Skip to main content

இனி சமூக நீதி குறித்து எப்படி பேசமுடியும்? அதிமுக - பாமகவை தாக்கிய தலைவர்கள்

Published on 26/02/2019 | Edited on 26/02/2019



 

தஞ்சாவூரில் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற சமூக நீதி மாநாட்டில் கலந்துகொண்ட அனைத்து அரசியல் கட்சிகளும் பாஜக - அதிமுக - பாமக கூட்டணியை கடும் விமர்சனம் செய்தனர்.  
 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், 
 

''அதிமுகவுக்கு எந்த கொள்கையும் குறிக்கோளும் கிடையாது என அனைவரும் சொல்கிறார்கள். அது உண்மை கிடையாது. அவர்களுக்கும் ஒரு கொள்கை இருக்கிறது. தினமும் பெட்டி பெட்டியாக பணத்தை வாங்கி குவிக்க வேண்டும் என்பதுதான் அந்த கொள்கை. பணத்திற்காக அவர்கள் எதையும் செய்ய துணிவார்கள். அதன் அடிப்படையில் தான் மதவெறி கட்சியான பாஜகவோடு கூட்டணி சேர்ந்து, நாட்டையும் நாட்டுமக்களையும் நாசப்படுத்துகின்றனர்.
 

அவர்களோடு அதே குறிக்கோளுடைய பாமகவும் கூட்டு சேர்ந்துள்ளது. வன்னியர் சமுக மக்களின் காவலர் என கூறிவரும் மருத்துவர் ராமதாஸ் ஒரு செய்தியை பகிரங்கமாக பதிவு செய்தார். அதில், "நானோ, என் குடும்பத்தினரோ தேர்தலில் போட்டியிட மாட்டோம். அப்படி ஒருவேளை நிகழ்ந்தால் என்னை முச்சந்தியில் நிறுத்தி சவுக்கால் அடியுங்கள்" என்றார். அவரின் குடும்பமே போட்டியிட போகிறது. போட்டியிட்டது. இப்போ அவரை என்ன செய்யலாம்? என்பதை உங்களின் கருத்தாகவே விடுகிறேன்" என முடித்தார்.
 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த அருணன்,
 

"கார் உள்ளளவும், பார் உள்ளளவும், தமிழ் உள்ள அளவும், திராவிடர் கட்சிகளோடு கூட்டு சேர மாட்டோம் என்று கூறிவிட்டு தற்போது கூட்டு சேர்ந்து விட்டது பாமக. அவர்கள் சமூக நீதியின் காவலர்கள் அல்ல, சமுநீதியின் துரோகிகள்" என்றார்.
 

தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசுகையில், "சமூக நீதிக்கு காரணமாக இருந்த காங்கிரஸ் கட்சி, திராவிடர் கழகம், அதனை ஒட்டிய திராவிட முன்னேற்ற கழகம், எப்போதுமே மக்கள் மீது அக்கறைக்கொண்ட பொதுவுடமைக் கட்சிகள் இருக்கிற அணியில் இல்லாமல், சனாதன தர்மத்தை ஆதரிக்கின்ற பாரதிய ஜனதா கட்சி இருக்கிற அணியில் சமூகநீதி பேசுகிற பாட்டாளி மக்கள் கட்சி சேருகிறது என்று சொன்னால், அவர்களின் சந்தர்ப்பவாதம் என்ன என்பது நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. 
 

தங்களுடைய கொள்கைகளை அவர்களே குழிதோண்டி புதைத்துவிட்டார்கள், அவமானகரமான நிலைமையை அந்த கட்சி எடுத்துவிட்டது. இதற்குமேல் சமூக நீதி குறித்து எப்படி பேசமுடியும், அதில் வெற்றி கொள்ள முடியும். சமூக நீதிக்காக போராடுகிறவர்கள் என சொல்லிக் கொள்கிறவர்கள் இவ்வளவு சந்தர்ப்பவாதமாக நடந்து கொண்டால் அவர்களுக்கு அரசியலில் கருத்துகள் என்பது முக்கியமல்ல, சுயநலம் மட்டுமே முக்கியம் என்பதுதான் தெளிவாகத் தெரிகிறது" என்று முடித்தார்.
 

meeting


 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், ''தேர்தல்தான் முக்கியம், வெற்றிதான் முக்கியம் என்றால் பாரதிய ஜனதாவோடும் கூட்டணி வைக்க முடியும். பாட்டாளி மக்கள் கட்சியோடும் கை கைகோர்த்துக் கொள்ள முடியும். இந்தியாவிலேயே இப்படி உள்ள இரண்டு கட்சிகளின் பெயரைச் சொல்லி இவர்களோடு கூட்டணி சேரமாட்டோம் என்று சொல்லுகிற துணிச்சல் விடுதலை சிறுத்தைகளுக்கு மட்டுமே உள்ளது'' என்றார்.
 

காதர்மொய்தீன் பேசுகையில். "மத்திய அரசுக்கு இபிஎஸ் துணை போகிறார். கூடா நட்பு கேடாய் முடியும் என்பார்கள். அதுபோல் இப்போதுள்ள அதிமுக புலி வேட்டைக்கு சென்று வெறிநாயுடன் வந்துள்ளது. மத்தியில் கொடுமையான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஆட்சிக்கு காவடி தூக்கி வரும் ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. மக்களை மக்களாக மதிக்கக்கூடிய ஆட்சி மத்தியிலும், மாநிலத்திலும் வரவேண்டுமானால் பாஜக விரட்டியடிக்கப்பட வேண்டும். 'கோ பேக் மோடி' என்ற வாசகத்தை வார்த்தையில் மட்டும் சொல்லாமல் வாக்குகளாக மாற்றிக் காட்ட வேண்டும்" என்று முடித்தார்.

 

சார்ந்த செய்திகள்