Skip to main content

“அரசியல் எதிரிகள் கற்பனைச் சிறகுகளைப் பறக்கவிட்டு அலாதி இன்பம் கண்டனர்” - முதல்வர்!

Published on 25/05/2025 | Edited on 25/05/2025

 

cm mk stalin says Political enemies have spread their wings of imagination and found immense pleasure

அரசியல் எதிரிகள் கற்பனைச் சிறகுகளைப் பறக்கவிட்டு அலாதி இன்பம் கண்டனர் என திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அக்கட்சியின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “இந்திய ஒன்றியத்தின் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நடைபெற்ற மாநில முதலமைச்சர்கள் பங்கேற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தலைநகர் டெல்லிக்கு, தமிழ்நாட்டின் முதலமைச்சராக நான் செல்கிறேன் என்ற செய்தி வெளியானதுமே, அரசியல் எதிரிகளின் அடிவயிற்றில் புளி கரைத்தது போன்ற உணர்வு ஏற்பட்டு, வழக்கம்போல வன்மத்தை வெளிப்படுத்தத் தொடங்கினார்கள்.“இத்தனை ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் இந்த முறை கலந்து கொள்வது ஏன்?” என்றும், “டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை நடத்திய ரெய்டுகளில் கிடைத்துள்ள ஆவணங்களால் எதிர்கொள்ளக்கூடிய நடவடிக்கைகளிலிருந்து தப்பிப்பதற்காகத்தான் பிரதமர் மோடியைச் சந்திக்க முதலமைச்சர் செல்கிறார்” என்றும், “வெள்ளைக் கொடி ஏந்திச் செல்கிறார்” என்றும் கற்பனைச் சிறகுகளைப் பறக்கவிட்டு, அலாதி இன்பம் கண்டனர் அரசியல் எதிரிகள்.

தி.மு.க.வைப் பொறுத்தவரை இன்றல்ல நேற்றல்ல, அரை நூற்றாண்டுக்கு முன்பே பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். “ஆதரவளிப்பதாக இருந்தாலும், எதிர்ப்பதாக இருந்தாலும் தன் நிலையில் உறுதியாக இருக்கும் இயக்கம் தி.மு.க.” என்பது இந்தியாவின் பிரதமராக இருந்த இரும்புப் பெண்மணியின் சொற்கள். பிரதமர் வாஜ்பாய், பிரதமர் மன்மோகன் சிங் போன்ற பண்பட்ட அரசியல் தலைவர்களும் தி.மு.க.வின் நிலைப்பாட்டை நன்கு அறிந்தவர்கள்.இந்தியாவின் எதிர்கால வளர்ச்சி குறித்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசிப்பதற்கான நிதி ஆயோக் கூட்டம் என்பதாலும், இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பங்கு மிக முக்கியமானதாகக் கடந்த 4 ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் நிலைப்பெற்றிருப்பதாலும், தமிழ்நாட்டு மக்களின் பிரதிநிதியாக - மாநிலத்தின் முதலமைச்சராக நானும் அதில் பங்கேற்கத் தீர்மானித்தேன். அதற்கான அறிவிப்பும் வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டு, ஊடகங்களில் வெளியானது.

