திருநெல்வேலி மாவட்டம், இடிந்தகரை கிராமத்தைச் சேர்ந்த 28 மீனவர்கள் ஈரான் நாட்டிற்குச் சென்று மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். இத்தகைய சூழலில் தான், மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி பஹ்ரைன் கடலோரக் காவல் படையினரால் கடந்த செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி (11.09.2024) கைது செய்யப்பட்டனர். பஹ்ரைன் கடலோரக் காவல் படையினரின் இந்த கைது நடவடிக்கையின் காரணமாக, மீனவர்களும் அவர்களது குடும்பத்தினரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து இடிந்தகரை மீனவர்கள் 28 பேருக்கும் 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு பஹ்ரைன் சிறையில் அடைக்கப்பட்டனர். இது தொடர்பாகச் சட்டப்பேரவை தலைவரும், ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினருமான அப்பாவு தமிழக அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்தார். அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட மீனவர்களை விரைவில் விடுவிப்பதற்குத் தேவையான சட்ட உதவிகள் மற்றும் தூதரக உதவிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில் ஈரானில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் தண்டனை பாதியாக குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறைத் தண்டனை 3 மாதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் தண்டனை காலம் முடிவடைந்து டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களும், மீனவர்களின் குடும்பத்தினரும் சற்று நிம்மதி பெருமூச்சு அடைந்துள்ளனர்.