்டார். அதனால் மனம் உடைந்து தான் கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி நாகமுத்து தற்கொலை செய்து கொண்டார்.
இவரை தற்கொலைக்கு தூண்டியதாக கோயில் அறங்காவலராகவும், பெரியகுளம் முன்னாள் நகர சபை தலைவராகவும் இருந்த ஓ. ராஜா, தென்கரை பேரூராட்சி முன்னாள் தலைவர் பாண்டி உள்பட 7 பேர் மீது தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுப்படி கடந்த 2015 டிசம்பர் மாதம் முதல் இந்த வழக்கு திண்டுக்கல் மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே பாண்டி இறந்து விட்டார். மீதமுள்ள 6 பேர் மீதான வழக்கு விசாரணை திண்டுக்கல் மாவட்ட பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஓ. ராஜா, மணி மாறன், சிவகுமார், ஞானம், லோகு, சரவணன் ஆகியோர் நிபந்தனையற்ற ஜாமீன் பெற்று இருப்பதால் வழக்கு விசாரணையின் போது திண்டுக்கல் பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி வருகின்றனர். இந்த வழக்கில் 23 சாட்சியங்கள் விசாரணை செய்யப்பட்டுள்ளனர். மேலும், 4 தடயங்கள் சாட்சியங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு அரசு தரப்பின் இறுதி கட்ட வாதத்திற்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/op-raja-art.jpg)
இந்நிலையில், இந்த வழக்கு இன்று (05.11.2024) விசாரணைக்கு வந்தது. இதில் ஒ. ராஜா ஆஜராகவில்லை. அரசு தரப்பில் இறுதி கட்ட விளக்க உரையானது நடைபெற்று முடிவடைந்தது. இதனையடுத்து நீதிபதி, வழக்கின் தீர்ப்பை நவம்பர் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். மேலும் அன்றைய தினம் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஓ. ராஜா உட்பட 6 நபர்களும், அரசு மற்றும் எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)