குடும்பச் சொந்தங்கங்கள் மீதும் வியாபாரக் கூட்டாளிகள் மீதும் தமிழ்நாட்டிலும் கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களிலும் ஒன்றிய அரசின் புலனாய்வு நிறுவனங்கள் ரெய்டு நடத்தியதும், சொந்தக் கட்சியினர் உள்பட யாருக்கும் தெரியாமல் அவசரமாக டெல்லிக்குப் பறந்து சென்று, அங்கு மீடியாக்கள் சூழ்ந்து கொண்டதும், கட்சி அலுவலகத்தைப் பார்க்கப் போகிறேன் என்று பம்மாத்து செய்து, நான்கு கார்கள் மாறி மாறி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவைப் பார்த்து, தன்னையும் தன்னை நம்பியுள்ள தொண்டர்களின் அடையாளமான கட்சியையும் ஒட்டுமொத்தமாக அடமானம் வைத்துக் கூட்டணி அமைத்தவர், என்னுடைய டெல்லிப் பயணம் குறித்து ஏதேதோ அளந்துவிட்டதை இரசித்தபடியே டெல்லிக்குப் புறப்பட்டேன்.பிரதமர் மோடி  தலைமையில் நடந்த கூட்டத்தில் பல மாநில முதலமைச்சர்களும் பங்கேற்ற நிலையில், அனைவரையும் அவர் வரவேற்றிட, முதலமைச்சர்களும் பிரதமருடன் இயல்பாக அளவளாவினர். மாநிலங்களின் பங்களிப்பு இல்லாமல் இந்தியாவின் வளர்ச்சி இல்லை என்பதைத் தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், இந்தக் கூட்டம் அதற்கேற்ற வகையில் இருந்ததையும் உடன்பிறப்புகளான உங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

2045-ஆம் ஆண்டில் 30 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியை நோக்கி இந்தியா பயணிக்க வேண்டும் எனத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அதில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 4.5 டிரில்லியன் டாலராக இருக்கும் என்பதைப் பிரதமரிடம் தெரிவித்தேன். அதாவது, தற்போது இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 10% அளவிற்கு உள்ளது. அது 15% அளவிற்கு அமையும் என்பதையும், அதற்கேற்ற மாநிலமாகத் தமிழ்நாட்டை திராவிட மாடல் அரசு முன்னெடுத்திருக்கிறது என்பதையும் இந்தியத் தலைநகரில் பெருமையுடனும் நம்பிக்கையுடனும் தெரிவிக்க முடிந்தது.தமிழ்நாடு எப்போதும் இந்தியாவின் வளர்ச்சிக்கான குருதியோட்டமாக இருப்பதை நாடு நன்கறியும். குறிப்பாக, தி.மு.கழக ஆட்சி அமையும்போதெல்லாம் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியுடன் இணைந்த அளவிலான மாநில வளர்ச்சியை முன்னெடுப்பது வழக்கமாக உள்ளது. அதுபோலவே, இந்தியாவின் பாதுகாப்பு என்று வரும்போது எவ்வித சமரசமுமின்றி, நாட்டின் ஒற்றுமைக்காகத் தன்னை அர்ப்பணிக்கும் உண்மையான தேசப்பற்று கொண்ட இயக்கமாகத் தி.மு.கழகம் இருப்பதைப் பேரறிஞர் அண்ணா காலத்திலிருந்தே நாடு கண்டு வருகிறது.

cm mk stalin says Political enemies have spread their wings of imagination and found immense pleasure

கலைஞரும் அதே வழியைத்தான் மேற்கொண்டார். பேரறிஞர் அண்ணா, கலைஞர் வழியில்தான், இந்திய எல்லை மாநிலமான காஷ்மீரில் ஊடுருவி, அப்பாவிச் சுற்றுலாப் பயணிகளை ஈவிரக்கமின்றி கொன்ற தீவிரவாதிகளின் கொடுஞ்செயலுக்குச் சட்டமன்றத்தில் கண்டனம் தெரிவித்ததுடன், தீவிரவாத ஒழிப்பிற்காக இந்திய இராணுவம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவாக இருப்போம் என்பதை வெளிப்படுத்தும் வகையில் சென்னையில் முதலமைச்சரான உங்களில் ஒருவனான என் தலைமையில் பேரணியும் நடைபெற்றது. பா.ஜ.க ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களே இத்தகைய பேரணியை நடத்தவில்லை என்றும், தி.மு.க. அரசு ஏன் நடத்துகிறது என்று உள்நோக்கத்துடன் வைக்கப்பட்ட விமர்சனங்களைப் புறந்தள்ளி, கூட்டணிக் கட்சியினர் பங்கேற்புடனும், முன்னாள் படைவீரர்கள், பல்வேறு அமைப்பினர், பொதுமக்கள் பங்கேற்புடனும் அந்தப் பேரணி வெற்றிகரமாக நடந்து நம் ஒற்றுமையை வெளிப்படுத்தியது. இந்தியாவில் தீவிரவாதத்திற்கு இடமில்லை என்பதை வெளிநாடுகளில் வலியுறுத்தும் குழுக்களில், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்றுள்ள இந்திய குழுவுக்குத் தலைமை தாங்கிச் சென்று, தன் பங்களிப்பை சிறப்பாக செய்து வருகிறார் கழகத்தின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும் கழகத் துணைப் பொதுச்செயலாளருமான  கனிமொழி எம்.பி.

