Skip to main content

சிறுவன் மரணத்தில் உரிய விளக்கம் கிடைக்கவில்லை...காரைக்காலில் கடையடைப்பு போராட்டம்

Published on 09/09/2022 | Edited on 09/09/2022

 

Shop closure protest in Karaikal; The boy paased away was unexplained
மாதிரி படம் 

 

காரைக்காலில் தனது மகளை விட அதிக மதிப்பெண்கள் எடுத்ததாகக் கூறி சிறுவனுக்கு விஷம் கலந்த குளிர்பானத்தை கொடுத்த வழக்கில் சகாயராணி விக்டோரியா என்பவர் கைது செய்யப்பட்டார். மருத்துவமனையில் அந்த மாணவர் உயிரிழந்த நிலையில் மாணவரின் குடும்பத்தார், குற்றவாளியைக் கைது செய்தாலும் மருத்துவமனையின் அலட்சியத்தால் தான் சிறுவன் உயிரிழந்ததாகப் போராட்டம் நடத்தினர்.

 

பல்வேறு அமைப்புகளும் சிறுவன் உயிரிழந்தது தொடர்பாக போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த நிலையில் புதுச்சேரி அரசு மூன்று மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக் குழு ஒன்றை அமைத்து சிறுவன் மரணம் தொடர்பான அனைத்து விவரங்களையும் சேகரிக்க ஆணையிட்டது.

 

மேலும் மூன்று மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக்குழு சிலதினங்கள் முன்  தங்களது அறிக்கையை மருத்துவத்துறை இயக்குநரிடம் சமர்ப்பித்தனர். அறிக்கையில் கூறப்பட்டுள்ளதை ஆய்வு செய்து உரிய அறிக்கை இயக்குநர் சார்பில் நேற்று வெளியானது.

 

 இந்நிலையில் மாணவருக்கு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டதாக விசாரணை செய்த மருத்துவர்கள் கூறியுள்ளதாக புதுச்சேரி அரசு சுகாதாரத்துறை இயக்குநர் நேற்று தெரிவித்தார்.

 

இந்நிலையில் இன்று புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. காரைக்காலில் 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இருக்கின்றனர். அத்தனை பேருக்கும் காரைக்கால் அரசு பொது மருத்துவமனை  என்ற ஒரு மருத்துவமனை மட்டுமே இருந்தும் அங்கு பணிபுரியும் மருத்துவர்கள் அங்கு பணியாற்றாமல் புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதை கண்டித்து இன்று மாவட்டம் முழுவதும் கடை அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து புதுச்சேரி அரசு அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியது. இருந்தபோதும் தங்களுக்கு உரிய விளக்கம் கிடைக்கவில்லை என கூறி  இன்று மாவட்டம் முழுதும் கடை அடைப்பு போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.

 

10000 க்கும் அதிகமான சிறிய நடுத்தர கடைகள் அடைக்கப்பட்டன. பாதுகாப்பு கருதி அந்த பகுதியில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் விடுவிப்பு!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Tamil Nadu fishermen released from Sri Lankan jail

தமிழக மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. இத்தகைய சூழலில் மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் காரைக்காலைச் சேர்ந்த 19 மீனவர்கள் கடந்த மார்ச் 6 ஆம் தேதி (6.03.2024) மீன் பிடிக்க கடலுக்குச் சென்றிருந்தனர். இவ்வாறு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் தடுத்து நிறுத்தினர். மேலும், மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி கைது செய்தனர். அதோடு மீனவர்கள் பயன்படுத்திய 2 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அதே சமயம் மீனவர்கள் 19 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், மயிலாடுதுறையைச் சேர்ந்த 9 பேர், புதுக்கோட்டையைச் சேர்ந்த 4 பேர், புதுச்சேரி, காரைக்காலில் இருந்து 6 பேர் என மொத்தம் 19 மீனவர்கள் இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அதன் பின்னர் இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அப்போது மீனவர்களை தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் பொன்னாடை போர்த்தி வரவேற்று, அரசின் சார்பில் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். 

Next Story

தந்தை உயிரிழந்த போதும் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி!

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
 student who wrote her 12th class exam despite  passed away of her father

கடலூர் சூரப்ப நாயக்கன் சாவடி பகுதியைச் சேர்ந்த ரத்தினவடிவேல். இவர் ஓய்வு பெற்ற அளவையர். இவர் வெள்ளிக்கிழமை(15.3.2024) காலை உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்தார்.  இவரது மகள் ராஜேஸ்வரி வயது 16 இவர் கடலூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.  இவருக்கு வெள்ளிக்கிழமை இயற்பியல் தேர்வு இருந்துள்ளது.

தந்தை உயிரிழந்ததை பார்த்து கதறி அழுத்துள்ளார். ஒரு கட்டத்தில் அவர் தன்னை திடப்படுத்திக் கொண்டு  இயற்பியல் தேர்வு எழுத செல்வதாக கூறி தேர்வு எழுதும் பள்ளிக்கு சென்றுள்ளார். இவரை பார்த்து அங்கிருந்த சக மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மாணவிக்கு ஆறுதல் கூறி ஊக்கமளித்தனர்.

இதனை தொடர்ந்து அவர் பள்ளியில் இயற்பியல் தேர்வு எழுதினார். பின்னர் தேர்வு முடிந்த பிறகு அவரது தந்தையின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார். இந்நிகழ்வு கடலூரில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.