Skip to main content

“ராமதாஸும்,  அன்புமணி தான் முதலில் மன்னிப்பு கேட்க வேண்டும்” -  வீரத்தமிழர் உரிமை பாதுகாப்பு சங்கம்

Published on 27/11/2024 | Edited on 27/11/2024
Ramadoss and Anbumani should apologize first

சென்னை கண்ணகி நகரில் நேற்று முன்தினம்(25-11-24) ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினிடம்  செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, ‘அதானி ஊழல் தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை கொடுத்திருக்கிறாரே, உங்களின் பதில் என்ன ?’ என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த தமிழக முதலமைச்சர், “அவருக்கு வேறு வேலை இல்லை; தினமும் ஒரு அறிக்கை கொடுப்பார்” என கூறிவிட்டுச் சென்றார். 

முதல்வரின் இந்த பதில், பாமகவினரை கொந்தளிக்க வைத்திருக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி வருகிறார். அவரைத் தொடர்ந்து, சிமான் உள்ளிட்ட சில அரசியல் கட்சித் தலைவர்களும் முதல்வரின் பதிலுக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் முதல்வருக்கு ஆதரவாக வீரத்தமிழர் உரிமை பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் சிதப்பரம் கோ.வி.மணிவண்ணன் கருத்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மன்னிப்பு கேட்க வேண்டியது ராமதாஸ்தான்;  ‘உன் அப்பன் வீட்டுச் சொத்தையா கேட்கிறோம்...’ என்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரைப் பார்த்து 86 வயது முதியவர் பேசலாமா?  ‘அவருக்கு வேலையில்லை...’ என்று முதலமைச்சர் சொன்னது மட்டும் தரக்குறைவான பேச்சா?  உண்மை அதுதானே?  அதிமுகவுடன்  கூட்டணி வைப்பது தாயுடன் உறவு கொள்வதற்கு சமம் என்று   மருத்துவர் ராமதாஸ் கூறினாரே?  இது என்ன புனிதமான வார்த்தையா?   

பின்னர் அதிமுகவுடன் கூட்டணி வைத்தாரே?  இது கேவலமான செயல் அல்லவா?  மருத்துவர் ராமதாஸை ஜெயலலிதா சிறையில் அடைத்தபோது, மன்னிப்பு கேட்டீர்களே? அப்போது இந்த அன்புமணி ராமதாஸ் எங்கே இருந்தார்?  அப்போது இவர்களுக்கு அவமானம் ஏற்படவில்லையா?  ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது, மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு செய்ததாக வழக்கு தொடரப்பட்டதே?  அதற்கு என்றைக்காவது அன்புமணி பதில் சொல்லியிருக்கிறாரா?  அதிமுகவுடன் கூட்டணி சேரும் போதெல்லாம் பல கோடிகளை பேரம் பேசி பெற்றதாக பாமக மீது குற்றச்சாட்டு எழுந்ததே?  அப்போதெல்லாம் உங்களுக்கு அவமானம் ஏற்படவில்லையா ?  அறிக்கை அரசியல் மட்டுமே நடத்திக் கொண்டிருக்கும் நீங்கள் வன்னிய மக்களுக்காக செய்த நல்லவற்றை பட்டியலிட முடியுமா?  தேர்தல் நேரத்தில் பேரம் பேசவும், அதில் பலன் அடைய மட்டும் வன்னிய மக்களை பகடைக்காயாக பயன்படுத்துகிறீர்களே?  இது உங்களுக்கு வெட்கமாக இல்லையா?  கடந்த மக்களவை தேர்தலில் கடைசி வரை அதிமுகவுடன் பேரம் பேசிவிட்டு, இரவோடு இரவாக பாஜகவுடன் கூட்டணி அமைத்தீர்களே?  இது எதற்காக என்று உங்களால் விளக்க முடியுமா அன்புமணி?  இது கேவலமான விஷயம் என்று இன்றுவரை உங்களுக்கு தெரியவில்லையா?  

வேலையில்லாமல் ராமதாஸ் அறிக்கை விடுகிறார் என்பது  உண்மை தானே. மக்களின் வாயிலிருந்து வரும் வார்த்தைகளும் இதுதானே?   இதில் எங்கே தரக்குறைவு வந்தது?  வன்னியர் சமூக  மக்களுக்கு துரோகம் செய்வது, சாதிய மோதல்களை ஏற்படுத்துவது போன்றவற்றுக்கு நீங்களும், உங்கள் தந்தையும் தான் முதலில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்” என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.   

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ராமதாசை வேலை இல்லாதவர் என கூறினார் என பாட்டாளி மக்கள் கட்சியினர் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். சில இடங்களில் பேருந்து கண்ணாடிகளை உடைத்து பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினார்கள். இந்த நிலையில் ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு எதிராக எதிர்ப்பு குரல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

சார்ந்த செய்திகள்