அரசியல் நிலைப்பாடு என்பது வேறு. அரசுடன் நாட்டின் நலன் கருதி ஒத்துழைப்பது என்பது வேறு. அந்த வகையில்தான், பிரதமர் தலைமையில் நடைபெற்ற இந்தியாவின் எதிர்கால வளர்ச்சி குறித்த மாநில முதல்வர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று, தமிழ்நாட்டின் நிலையைத் தெரிவித்ததுடன், பிரதமர் அவர்களிடம் தமிழ்நாட்டிற்கான திட்டங்களையும், நிலுவையில் உள்ளவற்றையும் நேரடியாகவே வலியுறுத்தினேன். நாட்டின் நலனை எப்படி தி.மு.க. விட்டுக்கொடுக்காதோ, அதுபோல மாநில உரிமைகளையும் ஒருபோதும் விட்டுக் கொடுக்காது. மிரட்டலுக்கு அடிபணிந்து கட்சியை அடமானம் வைக்கும் வழக்கம் நம்மை விமர்சனம் செய்பவர்களின் தனிப்பட்ட உரிமையாக இருக்கிறது. நமக்கோ, மாநில உரிமையே முதன்மையானதாக உள்ளது. அதில் எவ்வித சமரசமுமின்றி, நீதிமன்றத்தில் சட்டப்போராட்டத்தை நடத்தி வெற்றி கண்டு வருகிறோம்.

cm mk stalin says Political enemies have spread their wings of imagination and found immense pleasure

அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சி.பி.ஐ. போன்றவை தி.மு.கவினரைக் குறி வைத்ததுபோல இந்தியாவில் வேறு எந்தக் கட்சியையும் குறிவைத்ததில்லை. அவற்றைத் துணிவுடன் எதிர்கொண்டு சட்டரீதியான போராட்டத்தின் மூலம்தான் வென்று வருகிறோமே தவிர, எதிர்க்கட்சியைப் போல அடிமை சாசனம் எழுதிக் கொடுத்ததில்லை. அதுவும் அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த டாஸ்மாக் முறைகேடுகள் தொடர்பான எஃப்.ஐ.ஆர்.கள் சம்பந்தமாக அமலாக்கத்துறை நடத்திய ரெய்டுக்குத் தி.மு.க. ஏன் சமரசம் செய்ய வேண்டும்? அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள் சட்டமீறலானவை என்பதை உச்சநீதிமன்றக் கருத்துகள் மூலம் உறுதி செய்திருக்கும் அரசுதான் திராவிட மாடல் அரசு. எத்தனை முறை விளக்கமளித்தாலும் எதிரிகள் பழைய மாவையே புளிக்கப் புளிக்க அரைத்துக் கொண்டிருப்பார்கள். திருந்தவோ, வருந்தவோ மாட்டார்கள். தமிழ்நாட்டு மக்கள் அவர்களை விரும்பவும் மாட்டார்கள். 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் திராவிட மாடல் ஆட்சியே தொடரும் என்ற உறுதியை மக்கள் எடுத்துள்ளனர். அவர்களுக்கான பணியை மேற்கொள்வதே நம் கடமை” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்