Skip to main content

பேருந்துக் கட்டணத்தை மறைமுகமாக உயர்த்தி மக்களைக் கொள்ளையடிப்பதா? தமிழக அரசுக்கு ராமதாஸ் கண்டனம்

Published on 24/10/2018 | Edited on 24/10/2018
govt bus



பேருந்துக் கட்டணத்தை மறைமுகமாக உயர்த்தி மக்களைக் கொள்ளையடிப்பதா? என்று தமிழக அரசுக்கு பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 

தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளின் கட்டணங்கள் மறைமுகமாக உயர்த்தப்பட்டுள்ளன. தனியார் பேருந்துகளின் சட்டவிரோதக் கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டிய அரசே சட்டவிரோதமாக பேருந்துக் கட்டணத்தை உயர்த்துவது கண்டிக்கத்தக்கது.
 

சென்னையில் தொடங்கி கன்னியாகுமரி வரை இந்த கட்டண உயர்வு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 40 கி.மீ முதல் 150 கி.மீ வரை இயக்கப்படும் சாதாரண பேருந்துகளில் 50% பேருந்துகள் விரைவுப் பேருந்துகள் என மாற்றம் செய்யப்பட்டு அவற்றில் 25% கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதேபோல், 150 கி.மீ தொலைவுக்கும் கூடுதலாக இயக்கப்படும் சாதாரண பேருந்துகள் டீலக்ஸ் பேருந்துகள் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு 20% வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக செய்திகள் வந்துள்ளன.
 

சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு சாதாரண பேருந்துகளில் இதுவரை ரூ.152 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், இப்போது 15%, அதாவது ரூ.23 உயர்த்தப்பட்டு, ரூ.175 வசூலிக்கப் படுகிறது. திருவண்ணாமலை - விழுப்புரம், திருவண்ணாமலை-சேலம், திருப்பதி - திருவண்ணாமலை, காஞ்சிபுரம்- திருவண்ணாமலை மார்க்கங்களிலும் 15% கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.  வேலூரிலிருந்து திருவண்ணாமலை வரையிலான கட்டணம் 20% அதாவது 72 ரூபாயிலிருந்து ரூ.86ஆக உயர்ந்துள்ளது. நகரப் பேருந்துகளில் பெரும்பாலானவை குறிப்பிட்ட நிறுத்தங்களில் மட்டுமே நின்று செல்லும் எல்.எஸ்.எஸ் (LSS) வகை பேருந்துகளாக அறிவிக்கப்பட்டு, ஒரு ரூபாய் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
 

தமிழ்நாட்டில் கடந்த  ஜனவரி மாதம் தான் 100% வரை பேருந்துக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. ஆனால், கட்டண உயர்வால் அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு வருவாய் அதிகரிக்கவில்லை. மாறாக குறைந்து விட்டது. காரணம், உயர்த்தப்பட்டக் கட்டணங்கள் மிகவும் அதிகமாக இருந்ததால், அரசுப் பேருந்துகளில் பயணம் செய்து வந்த பலரும் தொடர்வண்டி, தானி, வேன்களுக்கு மாறிவிட்டது தான். இப்போதும் கட்டணம் உயர்த்தப்பட்ட மார்க்கங்களில் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளின் வருவாய் அதிகரிப்பதற்கு பதில்  குறையத் தான் போகிறது. தனியார் பேருந்துகளில் ஏராளமான வசதிகளுடன் குறைந்த கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. ஆனால், அடிப்படை வசதிகள் கூட இல்லாத அரசுப் பேருந்துகளை டீலக்ஸ் பேருந்தாக அறிவித்து கூடுதல் கட்டணம் வசூலித்தால், அதை நம்பி தங்களின் பணத்தைக் கொட்டி பயணம் செய்து ஏமாறுவதற்கு தமிழக மக்கள் தயாராக இல்லை.   
 

டீசல் விலை உயர்வால் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகின்றன என்பது உண்மை தான். இந்த நெருக்கடியை சமாளித்து போக்குவரத்துக் கழகங்களை லாபத்தில் இயக்குவதில் தான் ஆட்சியாளர்களின் நிர்வாகத் திறன் வெளிப்படும். அதற்கு மாறாக,  டீசல் கட்டணம் உயரும் போதும், போக்குவரத்துக் கழகங்கள் இழப்பை சந்திக்கும் போதும் பேருந்து கட்டணத்தை மறைமுகமாக உயர்த்துவதென்பது நிர்வாகத் திறன் அல்ல. மாறாக எந்தத் தொலைநோக்கும் இல்லாமல் செலவுக்கு ஏற்றவாறு வரவை அதிகரிக்க கட்டணத்தை உயர்த்துவதென்பது வரவு&செலவு  கணக்கில் மட்டும் கவனம் செலுத்தும் மேஸ்திரியின் செயலுக்கு இணையானதாகும். இது நல்லதல்ல.
 

தமிழ்நாட்டில் பல இடங்களில் அரசுப் பேருந்துகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட சாதாரணக் கட்டணத்தை விட குறைந்த கட்டணத்தையே தனியார் பேருந்துகள் வசூலிக்கின்றன. இதன் மூலம் அதிக பயணிகளை ஈர்த்து அதிக வருவாயையும், கூடுதல் லாபத்தையும் ஈட்டுகின்றன. அதேநேரத்தில் அரசுப் பேருந்துகள் மழை பெய்தால் ஒழுகுபவையாகவும்,  காற்றடித்தால் மேற்கூரை பறந்து செல்லுபவையாகவும் இருப்பதால் அதில் பயணம் செய்யவே மக்கள் தயங்குகின்றனர். இத்தகைய சூழலில் இப்போது நடைமுறைக்கு வந்துள்ள சட்டவிரோத கட்டண உயர்வு ஏழை மற்றும் நடுத்தர மக்களை அரசுப் பேருந்துகளில் பயணம் செய்வதிலிருந்து விலக்கியே வைக்கும். இது போக்குவரத்துக் கழகங்களின் வீழ்ச்சியை விரைவுபடுத்தும்.
 

