நக்கீரன் ஆசிரியர் கைது குறித்து திண்டுக்கல்லைச் சேர்ந்த பிரபல பட்டிமன்ற நடுவரும், தி.மு.க.வின் முக்கிய வி.ஐ.பி.யுமான திண்டுக்கல் ஐ.லியோனி, ’’அருப்புக்கோட்டையைச் சேர்ந்த பேராசிரியர் நிர்மலா தேவி கல்லூரி மாணவிகளிடம் வாட்சப் மூலம் அவதூறாக பேசியதின் மூலம் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இப்படி கைது செய்யப்பட்ட நிர்மலா தேவி கவர்னருடன் நேரடியாக தொடர்பு இருப்பதாகவும், அவரே கவர்னரின் பெயரை உச்சரித்து இருக்கிறார். இது பொதுமக்கள் அனைவருக்கும் தெரியும். அது உண்மையும் கூட. அப்படி அந்த உண்மையை பத்திரிக்கை வாயிலாக நக்கீரன் ஆசிரியர் கோபால் செய்தி வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார். அப்படி உண்மை செய்தியை வெளியிட்ட ஆசிரியரை கைது செய்ததை வன்மையாக கண்டிக்கிறேன். அந்த அம்மா ஆட்சியில் கூட வழக்குப் பதிவு செய்து விட்டுத்தான் கைது செய்ய நடவடிக்கை எடுத்திருப்பதை பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த எடப்பாடி ஆட்சியில் வழக்கே போடாமல் கைது செய்திருப்பதை பார்த்தால் அந்த அம்மாவையே எடப்பாடி மிஞ்சிவிட்டார். இப்படிப்பட்ட ஆட்சி அழிவு பாதைக்குத்தான் சென்று கொண்டிருக்கிறது.
அ.தி.மு.க. ஆட்சி வரும்போதெல்லாம் கருத்து சுதந்திரத்திற்கு பெரும் நெருக்கடி தான் இருந்து வருகிறது. அதையெல்லாம் நக்கீரன் ஆசிரியர் கோபால் உடைத்து எரிந்து கொண்டு தான் வருகிறார். இது ஒன்னும் நக்கீரன் கோபாலுக்கு பெரிய விசயம் இல்லை. இருந்தாலும் மேடையில் பேசுவது பத்திரிக்கையில் எழுதுவதும் கலை நிகழ்ச்சிகளில் பாட்டு மூலம் சொல்வதும் இப்படி பல முனைகளில் பத்திரிக்கையாளர்களும், ஊடகங்களுக்கும் பெரும் தாக்குதலை தந்து வருவதால் மக்கள் மத்தியில் எந்த ஒரு விமர்சனமும் சொல்லக் கூடாது என்கிறார்கள். அப்படி ஒரு சர்வாதிகார ஆட்சியை நடத்தி வருகிறார். இப்படிப்பட்ட சர்வாதிகார ஆட்சி அழிவுப் பாதைக்கு தான் கொண்டு செல்லும். கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்ட எந்த ஒரு நாட்டிலும் அந்த ஆட்சியை மக்கள் தூக்கி எரிந்து விடுவார்கள். அப்படிப்பட்ட நிலைதான் தற்போது இருந்து வருகிறது. இந்த ஆட்சியையும் மக்கள் கூடியவிரைவில் தூக்கி எரிய போகிறார்கள்!’’என்றார்.