Skip to main content
Breaking News
Breaking

லெபனான் - இஸ்ரேல் போர் விவகாரம்; முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமெரிக்க அதிபர்!

Published on 27/11/2024 | Edited on 27/11/2024
US  President made an important announcement Lebanon Israel Affair 

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் போர் நடைபெற்று வருகிறது. இதனிடையே இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸுக்கு ஆதரவாக அண்டை நாடான லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பு களமிறங்கியுள்ளது. அந்த அமைப்பு இஸ்ரேல் மீது குண்டுவீசித் தாக்குதல், ட்ரோன் விமானங்கள் மூலம் தாக்குதல் என இஸ்ரேலுக்கு எதிரான போர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக இஸ்ரேல் லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினரைக் குறித்து வைத்துத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையே தொடர்ந்து போர் நிறுத்தம் செய்யுமாறு ஹமாஸ் அமைப்பையும், இஸ்ரேலையும் அமெரிக்கா வலியுறுத்தி வந்தது.

இருப்பினும் இரண்டு பேரும் அதற்குச் செவிசாய்க்காமல் தொடர்ந்து தாக்குதலை நடத்திக்கொண்டே இருக்கின்றனர். அதே சமயம் அமெரிக்கத் தேர்தல் காரணமாக அச்சமயத்தில் ஒரு வாரக் காலமாக லெபனானின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடைபெறாமல் இருந்து வந்தது. இதனையடுத்து இஸ்ரேலுக்கும், ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் இடையே இரண்டாம் கட்ட தரைவழி தாக்குதல் சம்பவம் தொடங்கியது. இந்நிலையில் லெபனான் - இஸ்ரேல் எல்லையில் நடக்கும் போர் நாளை (28.11.2024) முடிவுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இன்று, மத்திய கிழக்கில் இருந்து எனக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. லெபனான் மற்றும் இஸ்ரேல் பிரதமர்களிடம் பேசியுள்ளேன்.

மேலும்  இது தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்றை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையிலான பேரழிவுக்கான மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்காவின் முன்மொழிவை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். இன்று எட்டப்பட்ட ஒப்பந்தத்தின்படி, லெபனான்-இஸ்ரேல் எல்லையில் நடக்கும் சண்டை நாளை முடிவுக்கு வருகிறது. இஸ்ரேல் மற்றும் லெபனான் மக்களுக்கு நீடித்த பாதுகாப்பை போர்க்களத்தில் மட்டும் அடைய முடியாது.

அதனால்தான் போர் நிறுத்தத்தை உருவாக்க இஸ்ரேல் மற்றும் லெபனான் அரசாங்கங்களுடன் இணைந்து பணியாற்றுமாறு எனது குழுவை நான் அறிவுறுத்தினேன். வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர லெபனான் மற்றும் இஸ்ரேல் தலைவர்களின் துணிச்சலான முடிவை நான் பாராட்டுகிறேன். இதன் மூலம் அங்கு அமைதி சாத்தியம் என்பதை நினைவூட்டுகிறது. அங்கு அமைதி நிலவும் வரை, நான் அதை அடைய ஒரு கணம் கூட பணியாற்றுவதை நிறுத்த மாட்டேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்