கடந்த ஜனவரி மாதத்தில் பேருந்துக் கட்டணங்கள் அளவுக்கு அதிகமாக உயர்த்தப்பட்டதால் அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் மக்களில் 30 விழுக்காட்டினர் வேறு வகையான போக்குவரத்துகளுக்கு மாறினர் என்பது அரசுக்கு கற்பிக்கப்பட்ட பாடம் ஆகும். இதை உணர்ந்து, கடந்த காலங்களில் விலகிச் சென்ற பயணிகளை மீண்டும் அரசுப் பேருந்துகளுக்கு அழைத்து வருவது மட்டுமே அரசுப் போக்குவரத்துக் கழகங்களை வலிமைப்படுத்தும்; மாறாக, சட்டவிரோத கட்டண உயர்வுகள் அவற்றை சிதைத்து விடும்.


எனவே, அரசுப் பேருந்துகளின் வகைப்பாட்டை மாற்றி உயர்த்தப்பட்ட கட்டணங்களை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். அரசுப் பேருந்துகளில் காணப்படும் குறைகளை களைந்து, மக்கள் ஆதாரவை  மீண்டும் பெற்று போக்குவரத்துக் கழகங்களை லாபத்தில் இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 
 

 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த்தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு; ராமதாஸ் கண்டனம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Ramdas said mixing of cow dung in the drinking water tank of Sangamviduthi panchayat is reprehensible

சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சங்கம்விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவண்டான் தெருவில் பட்டியலின மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள்  அதிர்ச்சியளிக்கின்றன. பொதுமக்கள் குடிப்பதற்கான குடிநீர்த் தொட்டியில்  மாட்டுச்சாணம் கலக்கப்பட்டது மனிதநேயமற்றது மட்டுமின்றி, மனிதத் தன்மையற்ற செயலாகும்.  இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சில நாட்களுக்கு முன்பாகவே மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருக்கக் கூடும் என்று தெரியவந்துள்ளது. அத்தொட்டியிலிருந்து விநியோகிக்கப்பட்ட குடிநீரை குடித்த குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்த போது தான் இந்த உண்மை வெளிவந்திருக்கிறது. மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான குடிநீர்த் தொட்டியில் இது போன்ற மிருகத்தனமான செயல்கள் நடப்பதைக் கண்காணிக்க வேண்டியதும், ஒவ்வொரு நாளும் குடிநீர் மக்கள் பயன்படுத்தத் தக்க வகையில் பாதுகாப்பாக இருக்கிறதா?  என்பதை ஆய்வு செய்ய வேண்டியதும் அரசின் பணி. ஆனால், இந்த இரு கடமைகளிலும் திராவிட மாடல் அரசு தோல்வியடைந்து விட்டது.

தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குடிநீர் தொட்டிகளில் மலம், மாட்டுச்சாணம் போன்றவற்றை கலக்கும் நிகழ்வுகள் அதிகரித்து விட்டன. அதிலும் குறிப்பாக பள்ளிகளிலும், பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளிலும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்வது மிகுந்த கவலையும், வேதனையும் அளிக்கிறது. பட்டியலின மக்களுக்கு எதிராக இத்தகைய கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அவற்றைத் தடுக்க தமிழக அரசு தவறி விட்டது.

வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்து இன்றுடன் 17 மாதங்களாகி விட்டன. ஆனால்,  அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது தான் இத்தகைய கொடுமைகள் மீண்டும், மீண்டும் நிகழ்வதற்கு காரணம் ஆகும். வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக அரசு இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல்  குற்றவாளிகளை அடையாளம் கண்டு, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சாணம் கலக்கப்பட்ட நிகழ்வும் வேங்கைவயல் நிகழ்வு எந்த அளவுக்கு கொடூரமானதோ, அதே அளவுக்கு கொடூரமானது. அனைவரும் மனிதர்கள் தான். பிடிக்காதவர்களை பழிவாங்குவதற்காக இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் மன்னிக்கப்படுவதற்கு தகுதியற்றவர்கள். இந்த நிகழ்வின் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

‘கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கம்’ - போக்குவரத்துத் துறை தகவல்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Transport Department Information for Additional Special Bus Operation

முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் மக்கள் தொடர்பு இணை இயக்குநர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “இன்று வெள்ளிக்கிழமை முகூர்த்த நாள் (26/04/2024) என்பதாலும், நாளை சனிக்கிழமை (27/04/2024) மற்றும் நாளை மறுநாள் ஞாயிறு (28/04/2024) என வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று (26/04/2024) 280 பேருந்துகளும், நாளை (27/04/2024) 355 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. அதே போன்று சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று (26/04/2024) மற்றும் நாளை (27/04/2024) 55 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, தினசரி இயக்கக் கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இன்று அன்று 280 பேருந்துகளும் மற்றும் நாளை 355 பேருந்துகளும், கோயம்பேட்டிலிருந்து 55 பேருந்துகளும் மேற்கண்ட இடங்களிலிருந்தும் மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வார இறுதி நாளான இன்று 9 ஆயிரத்து 276 பயணிகளும், நாளை 5 ஆயிரத்து 796 பயணிகளும் மற்றும் நாளை மறுநாள்  8 ஆயிரத்து 894 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் மொபைல் செயலிமூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் இந்த வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள தெரிவிக்கப்படுகிறது” எனக் கூறப்பட்டுள்ளது.