
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்துள்ள பருத்திபுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் அரக்கோணம் அரசு மகளிர் கல்லூரி கல்லூரியில் படித்து வருகிறார். இவர் கடந்த மாதம் 1ஆம் தேதி சோளிங்கர் அடுத்துள்ள கொடைக்கல் கிராமத்தில் அமைந்துள்ள மலைக்கோவிலில் தெய்வச்செயல் (அப்போது தி.மு.க. நிர்வாகி) என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் அவர் மீது பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகளை அப்பெண் முன்வைத்திருந்தார். எனவே பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகளுக்குத் தெய்வச்செயல் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும்,தன்னை வற்புறுத்தி மற்றவர்களுக்கு பாலியல் ரீதியாக இரையாக்க முற்பட்டு வருகிறார் எனவும் குற்றம் சாட்டியிருந்தார்.
இது தொடர்பாக அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 10ஆம் தேதி 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதோடு தெய்வச்செயல் சுமார் 20 பெண்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் செய்துள்ளார் என்ற மற்றொரு புகாரையும் பாதிக்கப்பட்ட இளம்பெண் தெரிவித்திருந்தார். இந்த புகார் மீதும் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இச்சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்வலையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. அதே சமயம் திமுகவின் அரக்கோணம் மத்திய ஒன்றிய இளைஞர் அணித் துணை அமைப்பாளராகப் பொறுப்பு வகித்து வந்த தெய்வச்செயலை அப்பொறுப்பில் திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி நீக்கியிருந்தார்.
மேலும் இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் சென்னை டிஜிபி அலுவலகத்திலும் புகார் அளித்திருந்தார். இருப்பினும் இந்த விவகாரத்தில் காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், காவல்துறையினர் தன்னை மிரட்டுவதாகவும், கண்ணிய குறைவாக நடத்துவதாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதே சமயம் அதிமுகவின் தூண்டுதலின் பேரில் பெண்கள் புகார் அளித்ததாகவும் தனக்கு முன்ஜாமீன் வேண்டும் எனவும் தெய்வச்செயல் மற்றும் அவரது மனைவி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து தெய்வச்செயலுக்கும் அவரது மனைவிக்கும் முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற உத்தரவிட்டிருந்தது.
மற்றொரு புறம் தன்னுடைய புகார் குறித்து மனு அளிப்பதற்காக சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு அப்பெண் வந்திருந்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டார். இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று (25.05.2025) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “அரக்கோணத்தில் ஒரு பெண்ணுக்கு அவலநிலை ஏற்பட்டுள்ளது. அந்த பெண், காவல் நிலையத்திலே புகார் கொடுக்கின்றார். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி அந்த பெண் கொடுத்த புகாரை அப்போதே எப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும். ஆனால் அந்த பெண் 7ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கின்றார். 10ஆம் தேதி தான் புகாரைப் பதிவு செய்கின்றார்கள்.

புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள நபர் தெய்வச்செயல் என்ற பெயர் பத்திரிக்கையில் வந்த செய்தி. அவர் மீது சாதாரண பிரிவின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. அவர் நீதிமன்றத்தை அணுகுகின்றார். உடனே ஜாமீன் கிடைக்கின்றது. அதே சமயம் பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகார் பத்திரிக்கையிலும், ஊடகத்திலும்,சமூக வலைத்தளத்திலும் வெளியிட்டிருக்கின்றார்கள். இது எவ்வளவு பெரிய கொடுமை. வழக்கு சம்பந்தப்பட்ட புகார் கொடுத்தவர்கள் இதை வெளியிடக்கூடாது. ஆனால் காவலர்கள், அந்த பெண்மணி கொடுத்த அந்த புகார்கள் அப்படியே ஊடகத்திலும், சமூக வலைத்தளங்களிலும் வந்ததாக அந்த பெண்மணி பேட்டி அளித்திருக்கின்றார்.
அதோடு தனக்கு ஏற்பட்ட கொடுமைகளை ஆளுநரிடம் தெரிவிப்பதற்காகச் சென்னை சென்றிருக்கின்றார். அவருடைய தாயாருடன் அங்கே சென்றவுடன் அங்கே இருக்கின்ற காவலருக்கு இது தெரிய வருகிறது. அதன் பின்னர் ஆளுநரைச் சந்திக்க விடாமல் தடுத்து நிறுத்தி அந்த பெண்மணியும் அவரோடு வந்த தாயாரையும் ஆட்டோவில் 2 பெண் காவலர்களை ஏற்றி வழியிலேயே இறக்கி விடுகின்ற கொடுமை இந்த ஆட்சியிலே தான் பார்க்கப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.